ஸ்ரீராமர் மீது அதிக பக்தியும், அன்பும் வைத்திருப்பது யார் என்பதை உலகுக்கு உணர்த்த ராமபிரான் செய்த திருவிளையாடல் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஸ்ரீராமபிரான் வனவாசம் முடிந்து அயோத்திக்கு வந்து அரசாட்சி செய்தபோது, அனுமனும் அவருடனேயே தங்கினார். ஸ்ரீராமர் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை அவருடைய குறிப்பறிந்து அனைத்து சேவைகளையும் அனுமனே செய்து வந்தார். ஸ்ரீராமருடன் இருந்த சீதா தேவி, லக்ஷ்மணன், பரதன் என்று உடன் இருந்த அனைவரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர்.
ஒரு நாள் ஸ்ரீராமர் அனுமனின் சேவையை பாராட்டினார். அதை கவனித்த சீதா தேவியும், ராமபிரானின் தம்பிகளும், ‘நாமும் அனுமனை போல ஸ்ரீராமருக்கு ஒரு நாளாவது சேவை செய்ய வேண்டும்’ என்று எண்ணினர். இந்த விருப்பத்தை ராமபிரானிடம் தெரிவித்தனர்.
“உங்களுக்கான சேவையை அனுமன் ஒருவரே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும் உங்களுக்கான அனைத்து சேவைகளையும் நாங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டனர். இதற்கு ராமபிரானும் சம்மதித்தார். காலை முதல் இரவு வரை ஸ்ரீராமருக்கு என்னென்ன சேவைகள் செய்ய வேண்டும் என்பதைப் பட்டியலிட்டு ராமபிரானிடம் காட்டச் சென்றனர். அதைப் பார்த்த ஸ்ரீராமர், “இதில் அனுமன் பெயர் குறிப்பிடப்படவில்லையே?” என்றார். அதற்கு “எல்லா சேவைகளையும் நாங்களே செய்கிறோம்” என்று பதிலளித்தனர். “இதில் ஏதாவது ஒரு சேவை விடுபட்டிருந்தால், அதை அனுமன் செய்யலாமா?” என்று புன்னகைத்துக் கொண்டே ஸ்ரீராமர் கேட்டார். அதற்கு “அப்படியொரு நிலை வராமல் பார்த்துக் கொள்வோம்” என்று கூறினர்.
இங்கு நடந்த அனைத்தையும் ஸ்ரீராமர் அனுமனிடம் கூறி, “ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். மறுநாள் காலை ஸ்ரீராமர் எழுந்தது முதல் செய்ய வேண்டிய சேவைகளை சீதையும், ராமபிரானின் தம்பிகளும் செய்தனர். அவர்களுக்கு இதனால் மிகவும் சந்தோஷம். ஒன்று ராமபிரான் அருகில் இருப்பது, இன்னொன்று ராமபிரானுக்கு சேவைகள் அனைத்தும் தாங்களே செய்வது.
ஸ்ரீராமனின் உத்தரவுப்படி அனுமன் ராமபிரான் அறையின் வாசலிலே அமர்ந்து ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீராம சேவை நன்றாக நடக்கிறதா? என்றும் கவனித்தார். பகல் பொழுதில் எந்த சேவையும் குறைவின்றி போனது.
இரவு ஸ்ரீராமர் உறங்க வந்தார். தாம்பூலத்துடன் சீதா பிராட்டி வந்தார். ராமபிரான் வாய் திறந்தார். திறந்த வாயை அவர் மூடவேயில்லை. அவரிடம் இருந்து பேச்சோ அசைவோயில்லை. ‘ராமருக்கு ஏதோ ஆகிவிட்டது’ என்று சீதா தேவி பயந்தார். பரதன், லக்ஷ்மணன் அனைவரையும் கூப்பிட்டார். அரண்மனை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் ஸ்ரீராமரை பரிசோதித்துவிட்டு எந்த நோயும் இல்லை என்று கூறிவிட்டு கிளம்பி விட்டார்.
பின்பு வசிஷ்டரை அழைத்து வந்தனர். அவரும் ஏதேதோ செய்து பார்த்துவிட்டு தியானம் செய்யத் தொடங்கினார். பின்பு, “அனுமனால்தான் இதற்கு பதில் சொல்ல முடியும்” என்றார். அனுமனை அனைவரும் வந்து கூப்பிட துள்ளிக் குதித்து வந்த அனுமன், ஸ்ரீராமரின் வாய்க்கு நேராக சொடக்குப் போட்டதும் அவர் வாய் தானாகவே மூடிக்கொண்டது. இதைப் பார்த்த பிறகுதான் அனைவருக்குமே நிம்மதி பிறந்தது. அப்போது ஸ்ரீராமர் சொன்னார், “எனக்கு கொட்டாவி வந்தால் அனுமன்தான் சொடக்கு போடுவார். இது உங்களுக்குத் தெரியவில்லை” என்றார். பக்தி சேவையில் அனுமனுக்கு நிகர் அனுமனே என்பதை புரிந்துக்கொண்டு அனுமனை அனைவரும் பாராட்டினர்.