ஈசன் கட்டளைப்படி இயங்கும் குபேரன் மற்றும் சங்கநிதி பதுமநிதி!

சங்கநிதி பதுமநிதி
சங்கநிதி பதுமநிதி

க்தர்கள் எவ்வளவு செல்வம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்கும் மகாலட்சுமிக்கு உதவியாக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர் குபேரன். பல வருடங்கள் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததின் பலனாக சிவபெருமானின் அருளை இவர் பெற்றார். மகாலட்சுமியின் செல்வங்களை பாதுகாக்கும் காவலராக சிவபெருமானால் நியக்கப்பட்டு மகாலட்சுமியால் ‘குபேர’ பட்டம் பெற்றார்.

ஈசனின் கட்டளைப்படியும் மகாலட்சுமியின் ஆசியுடனும் குபேரன் ஒரு நல்ல நாளில் செல்வத்தை நிர்வகிக்கும் குபேர பதவியை ஏற்றார். அதன்பின் இன்றளவும் அவர் பெயர் குபேரர் என்பது மாறி, குபேரன் என்றே ஆயிற்று. குபேரப் பதவியை அடைந்ததனால் அவருக்கு திருமகளின் வெண்சங்கும் கலைமகளின் வெண்தாமரையும் வரமாகக் கிடைத்தன. அந்த இரண்டையும் இரு தேவகணங்களாக்கி தன்னுடைய நிர்வாகப் பணிக்கு துணையாக வைத்துக் கொண்டார் குபேரன்.

வெண்சங்காய் வந்த தேவகணத்திற்குப் பெயர் சங்கநிதி. இவர் செல்வத்தை அருள்பவர். வெண்தாமரையாய் வந்த தேவகணத்திற்குப் பெயர் பத்மநிதி. இவர் அறிவினை அருள்பவர். ஒன்பது வகையான நிதிகளுள் (நவ நிதிகள்) சங்கநிதிக்குரிய தெய்வமாக சங்கநிதி உள்ளார். இவரை சங்க லட்சுமி எனவும் அழைக்கின்றனர். சங்கநிதி தன்னுடைய கைகளில் செல்வச் செழிப்பினைக் குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கினை வைத்துள்ளார். கோயில்களின் வாயில்கள் சிலவற்றில் ஒருபுறம் சங்கநிதி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பதுமநிதி புடைப்புச் சிற்பம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
நிம்மதியான தூக்கத்துக்கு நல்லதாக சில ஆலோசனைகள்!
சங்கநிதி பதுமநிதி

சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகியன ஒன்பது நிதிகளாகும். இவற்றை குபேர சம்பத்துகள் என அழைக்கின்றனர். சங்கநிதி பதுமநிதி என இரு நிதிகளும் எப்போதுமே ஒருசேர இருக்கின்றனர். பெரும்பாலும் எல்லா சிவன் கோயில்களிலுமே இந்த இருவரின் சிற்பங்களும் கோபுரத்திலோ சற்று உயரமான இடத்திலோ அமைக்கப்பட்டிருக்கும். அறிவுச் செல்வமாக இருந்தாலும், பொருள் செல்வமாக இருந்தாலும் கேட்பதைக் கொடுப்பவர் ஈசன்.

கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் உணர்வுகளை மேலிருந்து கவனித்து பக்தர்களின் நடை உடை பாவணைகளை ஆராய்ந்து பக்தர்களுக்கு இறைவன் மீது உள்ள நம்பிக்கையையும் அந்த பக்தரின் தேவையையும் அளவிட்டு நிர்ணயம் செய்து எவ்வளவு அறிவுச் செல்வத்தையும் எவ்வளவு பொருள் செல்வத்தையும் பக்தர்களுக்கு அளிக்கலாம் என முடிவு செய்து குபேரனிடம் தருவதுதான் இவர்களின் பணி.

அதன்பின் ஈசனின் உத்தரவுப்படி அந்த பக்தர்களுககு செல்வங்களை அளிக்க வேண்டியதுதான் குபேரரின் பணி. இவர்களின் முக்கியத்துவம் உணர்ந்துதான் கருவூர் தேவர் தன்னுடைய பிரியமான இராஜராஜ சோழனை, எப்போது பெரிய கோயிலுக்குச் சென்றாலும் மதிலின் வடமேற்கே உள்ள அணுக்கன் வாயில் வழியாக உள்ளே செல்லச் சொல்வாராம். அந்த வாயிலில்தான் சங்கநிதி, பத்மநிதி சிற்பங்கள் உள்ளன. இதன் காரணமாகத்தான் கோயிலுக்கு வரும்போது குளித்து விட்டு தூய ஆடை அணிந்து, வம்பு தும்பு பேசாமல் இறை சிந்தனையுடன் பக்தியுடன் கோயிலை வலம் வர வேண்டும் என்று முன்னோர்கள் வரையறை செய்திருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com