முட்டை மற்றும் பனீர் இரண்டிலுமே அதிகமான புரதச்சத்து இருக்கிறது. புரதச்சத்து உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் தசை வளர்ச்சி, எலும்பு வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவை கிடைக்கிறது. எனினும், இரண்டில் எது சிறந்தது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
சாதாரணமாக ஒரு முட்டையில் 6 கிராம் புரதம் உள்ளது. முட்டையில் புரதம் மட்டுமில்லாமல், உடலுக்குத் தேவையான அமினோ ஆசிட், வைட்டமின் B12, வைட்டமின் டி மினரலான செலினியம் போன்றவையும் உள்ளன. 100 கிராம் பனீரில் 20 கிராம் புரதம் இருக்கிறது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி போன்றவை உள்ளன. இது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. பனீர் Vegetarian dietஐ பின்பற்றுவோருக்கு ஏற்றதாகும்.
முட்டை சுலபமாக ஜீரணம் ஆகக்கூடியது. முட்டையில் உள்ள புரதத்தை உடல் உறிஞ்சிக் கொள்வதன் மூலமாக தசை வளர்ச்சியை மேம்படுத்தும். பனீரில் அதிக அளவில் புரதச்சத்து இருந்தாலும், Lactose intolerance போன்று இருக்கும் சிலருக்கு இதை ஜீரணிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
முட்டையில் உள்ள Choline மூளை ஆரோக்கியத்திற்கு, ஞாபக சக்தி, கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றை அதிகரிக்க உதவுகிறது. பனீரில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
உடலுக்குத் தேவையான ஒன்பது அமினோ ஆசிட் முட்டையில் இருக்கிறது. இதுவே பனீரில் புரதம் அதிகமாக இருந்தாலும், அமினோ ஆசிட் கிடையாது. எனவே, பனீரை மற்ற தானியங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது தேவையான அமினோ ஆசிட் உடலுக்குக் கிடைக்கிறது.
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது இதய சம்பந்தமான பிரச்னைகளைக் குறைக்கிறது. முட்டையில் அதிக ஊட்டச்சத்தும், குறைவான கொலஸ்ட்ராலும் உள்ளதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல், உடல் எடை குறைக்க டயட்டில் முட்டையை சேர்த்துக் கொள்ளலாம்.
பனீரில் செலினியம் உள்ளதால் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் பி2 சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
பனீர் அல்லது முட்டை இரண்டுமே புரதச் சத்தை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த சாய்ஸ் ஆகும். எனினும், ஊட்டச்சத்து, உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இது மாறுபடுகிறது. உடனடியாக புரதத்தை எடுத்துக்கொள்ள முட்டையை தேர்வு செய்யலாம். பால் மற்றும் வெஜிடேரியன் டயட் பின்பற்றுபவர்களுக்கு பனீர் நல்ல தேர்வாகும்.