
காசி விஸ்வநாதர் ஆலயம் ஒரு காலத்தில் இஸ்லாமியர்கள் வசம் இருந்தது. ஆனாலும், பூஜை எதுவும் இல்லாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் கோயிலை தம்மிடம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார் குமரகுருபரர். நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழிபெயர்ப்பாளர் மூலம் குமரகுருபரர் சொன்னதைக் கேட்டு அகம்பாவமாக, ‘நீங்கள் என் மொழியில் பேசுங்கள்’ என்று கூறி எழுந்து போனார். அந்த சபையே இவரை எள்ளி நகையாடியது. மறுநாள் விடிந்தது. காசி தேசத்து ஆன்றோர்கள் அந்த சபையில் கூடினர். ‘எங்கே அந்தக் கிழவர்?’ என்று நவாப் கேட்க, ‘அவர் அரபி படிக்கப் போயிருக்கிறார்’ என்றார் ஒருவர்.
‘அடடே, அவருக்கு வயதாகிவிட்டது. இறைவனிடம்தான் அரபி படிக்க வேண்டும்’ என்றான் ஒருவன். ஆளாளுக்கு குமரகுருபரரை கேலி பேச, நவாப்பால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்போது அந்த சபையின் வாசலில் சிங்கத்தின் கர்ஜனை குரல் கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும், கோரைப்பற்களுடனும் சிவந்த கண்களும் கொண்டு ஒரு முதிர்ந்த ஆண் சிங்கம் சபையில் நுழைந்தது.
குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது கால்களை தொங்கவிட்டு அதன் பிடரியை பிடித்து அமர்ந்திருந்தார். அவரே ஒரு ஆண் சிங்கம் போல் காட்சி தந்தார். அவரது நரைத்த முடியும் தலைப்பாகையும் வயிறு வரை நீண்ட தாடியும் அவரை சிங்கம் போல் காட்டின. அந்த ஆண் சிங்கத்தைத் தொடர்ந்து 3 பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் அங்கே வந்தன. இதைக் கண்ட நவாப்பின் சபை கலைந்து ஓடியது. நவாப் தனது வாளை உருவி, ‘என்ன இது?’ என்று கத்தினான். அதற்கு குமரகுருபரர், ‘நேற்று நீர் எனக்கு அமர ஆசனம் தரவில்லை. எனவே, ஆசனம் எடுத்து வந்தோம்’ என்றார்.
‘இதுவா ஆசனம்? இது சிங்கமல்லவா?’ என்று கேட்க, ‘ஆமாம்… நீ அமர்ந்து இருப்பது பொம்மை ஆசனம். பொம்மையின் மீது அமர்ந்த பொம்மை நீ. நான் உயிருள்ள, உயிர் மீதுள்ள உயிர் நான்’ என்றார் குமரகுருபரர். சிங்கம் நவாப் அருகே வந்தது. நவாப் கத்தியை கீழே போட்டுவிட்டு அலறினான்.
துதி பாடுகின்ற கூட்டம் ஓடி விட்டதால் ஆபத்தில் காக்க யாரும் இல்லை. குமரகுருபரர் சிங்கங்களை தனது அருகே அழைத்தார். அவர் காலடியில் சிங்கங்கள் உட்கார்ந்தன. நவாப் அவருக்கு சலாம் செய்தான். ‘நான் தெரியாமல் பேசி விட்டேன். மன்னிப்பு கேட்கிறேன்’ என்றான்.
அதோடு, ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டான்.
‘காசி விஸ்வநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் ஒன்று கட்ட அனுமதி தர வேண்டும்’ என்றார் குமரகுருபரர். ‘நீங்கள் என் மொழியில் பேசினால் தருகிறேன் என்றேனே’ என்று நவாப் கூற, அதற்கு அவர், ‘நான் உன் மொழியில்தான் பேசுகிறேன். நீதான் எனக்கு பதில் சொல்கிறாயே’ என்றார். ஆமாம் பாரசீகத்தில்தான் பேசுகிறீர்கள். இது எப்படி சாத்தியமாயிற்று?’ எனக் கேட்டான். ‘எல்லாம் இறையருள். இறை எல்லோருக்கும் பொது. எல்லா மொழியும் இறைவன் காலடியில் தூசு’ என்றார்.
உடனே நவாப், ‘காட்டுச் சிங்கங்களையே காலடியில் போட்டு வைத்திருக்கும் உங்களுக்கு இந்த நவாப் எம்மாத்திரம். காசி விஸ்வநாதர் கோயில் உங்களுடையது. அதன் சாவி உங்களிடம் தரப்படும்’ என்றான். இப்படித்தான் காசி விஸ்வநாதர் கோயில் நமக்குக் கிடைத்தது.