குழந்தைப் பேறு வரம் அருளும் அபூர்வ விருட்சம் அமைந்த கோயில்!

வயிரவன்பட்டி வளரொளிநாதர்
வயிரவன்பட்டி வளரொளிநாதர்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது வைரவன்பட்டி பைரவர் கோயில். அழகான திருக்குளத்துடன் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் இக்கோயில் காட்சி தருகிறது. காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கே அருள்மிகு வளரொளி நாதராகக் கோயில்கொண்டிருக்கிறார் ஈசன். இக்கோயிலின் சிறப்பம்சம் ஸ்ரீ பைரவ தரிசனம். பிரதான தெய்வமாக இவரே இங்கு வழிபடப்படுகிறார்.

தேவாதி தேவர்களாலும் வெல்ல முடியாத வல்லமை பெற்றிருந்தான் சம்பகாசுரன். அவனை, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய ஸ்ரீபைரவ மூர்த்தி வதம் செய்தார். இதை நினைவுகூரும் வகையில் வருடம்தோறும் ஐப்பசி மாதத்தில், சம்பகா சஷ்டி விழா இங்கே கொண்டாடப்படுகிறது. திருக்கோயிலில் ஸ்ரீவளரொளி நாதரும் ஸ்ரீ வயிரவரும் அருகருகே சன்னிதி கொண்டுள்ளனர். இங்கே ஸ்ரீ பைரவரையே வயிரவர், வைரவர் என்றெல்லாம் அழைக்கிறார்கள். பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கோயில் நகரத்தார் போற்றும் 9 ஆலயங்களில் முதன்மையானது என்கிறார்கள்.

ஸ்ரீ பைரவர் மட்டுமல்ல, அவருக்கான வழிபாடுகளும் இங்கே விசேஷம்தான்! இந்தத் திருத்தலத்துக்குச் சென்று ஸ்ரீபைரவர் சன்னிதிக்கு எதிரே உள்ள பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். சம்பகாசுரனை வதம் செய்த சூலத்தைக் கழுவுவதற்காக ஸ்ரீ பைரவர் உருவாக்கிய தீர்த்தம் இது என்கின்றன புராணங்கள். இதை, ‘அஷ்ட வயிரவ சூல தீர்த்தக் குளம்’ என்றும் போற்றுகின்றார்கள். ஸ்ரீ பைரவர் சன்னிதியின் 12 தூண்களும் 12 ராசிகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன. இவையனைத்தையும் கட்டுப்படுத்தும் மூலவராக ஸ்ரீ பைரவர் அருள்கிறார் என்பது ஐதீகம்.

ஏரழிஞ்சல் என்ற மரத்தைத் தல விருட்சமாகக் கொண்டது இந்தக் கோயில். இம்மரத்திலிருந்து விழும் விதைகள் மீண்டும் தாய் மரத்திலேயே ஒட்டிக்கொள்ளும் சிறப்பு இதற்கு உண்டு. கருவறையில் வீற்றருளும் மூலவர் பழங்காலத்தில் இந்த அழிஞ்சில் மரத்தின் அடியில் அமைந்து இருந்ததாகச் சொல்கிறார்கள். அபூர்வமாகக் காணப்படும் ஏரழிஞ்சல் மரத்துக்கும் கல்லால் வடித்து ஒரு தனி சன்னிதி அமைத்திருக்கின்றனர்.

ஏரழிஞ்சில் மரம்
ஏரழிஞ்சில் மரம்

தொடர்ந்து மூன்று புதன்கிழமை அல்லது சனிக்கிழமைகள் இந்தக் கோயிலுக்குச் சென்று அஷ்ட வயிரவ சூல தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபைரவரை வழிபட்டு, கோயிலின் பின்புறம் உள்ள ஏரழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்க, குழந்தை வரம் கிடைக்கும்; இழந்த பணத்தையும் புகழையும் மீண்டும் பெறலாம் என்கின்றனர். இந்த மரத்தடியில் தியானம் செய்வதை விருட்ச விசேஷம் என்பர்.

இந்த மரத்துக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதன் இறந்ததும் மீண்டும் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, ஏரழிஞ்சில் மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்கின்றனவாம். மேலும், மாசி மாதத்தில் இந்த மரத்தில் பூக்கும் சூரிய வெண்மை கொண்ட பூக்களைக் காண்பதே புனிதம் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
'காளி மிர்ச்' மூலிகை விதையிலிருக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
வயிரவன்பட்டி வளரொளிநாதர்

குழந்தை பாக்கியம் இல்லையே என்று கலங்குபவர்கள் தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி நாளில் செவ்வரளி பூவால் பைரவரை பூஜித்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் வாய்க்கும்.

இங்கே ஸ்ரீ பைரவருக்குப் பிடித்தமான உளுந்து, வெல்லம், பச்சரிசி ஆகியவற்றைத் துலாபாரம் செலுத்தி வழிபடுவதால், அஷ்டமத்து சனி, ஏழரைச் சனி, சனி தசை நடைபெறும் அன்பர்கள் சனிக் கிரக பாதிப்புகள் யாவும் நீங்கி நலம் பெறுவர் என்பது நம்பிக்கை. மேலும், கல்வியில் மந்தமாக உள்ள பிள்ளைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து வழிபடச் செய்தால், விரைவில் அவர்களின் கல்வியறிவு மேம்படும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com