செடி, கொடி, மரம், பசு, பாம்பு என இயற்கையை கடவுளாக பாவித்து வழிபடும் மரபு நம் இந்தியத் திருநாட்டிற்கே உரிய பெருமையாகும். அந்த வகையில், நாக வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட திருத்தலமான கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாட் எனும் தலத்தில் அமைந்துள்ள மன்னரசல ஸ்ரீநாகராஜா கோயில் மிகவும் பழைமையானதாகும். இக்கோயில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருக்கிறது. 1,00,000 வகையான பாம்புகளின் படங்கள் விதவிதமான வடிவத்திலும், நீளத்திலும் இக்கோயிலில் அமைந்திருப்பது விசேஷம்.
இக்கோயிலுக்கு வந்து குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், குழந்தை பெற்றதும், அக்குழந்தையுடன் வந்து பூஜை செய்து நாக உருவத்தை கோயிலுக்கு அர்ப்பணித்துவிட்டு செல்வது வழக்கம்.
ஒரு சமயம் பரசுராமர் சத்ரியர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க நினைத்தார். அதற்கு அந்தணர்களுக்கு நிலம் வழங்கினால் பாவம் போகும் என்று முனிவர் ஒருவர் கூற, பரசுராமர் வருண பகவானிடம் நிலத்தை வேண்டுகிறார். வருண பகவான் கூற்றுப்படி கடலிலே தனது கோடாரியை எறிகிறார். அங்கே நிலம் ஒன்று உருவாகிறது. அதுவே இன்றைய கேரளாவாகும். ஆனால், அந்த நிலம் அதிக உப்புத்தன்மையை கொண்டிருக்கிறது. இதனால் பரசுராமர் சிவனை நோக்கி தவமிருக்கிறார். சிவபெருமான் பரசுராமரின் முன் தோன்றி, ‘இதை சரிசெய்ய நாகத்தின் விஷத்தால்தான் முடியும்’ என்று கூறுகிறார். இதனால் பரசுராமர் நாகராஜனை நோக்கி தவமிருக்கிறார். இதனால் மனம் குளிர்ந்த நாகராஜன் சர்ப்பத்தை வரவழைத்து விஷத்தை பரப்பி அந்த நிலத்தை பசுமையாக மாற்றுகிறார். இதனால் பரசுராமர் நாகராஜனை அந்த இடத்திலேயே வாசம் செய்து அங்கே வரும் பக்தர்களுக்கு அருள் புரியும்படி வேண்டுகிறார். நாகராஜனும் அதை ஏற்று இத்தலத்திலேயே வாசம் செய்வதாக ஐதீகம்.
நாகராஜர் மந்தரசலவில் உள்ள மந்தார மரத்தில் வாசம் செய்கிறார். நாளடைவில் மந்தரசல எனும் பெயரே மன்னரசல என்று மருவியது. இக்கோயிலில் அருளும் தெய்வம் அனந்த விஷ்ணு பகவானாக பார்க்கப்படுகிறார். வாசுகி சிவனின் அவதாரமாக வணங்கப்படுகிறார்.
பல தலைமுறைகள் கடந்து வாசுதேவன், ஸ்ரீதேவி தம்பதியர் குழந்தையில்லாமல் இருக்கிறார்கள். நாகராஜனிடம் குழந்தை வரம் கேட்கிறார்கள். அப்போது நாகராஜர் வசிக்கும் காட்டில் நெருப்பு பற்றிக்கொண்டு எண்ணற்ற பாம்புகள் தீயில் கருகி உயிருக்குப் போராடுகின்றன. அவற்றை இத்தம்பதிகள் காப்பாற்றி, அதன் காயத்திற்கு நெய், எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து போடுகிறார்கள். காயம் ஏற்பட்ட இடத்தில் சந்தனம் பூசுகிறார்கள்.
அந்தத் தம்பதிகள் நாகராஜனுக்கு நெய், பால், பாயசம், அரிசி மாவு, மஞ்சள் பொடி, தேங்காய் பால், வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து படைக்கிறார்கள். இதற்கு பெயர், ‘நூறும் பாலும்’ ஆகும். இன்றும் இக்கோயிலில் இந்தப் படையல் நாகராஜனுக்கு படைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மனம் குளிர்ந்த நாகராஜன் தானே அவர்களுக்கு பிள்ளையாகப் பிறப்பதாக வரம் தருகிறார். அதேபோல அந்தத் தம்பதியருக்கு மனித குழந்தை ஒன்றும், ஐந்து தலை நாகக் குழந்தை ஒன்றும் பிறக்கிறது. இருவரும் வளர்ந்த பின், தன்னுடைய தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் செய்துவிட்டு தான் வந்த காரியம் முடிந்துவிட்டது என்று கூறி பாதாள அறைக்கு சென்று மறைந்து விடுகிறார் அந்த ஐந்து தலை கொண்ட நாக அண்ணன். இப்போதும் அந்த பாதாள அறையில் ஐந்து தலை நாகம் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது.
மற்ற கோயில்களைக் காட்டிலும் இக்கோயிலில் நடக்கும் சடங்குகள் சற்று வித்தியாசமாக இருக்கும். இந்தக் கோயில் தலைமை பொறுப்பில் இருப்பது பெண்ணாகும். நாகராஜன் செல்வதற்கு முன்பு பூஜைகளை பெண்களே செய்ய வேண்டும் என்று கூறிச் சென்றார் என்று கூறப்படுகிறது. சில நேரங்களில் ஆண்களும் பூஜை செய்வார்களாம். இக்கோயிலுக்கு வருவதற்கு எல்லா நாட்களுமே உகந்த நாட்களேயாகும். சிவராத்திரி இக்கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே இது மிகவும் பழைமையான நாகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். குழந்தை இன்றி அவதிப்படுவோர் இங்கே வந்து வேண்டிச் சென்றால், நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.