
என்ன உங்க பசங்க சோம்பேறிகளா இருக்காங்களா? அப்ப இந்த தலத்துக்கு வாங்க . அப்புறம் பாருங்க மாற்றத்த...
ஊழி காலத்தில், பிரளய வெள்ளம் ஏற்பட்ட பொழுது, பிரம்மாவானவர் ஒரு அமுதக் குடத்தை மிதக்க விட்டார். சிவபெருமானானவர், ஒரு வேடன் ரூபம் கொண்டு கையிலையிலிருந்து அந்த அமுதக் கலசத்தை உடைத்தார். குடத்தில் இருந்த அந்த அமுதமே மகா மகக் குளமாக வடிவெடுத்தது என்பதை எல்லோரும் அறிந்திருக்கிறோம்.
சிவபெருமான் வேடன் ரூபத்தில் நின்று, அந்த பாணத்தைத் தொடுத்த இடம் பாணாத்துறை எனப்படுகிறது. இந்த பாணாத்துறையானது, கும்பகோணம் கிழக்குப் பகுதியில் பக்தபுரி தெருவில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் சிவன் பாணபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
ஒருமுறை வியாச பகவான், நந்தீஸ்வரரிடமிருந்து ஒரு சாபத்தினைப் பெற்றார். அந்த சாபம் விமோசனம் பெற, வியாசர், இந்தத் தலத்திற்கு வந்து, ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, சாப விமோசனம் பெற்றார் என்று தல பெருமை கூறுகிறது. அந்த லிங்கம், வியாசலிங்கம் எனப்படுகிறது.
வங்கதேசத்தின் அரசனாக இருந்த சூரசேனனுக்கும், அவன் மனைவி காந்திமதிக்கும் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவர்கள் இருவரும் இந்தத் தலத்திற்கு வந்து சிவபெருமானை துதித்து நின்றதால், அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டியதாக கூறப்படுகிறது. மேலும் காந்திமதிக்கு இருந்த தீராத ரோகமும் இங்கு வந்த பின்பு தான் தீர்ந்ததாகவும் அறியப்படுகிறது.
சோமகலாம்பாள் என்கிற திரு நாமம் கொண்டு அருள் பாலிக்கும் பாணாத்துறை இறைவியானவள், சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை உண்டாக்குவாள் என்று போற்றப்படுகிறது, நம்பப்படுகிறது. மேலும் பொலிவில்லாமல் இருக்கும் முகத்தினைக் கொண்டவர்கள், இத் தலத்திற்கு வந்து அம்பிகையை வழிபட்டால், முகப் பொலிவைத் தருவாள் என்றும் கூறப்படுகிறது.
பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா மக திருவிழாவுக்கும், கும்பகோணத்தில் அமைந்திருக்கும் பனிரெண்டு சிவன் ஸ்தலங்களுக்கும் சம்பந்தம் உண்டு. அந்த பனிரெண்டு கோவில்களில் ஒரு கோயில் தான் இந்த பாணபுரீஸ்வரர் ஆலயம். ஆதி சிவன் கோயில் என்பதால், பாணாபுரத்தில் இருக்கும், சோமகலாம்பாள் சமேத பாணபுரீஸ்வரரை வணங்கினால், அழியாத புகழும், ஆயுள் விருத்தியும், மங்காத செல்வமும் அமையும்; சோம்பலும் நீங்கும் என்பது நிதர்சனமான உண்மை.