‘காளி மிர்ச்’ என ஹிந்தியில் அழைக்கப்படும் பிளாக் பெப்பரில் உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. இதைப் பொடி செய்து முட்டை ஆம்லெட், சாலட் போன்றவற்றின் மீது சுவைக்காக தூவுவது மட்டுமின்றி, வெண்பொங்கல், மிளகுக் குழம்பு மற்றும் வேறு சில கிரேவிகளிலும் சேர்த்துச் சமைத்து உண்ணலாம். இதிலுள்ள முக்கியமான பத்து ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
* இதிலுள்ள பைபெரைன் (Piperine) போன்ற வலுவான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரிரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கவும், நாள்பட்ட வியாதிகள் வரும் ஆபத்தைத் தடுக்கவும் உதவி புரிகின்றன.
* காளி மிர்ச், செரிமானத்துக்கு உதவும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, சிறப்பான ஜீரணத்துக்கு உதவுகிறது. வயிற்றுக்குள் உணவை உடைக்கும் செயல் நல்ல முறையில் நடைபெற உதவி புரிந்து, வாய்வு மற்றும் வீக்கம் போன்ற கோளாறுகள் உண்டாகாமலும் பாதுகாப்பளிக்கிறது.
* இதிலுள்ள பைபெரைன், உணவிலுள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் முழுமையாக உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. பைபெரைன், மெட்டபாலிசம் விரைவாகவும் சிறப்பாகவும் நடைபெற உதவுகிறது. இதனால் சேமிப்பில் உள்ள கொழுப்பு அதிகளவில் எரிக்கப்பட்டு, ஆரோக்கியமான எடை அளவைப் பராமரிக்க முடிகிறது.
* காளி மிர்ச்யின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது உடலின் வீக்கங்களைக் குறைக்கவும், ஆர்த்ரைடிஸ் நோய் பாதிப்பின் தீவிரத்தை குறையச் செய்யவும் உதவும்.
* மூச்சுப் பாதையில் உற்பத்தியாகும் சளியை நீக்கவும் இருமலைப் போக்கவும் மிளகு ஒரு நல்ல மருந்தாகும்.
* இதை கொத்தமல்லி விதைகளுடன் சேர்த்துப் பொடித்து கஷாயம் செய்து வெல்லம் சேர்த்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
* மிளகை சரிவிகித உணவுடன் சுமாரான அளவில் சேர்த்து உண்ணும்போது அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களில் கோளாறு ஏற்படாமலிருக்கவும் உதவுகின்றன. இதனால் இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
* கருப்பு மிளகை தினசரி உணவில் சேர்த்து உண்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சாதாரண உடல் நலக் கோளாறுகளை குணமாக்கவும் உதவும்.
* பைபெரைன், வயதானதின் காரணமாக மூளையில் ஏற்படும் அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் உதவும். தினசரி மிளகை உடகொள்வது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தச் செய்யும்.
* மிளகிலுள்ள அனால்ஜெசிக் (Analgesic) குணமானது சிறு சிறு வலிகளை குணமடையச் செய்யும்.
காளி மிர்ச் எனப்படும் கருப்பு மிளகை குறைந்த அளவில் உபயோகிப்பதே நலம் தரும். அதிகம் உட்கொண்டால் வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்புள்ளது.