
நாம் கடவுளிடம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறுமா இல்லையா? என்பது நமக்கு தெரியாது. இருப்பினும் கோவிலுக்கு சென்று கடவுளிடம் கோரிக்கைகளை வைத்து வழிப்படுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால், இந்த ஒரு கோவிலில் நாம் முருகனிடம் வைக்கும் கோரிக்கைகள், நிறைவேறுமா இல்லையா என்பதை சில அறிகுறிகள் மூலமும், கனவில் வந்தும் நமக்கு முருகனே உணர்த்துவார் என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
கோடைக்கானல் அருகே வில்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது வெற்றி வேலப்பர் முருகன் கோவில். இக்கோவிலை பாண்டிய மன்னர்கள் கட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. இக்கோவில் 1000 வருடம் பழமையானதாகும்.
சிவலிங்கத்தின் மீது முருகன் நின்றிருப்பதுப் போல கோவில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முருகப்பெருமானும், சிவபெருமானும் சேர்ந்ததுப்போல சிலை அமைக்கப்பட்ட கோவில் இங்கு தான் உள்ளது என்று சொல்லப்படுகிறது.
இக்கோவிலின் வலதுப்புற மண்டபத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரும் இருக்கும் வகையில் மும்மூர்த்திகளின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சூரபத்மனை முருகன் வதம் செய்த பிறகு இங்குள்ள மூவரையும் வழிப்பட்டதாகவும் அதனால் தான் இக்கோவிலுக்கு ‘வெற்றி வேலப்பர்’ என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இக்கோவிலின் சுவர்களில் விநாயகர், காலபைரவர் ஆகியோரின் சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் வெளிப்புறத்தில் வடக்கே விநாயகர் அமர்ந்துக் காட்சியளிக்கிறார்.
இக்கோவிலில் நாம் வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுமானால் அதற்கான அறிகுறிகள் காட்டும் வகையில் வேல், சேவல் போன்ற முருகனின் ஆபரணங்களோ அல்லது வாகனமோ கனவில் வருவதாக சொல்லப்படுகிறது. பங்குனி மாதத்தில் வேலப்பர் ஊர்வலமாக கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மேலும் பழனி தண்டாயுதபாணி கோவில், கொடைக்கானலில் உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் மற்றும் கொடைக்கானலில் உள்ள வெற்றி வேலப்பர் கோவில் ஆகிய மூன்று கோலில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
இத்தகைய தனித்துவம் வாய்ந்த கோவிலிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்துவிட்டு வருவது நன்மைத் தரும்.