குறிமேடையே முருகன் கோயிலானது!

குறிமேடையே முருகன் கோயிலானது!
Aanmeegam

லைநகர் சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது வடபழனி முருகன் திருக்கோயில். திருமண முகூர்த்த நாட்களில் நிற்பதற்குக் கூட இடமில்லாத அளவுக்குக் கூட்டம் நிரம்பி வழியும் இந்த புகழ் பெற்ற திருக்கோயில் ஒரு காலத்தில் வருந்தி வருபவர்களுக்கு குறி சொல்லும் குறிமேடையாக இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அதுதான் உண்மை.

இன்று வடபழனி முருகன் திருக்கோயில் அமைந்துள்ள இடத்தில் சற்றேறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாமி நாயகர் என்பவரின் வீடு இருந்தது. அண்ணாசாமி மிகப்பெரிய முருக பக்தர். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், பழநியில் இருந்து வந்த சாது ஒருவர் கூறிய ஆலோசனைபடி, திருத்தணிகைக்குச் சென்றார். அங்கு முருகனை வழிபடும்போது, முருகனை நாவாரப் பாடி மகிழ வேண்டும் என்கிற விருப்பமும் அண்ணாசாமி நாயகருக்கு உண்டாயிற்று. ஆனால், இளமையில் கல்வி பயிலாததால் அது அவரால் முடியாமல் போனதால் அவரது மனம் ஏங்கியது.

அப்போது அவர் திடீரென, ‘முருகா முருகா’ எனக் கூவிக் அழைத்து தமது சாவிக்கொத்தில் இருந்து சிறு கத்தியால் தமது நாக்கை அறுத்து ஒரு இலையில் ஏந்தி பலி பீடத்தின் அடியில் வைத்து அடியற்ற மரம் போல தணிகை முருகனின் முன்பு வீழ்ந்து வணங்கினார். திருத்தணிகை வழிபாட்டை முடித்துக்கொண்டு அவர் சென்னை வந்து சேர்ந்தார். அதற்குப் பிறகு அவரது வயிற்று வலி அவரை விட்டு நீங்கியது. சிறிது நாட்களில் தாம் அறுத்துக்கொண்ட நாக்கும் அதிசயமாக அவருக்கு வளரத் தொடங்கியது. அதைக்கண்டு அதிசயப்பட்ட பொதுமக்கள் அவரிடம் வந்து தங்களுடைய குறைகளைக் கூறி நிவர்த்தி பெற்றுச் சென்றனர். இப்படி அந்த இடம் ஒரு குறிமேடையாகவே மாறியது.

ஒரு நாள் அவர் யாத்திரையாக பழநி திருத்தலத்துக்குச் சென்றார். அங்கு அவர் மிகவும் விரும்பிய ஒரு முருகன் படத்தை அன்பர் ஒருவர் அவருக்கு தனது காணிக்கையாகக் கொடுத்தார். நாயகர் அந்தப் படத்தைப் பெருஞ்செல்வமாகக் கருதி சென்னைக்குக் கொண்டு வந்தார் அண்ணாசாமி. அந்தப் படத்தை தனது குறிமேடையில் நடுநாயகமாக வைத்த குறையென்று வந்தவர்களுக்கு குறி சொல்ல ஆரம்பித்தார். அவரது குறி பலருக்கும் பலித்து நலமுற்றனர். அதைத் தொடர்ந்து தனது குடும்பத்தை அங்கிருந்து மாற்றி வேறு ஒரு இடத்தில் குடி வைத்தார். அதன் பிறகு தாமும் துறவு நிலை பூண்டு முருகன் திருப்பணியிலேயே தனது காலத்தை நகர்த்தினார்.

1863ம் ஆண்டு இரத்தினசாமி செட்டியாரை சந்தித்தார் அண்ணாசாமி. இந்த நிலையில் ஒரு ஆவணி மாதம் அமாவாசை திதி மக நட்சத்திரத்தன்று அண்ணாசாமி வடபழனி ஆண்டவர் திருவடியை அடைந்துவிட்டார். மறுநாள் இரத்தினசாமி செட்டியார் வீட்டுக்கு செல்ல மனமின்றி, மாலை கடைக்குச் சென்றார். மூடியிருந்த தனது கடையைத் திறந்தபோது காவியுடை தரித்த ஒரு பெரியவர் அங்கிருந்து வெளிப்பட்டுச் செல்வது போலத் தோன்றக் கண்டார். கடையை அப்படியே விட்டு, விட்டு அவர்தம் அடிச்சுவட்டைப் பின்பற்றி உடன் சென்றார். காவியுடை அணிந்தவர் குறிமேடை வரை வந்து அங்கிருந்து கோயிலுக்குள் நுழைந்தார். பின்தொடர்ந்து வந்த செட்டியாரும் உள்ளே புகுந்தபோது, அங்கு பெரியவரைக் காணவில்லை. அங்கிருந்தவர்களும் இதைக் கண்டு வியப்புற்றனர். அதைத் தொடர்ந்து, 1865ம் ஆண்டு இரத்தினசாமி செட்டியார் மூலம் உருவானதுதான் வடபழனி முருகன் கோயில். இக்கோயில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு இந்த குறிமேடையை, வடபழநி ஆண்டவர் கோயில் என்று வழங்கும்படி இரத்தினசாமி தம்பிரான் அனைவரிடமும் கூறி வந்தார். நாளடைவில் வடபழநி கோயிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் விரைந்து பரவியது.

எந்த முருகன் கோயிலிலும் காண முடியாத அதிசயமாக வடபழனி முருகன் கோயிலில் முருகப்பெருமான் தனது திருப்பாதங்களில் காலணி அணிந்து காட்சி தருவது விசேஷம். அண்ணாசாமி தம்பிரான் அன்று பழனி திருத்தலத்தில் முருகப்பெருமானை தரிசித்த சமயம், அவர் மனதில் என்னென்ன எண்ண ஓட்டங்கள் நிகழ்ந்தன என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை, ‘உலகையே ஆளும் ஒப்பற்றக் கடவுளாம் சிவ-பார்வதியின் புதல்வரான முருகப்பெருமான் ஒரு கனிக்காக மனம் நொந்து இந்த கரடு முரடான மலை மீது ஏறி வந்து குடிகொண்டிருக்கிறானே. அவனது திருப்பாதம் எப்படியெல்லாம் வருந்தி இருக்கும்’ என்று அவரது மனம் நினைந்து உருகி இருக்கலாம். அதனால்தான் தாம் வழிபடும் முருகப்பெருமான் திருச்சிலை வடிவில் கூட முருகப்பெருமான் காலணி இன்றி இருக்கக் கூடாது என்று நினைத்து இக்கோயிலில் அருளும் முருகப்பெருமானுக்கு காலணி அணிவித்து அழகு பார்த்திருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com