
பொதுவாக ஒரு மனிதன் சராசரி எட்டு மணி நேரம் தூங்க வேண்டியது அவசியமாகும். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில் வேலை பளுக்காரணமாக குறைவான நேரமே தூங்குகிறோம். அப்படி தூங்கும் போது சரியான திசையை தேர்வு செய்து தூங்கினால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
கிழக்கு திசையை குழந்தைகளுக்கான திசை என்றே சொல்லலாம். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களை கிழக்கு திசையை நோக்கி தலை வைத்து படுக்க சொல்லும் போது அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்படும். அவர்களின் நினைவாற்றல் நாளுக்கு நாள் அதிகரிப்பதை கண்கூடாகக் காணலாம். இது குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், கணக்கு சம்மந்தமான தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த கிழக்கு திசையை நோக்கி தலை வைத்துப் படுப்பது நல்லது.
தெற்கு திசை நமக்கு அதிர்ஷ்டத்தை தேடித்தரக்கூடிய திசையாகும். தெற்கு திசையில் தலை வைத்து வடக்குப்பக்கம் கால் நீட்டி படுத்தால், கண்டிப்பாக நம்முடைய தூக்கம் மிகவும் நிம்மதியாக இருக்கும். மனக்குழப்பம், மனஇறுக்கத்துடன் இருந்தாலும் தெற்கு திசையை தேர்வு செய்து படுக்கும் போது நல்ல மாற்றத்தை காண முடியும். தெற்கு திசையில் தலை வைத்துப் படுக்கும் போது நம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெற்கு திசை ஆயுளை அதிகரிக்கும் திசை என்றும் சொல்லலாம்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுக்கும் போது நல்ல பேர் மற்றும் புகழ் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறிக் கேட்டிருப்போம். இதற்கு புராணக்காரணம் மற்றும் அறிவியல் காரணம் உண்டு.
புராணக்காரணம் : ஒருமுறை சிவபெருமான் பார்வதி தேவியை பார்க்க வரும்போது விநாயகர் அவரை உள்ளே அனுமதிக்க மாட்டார். இதனால் கோபம் அடைந்து, சிவபெருமான் விநாயகர் தலையை துண்டித்து விடுவார்.
அதிர்ச்சி அடைந்த பார்வதிதேவி பூதகணங்களிடம் வடக்கு நோக்கி தலை வைத்துப் படுத்திருக்கும் யாருடைய தலையையாவது வெட்டி எடுத்துவர சொல்வார். அதுப்படியே பூதகணங்களும் வடக்குப்பக்கம் தலைவைத்துப் படுத்திருந்த யானையின் தலையை வெட்டி எடுத்து வந்து விநாயகருக்கு வைப்பார்கள். இப்படி புராணத்தில் நடந்திருக்கும் காரணத்தால், வடக்கில் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று கூறுவார்கள்.
அறிவியல் காரணம்: பூமியில் வடக்கு திசை அதிகமாக காந்தசக்தி கொண்ட திசையாகும். எனவே, இந்தப்பக்கம் தலை வைத்துப் படுக்கும் போது காந்தசக்தி மூளையைத் தாக்கக்கூடிய தன்மையைக் கொண்டதால் வடக்குதிசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்வார்கள்.
இந்த பதிவைப் பார்த்த பிறகு இனி நீங்கள் எந்த திசையில் தலை வைத்துப் படுப்பதற்கு முடிவு செய்திருக்கிறீர்கள்? என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.