
காலமெல்லாம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, எல்லா வயதினருக்கும் பாலூட்டும் பசுக்களையும் மற்றும் எருமை, களைகளையும் கொல்ல வேண்டாம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? இதில் மதம் என்ன? ஜாதி என்ன? பாலூட்டுவதால் பசு இந்துக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் கூட அன்னைதான். பசுவை (எருமைகள் மற்றும் காளைகள் உட்பட) கொல்லாமல் இருப்பது ஒரு மனிதாபிமான செயல். மதங்களை ஒருபுறம் தள்ளுங்கள். பசு தரும் பாலை காலம் காலமாய் குடித்து விட்டு, கடைசியில் அதை கசாப்புக் கடைக்கு அனுப்புவது ஒரு நன்றிகெட்ட செயல்.
வாழ்க்கையில் நாம் பலரையும் மிகவும் மதித்து வணங்குகிறோம். ஆனால், அவர்கள் சொன்னதை பூரணமாக வாழ்க்கையில் கடைபிடிப்பதில்லை. இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். மகாகவி பாரதியாரை எடுத்துக்கொள்வோம். ‘ஓடி விளையாடு பாப்பா’ பாட்டில் மூன்றாவது வரியிலேயே ஒரு விஷயத்தைச் சொல்கிறார். ‘பாலைப் பொழிந்துத் தரும் பாப்பா, அந்தப் பசு மிக நல்லதடி பாப்பா’ என்கிறார்.
அடுத்ததாக, கண்ணகியை எடுத்துக்கொள்வோம். மதுரையை எரிக்க அவர் சபித்தபோது, ‘பெண்கள், குழந்தைகள் மற்றும் வயோதிகர்களோடு பசுக்களையும் கன்றுகளையும் தொட வேண்டாம்’ என்று அக்னி பகவானிடம் கேட்டுக்கொண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக திருவள்ளுவர் கூறுவதைக் கேளுங்கள். மிருகங்களைக் கொல்லாமை பற்றி எத்தனை ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார்.
அவருக்கு வானுயர சிலை வைத்து என்ன பயன்? மகான்களின் போதனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றால், அவர்களின் வாய்மொழி வார்த்தைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும். நமக்கு சரியாக வருவதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை நம் புலனின்ப வேட்கைகளுக்குத் தடையாக இருக்கிறது என்று கண்டும் காணாது இருந்து விடுவது போன்ற செய்கைகள் சரியானதல்ல. பசு வதை மட்டுமல்ல, புலால் உண்பதையும் நாம் தவிர்ப்பது நல்லது.
பசுவை கொல்லாமல் இருப்பதில் ஆரம்பித்து, புலால் உண்ணும் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்தி விடுவோம். புலால் உண்ணாத மனிதனை எல்லா மிருகங்களும் கையெடுத்துக் கும்பிடும் என்ற வள்ளுவரின் திருக்குறளை வாசித்திருக்கிறீர்களா?
‘பசுக்களுக்கு மட்டும் என்ன தனி அன்பு, பரிவு?’ என்று இந்துக்களில் கூட சிலர் கேட்கிறார்கள். நமக்குப் பல வகையான உறவுகள் இருந்தாலும், தாய்க்கு மட்டும் தனி இடம் தருகிறோம் இல்லையா? அது மாதிரிதான், தாய்க்கு நிகரான ஸ்தானத்தை கோ மாதாவிற்குத் தருகிறோம். நம்முடைய தாய் நமக்கு அதிகபட்சம் இரண்டு வருடம் பாலூட்டுகிறாள். ஆனால், பசுக்கள் நாம் வயது முதிர்ந்து சாகும் வரை பாலூட்டுகிறாள். மேலும், கோ மாதாவை ரட்சிக்க வேண்டும் என்று மிகவும் பழைமை வாய்ந்த சனாதன தர்மம் சொல்கிறது. பாரம்பரிய சாஸ்திரங்களின்படி நடப்பது அந்தந்த நாட்டுக்கு நல்லது. பசு வதைக்கு ஒரே ஒரு வருடம் விடுமுறை அளித்துப் பாருங்களேன். அதனால் நாடு எத்தனை சுபிட்சம் பெறுகிறது என்பது தெரியவரும்.