மகாபாரதப் போர் நடைபெறும் முன் கிருஷ்ணர், கர்ணனை சந்தித்து அவரது பிறப்பு ரகசியத்தை கூறி, அவர் பாண்டவர்களில் மூத்தவர் என்றும் குந்தியின் மைந்தன் என்றும் கூறினார். போர் முடிந்ததும் அஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியாக கர்ணனுக்கு முடி சூட்டப்படும் என்றும் இதற்கு தர்மம் அறிந்த யுதிஷ்டிரன் நிச்சயம் ஒப்புக் கொள்வான், மூத்தவன் அரசாள்வது தானே தர்மம் என்றும், "அதனால், நீ உன் சகோதரர்களின் பக்கம் நிற்க வேண்டும். அதர்மம் செய்த துரியன் பக்கம் நிற்காதே. தர்மத்தை கடைப்பிடி" என்றும் கூறினார்.
அதற்கு கர்ணன் கிருஷ்ணரிடம் தன்னைப் பற்றி வருந்தி கூறியது:
"எது தர்மமாகும் கண்ணா? என் தாய் நான் பிறந்தவுடன் என்னைப் பற்றி சிந்திக்காமல் ஆற்றில் விட்டார். என் தந்தையான சூரியன் என்னை காக்க வரவில்லை. ராதையின் மைந்தனாக வளர்ந்தேன். நான் பிறப்பறியாதவன் என்று ஊர் கேலி பேசியது. நான் எப்போதும் ராதையின் மைந்தன் தான். குந்தியின் மகனாக இருக்க விரும்பவில்லை. துரோணர் நான் சத்திரியன் இல்லை என்று வித்தை கற்றுத்தர மறுத்தார். பரசுராமர் நான் சத்ரியன் என்று எனக்கு கற்ற தந்த வித்தையை மறக்க சாபம் கொடுத்தார். நான் யார்? அறியாமல் நான் விட்ட அம்பு ஒரு பசுவினை கொன்றது. அதன் உரிமையாளர் நான் ஒருநாள் உதவியின்றி தவித்து இறப்பேன் என்று சபித்தார். திரௌபதி சுயம்வரத்திலே என்னை தேரோட்டியின் மகன் என்று இழித்து அவையை விட்டு வெளியேற்றினாள். என்னை பெற்ற தாய் குந்தி கூட தனது மற்ற ஐந்து மகன்களை காக்க மட்டுமே என்னை சந்தித்து எனது தாய் என்று அறிமுகம் செய்து வரம் கேட்டார். இப்படி எல்லோராலும் நான் வஞ்சிக்கப்பட்டேன். ஆதரவற்ற நேரத்தில் எனக்கு ஆதரவளித்து அன்பு காட்டிய துரியோதனனுக்காக போர் புரிவது தான் எனது தர்மம்."
அதற்கு மறுமொழியாக கிருஷ்ணன் கர்ணனிடம் உரைத்தது:
"கர்ணா நான் பிறந்ததே ஒரு சிறையில் தான். நான் பிறந்தவுடன் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டேன். நான் வளர்ந்ததோ மாட்டு கொட்டகையில் . கல்வி கற்கும் வயதில் நான் மாடு மேய்த்தேன்.16 வயதில் தான் கல்வி பயில ஆரம்பித்தேன். நான் விரும்பிய ராதையை என்னால் மணக்க முடியவில்லை. என் தாய் மாமனே என்னைக் கொல்ல முயற்சி செய்தான். தினமும் என் வாழ்க்கையில் போராட்டமாய் இருந்தது. தினமும் மரணம் என் தலைக்கு மேல் தொங்கியது. என் மக்களைக் ஜராசந்த்திடனிமிருந்து காப்பாற்ற நான் மதுராவிலிருந்து துவாரகைக்கு என் மக்களோடு வந்தேன். நான் ஒரு கோழை. துரியன் போரில் வென்றால் உனக்கு நாடும் புகழும் செல்வமும் கிடைக்கும். பாண்டவர் உடன் சேர்ந்து போரிட்டால் எனக்கு என்ன கிடைக்கும்? எனக்கு போருக்கு காரணமானவன் என்ற பழி மட்டுமே கிடைக்கும் . ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பம் , துன்பம் , துரோகம் , வலி , வேதனை அவமானம் எல்லாம் இருக்கும். நாம் கடந்த கால செயல்களை பற்றி பேசாமல் தர்மத்தின் பக்கம் நிற்பதே நியாயமாகும்."
இதுவே கர்ணனுக்கு கிருஷ்ணர் செய்த உபதேசம்!