
வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தில் மட்டும் சிறந்தவரில்லை, தெய்வ பக்தியிலும் சிறந்தவர் ஆவார். வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகனின் மீது தீவிரமான பக்தி கொண்டிருந்தார். திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு நைவேத்தியம் படைக்கப்பட்ட பிறகு தான் கட்டபொம்மன் சாப்பிடவே ஆரம்பிப்பார். அவருடைய தீவிரமான பக்தியை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வீரபாண்டியனின் கோட்டை பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்திருந்தது. அங்கிருந்து திருச்செந்தூருக்கு கிட்டத்தட்ட 65 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இப்போது இருப்பது போல தகவல் தொடர்பிற்கு எந்த ஒரு கருவியும் கிடையாது. அப்படியானால் எப்படி கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகனுக்கு நைவேத்தியம் படைத்ததை தெரிந்துக் கொண்டார் தெரியுமா?
திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தில் ஏழாவது மாடத்தில் மிக பிரம்மாண்டமான வெண்கல மணியைக் கட்டித் தொங்க விட்டார் கட்டபொம்மன். அதைப்போல திருச்செந்தூர் முதல் பாஞ்சாலங்குறிச்சி வரை ஒவ்வொரு இரண்டு கிலோ மீட்டருக்கும் ஒரு கல் மண்டபம் அமைத்து அதற்குள் வெண்கல மணியை பொருத்தி ஒவ்வொரு கல் மண்டபத்திற்கும் பணி ஆட்களை நியமித்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்து முருகனுக்கு நைவேத்தியம் படைக்கப்பட்டதுமே திருச்செந்தூர் ராஜ கோபுரத்தில் ஏழாவது மாடியில் உள்ள வெண்கல மணி அடிக்கப்படும். உடனே அந்த ஒலி பக்கத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல் மண்டபத்திற்கு கேட்கும். உடனே அந்த மண்டபத்தில் இருக்கும் வெண்கல மணியை அடிப்பார்கள்.
இப்படியே அந்த ஒலி ஒவ்வொரு மண்டபமாக சென்று கடைசியாக பாஞ்சலங்குறிச்சியை சென்றடையும். அங்கேயிருக்கும் வெண்கலைமணியை அடிக்கும் போது வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் முருகனுக்கு நைவேத்தியம் படைத்து விட்டார்கள் என்பதை அறிந்துக் கொண்டு அவர் மதிய உணவை சாப்பிடுவார்.
வீரபாண்டிய கட்ட பொம்மன் தன்னுடைய நெற்களஞ்சியங்களில் இருந்து திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலுக்கு அன்னதானம் வழங்க பல்லாயிரம் கோட்டை நெல்லை அனுப்பி வைப்பாராம். அதை எப்படி அனுப்பி வைப்பார் என்றால், அந்த ஊர் மக்கள் அந்த நெல்லை காவடியாக சுமந்து சென்று திருச்செந்தூர் கோவிலில் சேர்ப்பார்களாம். வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தில் மட்டும் அல்ல பக்தியிலும் சிறந்தவராக விளங்கினார் என்றே சொல்ல வேண்டும்.