இரு கரம் குவித்து வணங்குவோம்!

இரு கரம் குவித்து வணங்குவோம்!
Published on

றைவன் நம்மிடம் எதையுமே என்றுமே எதிர்பார்ப்பதில்லை. இறைவன் நம்மிடம் என்றும் செலுத்துவது உண்மையான அன்பைத்தான். அந்த அன்பைத்தான் நாம் அருள் அல்லது அனுக்ரஹம் என்கிறோம். நாம் இறைவன் மீது செலுத்தும் உண்மையான அன்பின் பெயர்தான் பக்தி. ‘இறைவா, நான் உனக்கு இதை செய்கிறேன். நீ எனக்கு இதை செய்து கொடு’ என நாம்தான் நம்மைப் படைத்த இறைவனிடம் கேட்கிறோமே தவிர, இறைவன் நம்மிடம், ‘ஏ மனிதா, நான் இதை எல்லாம் உனக்குத் தந்திருக்கிறேனே, நீ இதை எல்லாம் எனக்குத் திருப்பிக் கொடு. என்னைத் திருப்திப்படுத்தும்படி கொடு’ என்று என்றாவது கேட்டிருக்கிறாரா?

ஒரு துன்பம் என்று வரும்போது, அந்தத் துன்பத்தைப் பற்றி சக மனிதர்களிடம் புலம்புவதை விட நம்மைப் படைத்தவனிடம், ‘இந்தத் துன்பத்திலிருந்து என்னை விடுவி’ என்று இறைஞ்சும்போது, நிச்சயம் அந்த இறைவன் நம்மை அந்தத் துன்பத்திலிருந்து மீட்டெடுப்பார். இறைவன் முன்பு சொல்ல ஸ்தோத்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? அவன் மீது பாடல்கள் பாட பாட்டுக்கள் ஒன்றுமே தெரியவில்லையா? கையில் பூக்களோ பழங்களோ கூட இல்லையா? பரவாயில்லை. இறைவனின் முன்பு இரு கரம் குவிப்போம். அது ஒன்று போதுமே. இரங்கி விடுவார் இறைவன்.

இரு கரம் குவித்து நிற்பதைத்தான் அஞ்சலி செய்தல் என்று பக்தி இலக்கணத்தில் குறிப்பிடுவார்கள். திருமாலின் திருவுருவம் முன்பு கருடாழ்வார் செய்து கொண்டிருப்பதும் அதுதான். ஸ்ரீராமரின் முன்பு ஹனுமன் செய்து கொண்டிருப்பதும் அந்த அஞ்சலிதான். ‘எனக்கு எதுவுமே தெரியாது. என்னிடம் எதுவுமே கிடையாது. என்னால் என்னையே காப்பாற்றிக்கொள்ள இயலவே இயலாது. இதோ இரு கைகளையும் உன் முன்பு குவித்து விட்டேன். இறைவா, நீ உனது இரு கைகளையும் விரித்து விடாதே. என்னை தயவு கூர்ந்து காப்பாற்று’ என்று அஞ்சலி முத்திரையோடு நிற்பவரை, ‘அஞ்சேல்’ என்று காப்பாற்றியே தீருவார் இறைவன்.

நாம் முன் ஜன்மங்களிலும் இந்த ஜன்மத்திலும் தெரிந்தோ தெரியாமலோ பல பாவங்களைச் செய்திருப்போம். நாம் செய்த பாவத்தைப் பார்த்து அதற்குத் தக்கபடி பல துன்பங்களை நாம் திருந்துவதற்காக உபயோகப்படுத்துகிறான் இறைவன். ஒவ்வொரு பாணத்துக்கும் பதில் அஸ்திரம் என்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் அஞ்சலி செய்வது. அதாவது இரு கைகளையும் குவித்து வணங்கி நிற்பது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அஞ்சலி செய்து நமக்கு வழிகாட்டி இருக்கிறார்.

பாரத யுத்தத்தில், பஞ்ச பாண்டவர்கள் மீது அஸ்வத்தாமன் பல அஸ்திரங்களை பிரயோகித்தும், பலனில்லாமல் போய் விட்டது. கடைசியில் நாராயண அஸ்திரத்தை பிரயோகித்தான், இல்லை… இல்லை உபயோகித்தான். இதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணர், அந்த அஸ்திரத்துக்கு பதில் அஸ்திரமே இல்லையே, என்ன செய்வது என நினைத்து இதற்கு ஒரே வழி அஞ்சலி செய்வதுதான் என யோசித்து, பாண்டவர்களை அஞ்சலி செய்ய வைத்தான். பீமசேனன், ‘நான் அஞ்சலி செய்ய மாட்டேன்’ எனக் கூறி கதையை ஓங்க, ஸ்ரீகிருஷ்ணர் பீமன் ஓடி வரும் சமயத்தில், அவன் காலைத் தட்டினார். மற்ற பாண்டவர்கள் அஞ்சலி செய்தபடி நிற்க, பீமன் மட்டும் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கியே விட்டான். தாக்க வந்த நாராயண அஸ்திரமோ, ரோஜா மாலையாக மாறி அவனது கழுத்தை அலங்கரித்து விட்டது.

சுலபமாக செய்யக்கூடிய செயலான இரு கரம் குவித்து வணங்குதலை, இதோ இந்த நொடியிலிருந்து நாமும் செய்ய ஆரம்பிப்போமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com