கார்த்திகை பொரியில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் பொரியுடன் தேங்காயின் சரவலையைச் சேர்க்கிறோம். தூய பக்திக்கு அடையாளமாக பொரியோடு வெல்லத்தை சேர்க்கிறோம். வெண்பொடி பூசிய தூயவனாகிய சிவபெருமானை நெல் பொரி குறிக்கிறது. வள்ளல் தன்மை கொண்ட மாவலி சக்கரவர்த்தியை இந்தத் திருநாளில் நினைக்கிறோம். தூய பக்திக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பது தத்துவம்.
கார்த்திகை தீப தினத்தன்று வீடுகளில் தீபம் ஏற்றி விரதம் இருந்து வழிபடுவதன் பலனை தேவி புராணம் விரிவாக நமக்கு உணர்த்துகிறது. சிவபெருமான் ஜோதி வடிவமாக, திருவண்ணாமலையில் வீற்றிருப்பது போலவே. மகாவிஷ்ணுவும் ஜோதி வடிவமாக காஞ்சிபுரத்தில் தீபப்பிரகாசர் ஆலயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒரு சமயம் பிரம்மா யாகம் செய்தபோது ஜோதி வடிவில் பெருமாள் விளங்கியதால், ‘விளக்கொளி பெருமாள்’ என பக்தியோடு அழைக்கப்படுகிறார். வைணவர்கள் கார்த்திகை தீபத் திருநாளன்று விளக்கொளி பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர். இதை பெருமாள் கார்த்திகை என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். கார்த்திகை பௌர்ணமியன்று ஸ்ரீரங்கநாத பெருமாள் சக்கரத்தாழ்வார் சன்னிதியில் எழுந்தருள்வார். அப்போது கார்த்திகை கோபுர வாசல் பக்கம் கட்டப்பட்டிருக்கும் சொக்கப்பானையை பெருமாள் முன்னிலையில் ஏற்றுவார்கள். பெருமாள் அக்காட்சியைக் கண்டருள்வார்.
பிறகு பெருமாள் சந்தன மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கே அரையர்கள், திருமங்கையாழ்வார் பாடிய, ‘வாடினேன்…’ எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடி, வரவிருக்கும் மார்கழி மாதத் திருநாளுக்காக நம்மாழ்வாருக்கு விபரமாகக் கடிதம் எழுதுவார்கள். இதனை ‘ஸ்ரீமுகப்பட்டயம்’ என்பர். நம்மாழ்வாருக்கு ஸ்ரீமுகப்பட்டயம் எழுதியிருக்கும் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் பெருமாள் கோயிலுக்குச் செல்வார்.
கார்த்திகை தீபங்களை ஏற்றி விட்டு மூன்று முறை,
‘தீபம் ஜோதி பரப்பிரம்மம்
தீபம் சர்வ தமோபஹம்
தீபனே சாத்யத சர்வம்
சந்த்யா தீப நமோஸ்துதே!’
என்ற இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஸ்லோக வழிபாடு. விசேஷப் பலன்களை நமக்குப் பெற்றுத் தரும். தீப வழிபாடு என்றென்றும் இல்லத்தில் சந்தோஷத்தையும், ஐஸ்வர்யத்தையும், ஒற்றுமையையும் அள்ளித் தரும்.