
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் இம்மாதம் ஜூலை 14ந் தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அத்திருக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வரலாறும், சிறப்புகளும்: முருகன் கோயில் என்றவுடன் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில்தான். வாழ்க்கையில் திருப்பம் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குடைவரை கோயிலான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆரம்ப காலத்தில், திருப்பரங்குன்றம் தற்போது உள்ள கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள தென்பரங்குன்றம் குடைவரைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. இந்தக் கோயில் சேதமடைந்ததால், கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்கு திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கின்றனர். எனவே, ‘திருப்பிய பரங்குன்றம்’ என்றழைக்கப்பட்ட இவ்வூர், ‘திருப்பரங்குன்றம்’ என்று மருவியது. அருணகிரிநாதர் திருப்புகழில், ‘தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை பெருமாளே’ என்று பாடியிருக்கிறார்.
இந்தக் கோயிலில் சிவன், நின்ற கோலத்தில் கிழக்கு திசை நோக்கியுள்ளார். இவருக்குப் பின்புறத்தில் நந்தி நின்ற நிலையில் உள்ளது. அம்பிகை இல்லை. அருகில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தெற்கு திசை நோக்கி நின்று காட்சி தருகிறார். ஆனால், மயில் வாகனம் இல்லை.அவருக்கு வலது புறத்தில் நடராஜர் அருள்புரிகிறார். இவரது வலது மேற்பகுதியில் பஞ்சமுக விநாயகர் காட்சி தருகிறார்.
பஞ்சமுக விநாயகரைச் சுற்றிலும் மேலும் எட்டு விநாயகர்கள் காட்சி தருகின்றனர். எண் திசையைக் குறிக்கும் விதமாக இந்த விநாயகர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இக்கோயில் தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சிவ தலமான திருப்பரங்குன்றம்: ஒரு வதம் நிகழும்போது வதம் நிகழ்த்தியவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்ளும். இதன் காரணமாக மனிதப் பிறவியில் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் தோல்விகளைச் சந்திக்க நேரிடும். மகிஷாசுரன் என்ற அரக்கனை பார்வதி தேவி துர்கை வடிவம் எடுத்து வதம் செய்தார். கொன்றவர் கடவுளாக இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷம் அவரைத் தொற்றி கொண்டது. தோஷத்தில் இருந்து விடுபட சிவபெருமானிடம் துர்கை ஆலோசனை கேட்டார்.
அதற்கு சிவபெருமான் லிங்க வடிவத்தில் தான் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று தவமிருக்க அறிவுறுத்துகிறார். தவத்தின் பயனால் கர்ம வினை அகன்றவுடன் காட்சியளிப்பதாக சிவபெருமான் கூறுகிறார். இதையடுத்து, பார்வதி தேவி (துர்கை) திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை சுற்றி கிரிவலம் சென்று அடிவாரத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து தவத்தில் மூழ்கினார். இதையடுத்து பார்வதி தேவியின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. தற்போதுள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் இதற்கு, ‘தேவி லிங்கம்’ எனப் பெயர். சோமாஸ்கந்தர் வடிவத்தில் சிவபெருமான் காட்சியளித்து இருக்கிறார். ஆரம்பத்தில் திருப்பரங்குன்றம் சிவ தலமாக விளங்கியுள்ளது.
ஒரு சமயம் சிவபெருமான், பார்வதி தேவியிடம் மந்திர உபதேசம் கொடுத்தபோது மடியில் அமர்ந்தபடி அதை முருகன் கேட்டுள்ளார். முறையாக மந்திர உபதேசம் பெறாதது தவறு என உணர்ந்த முருகன், தோஷத்தை நீக்க திருப்பரங்குன்றம் சென்று தவம் இருக்கிறார். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் குடிகொண்ட இடம் திருப்பரங்குன்றம். அதேபோல, தெய்வானையை மணந்த இடமும் திருப்பரங்குன்றம். இதனால் சிவ தலமாக இருந்த திருப்பரங்குன்றம் முருகனின் முதற்படை விடாக மாறியது.
திருப்பரங்குன்றம் கோயில் சிறப்புகள்: பழந்தமிழ் நூலான அகநானூறு நூலில் திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. அதில் வருடம் முழுவதும் இடைவிடாது பல்வேறு விழாக்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தன எனவும், அந்த விழாக்களில் மதுரையில் இருந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள் என்றும் அந்த நூலில் கூறப்பட்டு உள்ளது.
சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முகலாயப் படையெடுப்பு, பிரிட்டீஷ் ஆட்சியில் தமிழகத்தின் ஏராளமான கோயில்கள் சிதைக்கப்பட்டாலும் பூசாரி ஒருவரின் உயிர் தியாகத்தால் திருப்பரங்குன்றம் கோயில் தப்பியது.
முருகனின் அறுபடைகளின் ஐந்து வீடுகள் மலை மற்றும் கடல் சார்ந்த பகுதியில் உள்ளன. திருப்பரங்குன்றம் மட்டுமே நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் முருகனின் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படும்.