நவகிரகங்களில் ‘ஈஸ்வர’ பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான்தான். பொதுவாக, சனீஸ்வரர் பல கோயில்களில் நவகிரகங்களுடன் சேர்ந்திருந்தே அருள்புரிவார். ஆனால், ஒருசில கோயில்களில் திருநள்ளாறு, குச்சனூர் போன்ற கோயில்கயில் தனி சன்னிதிகளில் கருவறை மூர்த்தியாகக் காட்சி தருவார். அதைப்போலவே, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயிலின் ஈசான முறையில் தெற்கு நோக்கி தனி சன்னிதியில் சனி பகவான் காட்சி தருகிறார்.
சனி பகவான் இத்தலத்தில் தெற்கு நோக்கி அமைந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது. வானரத் தலைவன் வாலி மிகப்பெரிய சிவ பக்தன். சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் முடிவதற்கு ஆயிரம் சிவாலயங்களில் பூஜை செய்யும் பழக்கம் உடையவன். அதைப்போலவே இங்கு அடர்ந்த வனப்பகுதியில் நூறு சிவ லிங்கங்களை அமைத்து மேற்கு நோக்கி தவம் செய்வது வழக்கம். இதைப் பற்றி கேள்விப்பட்ட இலங்கை மன்னன் ராவணன், தனது பக்தியினை விட சிறந்த பக்தனான வாலி மீது கோபம் கொண்டு வாலியின் தவத்தை கலைக்க முடிவு செய்து பின்புறமாக மறைந்து வந்து தவம் செய்த வாலியை பின்பக்கம் இறுக்கிப்பிடித்துக் கொண்டு வாலியை எங்கேயும் செல்ல விடாமல் தடுக்க நினைத்தான்.
இதனை உணர்ந்த வாலி, தனது வாலினால் ராவணனை உடல் முழுவதும் சுற்றிக் கட்டி வாலில் தொங்கவிட்டபடி தனது பூஜைகளை குறித்த நேரத்தில் முடித்து விட்டான். பிறகு ராவணனை சிறையில் அடைத்து வைத்திருந்தான். தனது மகன் அங்கதன் விளையாடும் பொருட்டு அவனது தொட்டிலின் மேலே தலைகீழாகத் தொங்கவிட்டு வேடிக்கைக் காட்டினான்.
இதனைக் கேள்விப்பட்டு ராவணன் மனைவி மண்டோதரி வாலியிடம் மன்னிப்பு கேட்டு, ராவணனை தன்னுடன் அழைத்துச் சென்றாள். பின்னாளில் தனது மக்களுக்கு ராவணன் மூலம் எந்தத் துன்பமும் வராமல் தடுக்க தனது ஞான சக்தியால் தெற்கு திசை நோக்கி சனீஸ்வரர் பார்வை பட்டுக்கொண்டே இருக்கும்படி தனி சன்னிதியில் பிரதிஷ்டை செய்தார்.
தெற்கு எமனின் திசை. தனது சகோதரன் எமதர்மனால் ஏற்படும் ஆயுள் கண்ட பிரச்னைகள் இந்த சனீஸ்வர பகவானை வழிபடுவதால் நீங்கும். அனைத்துவித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்மச் சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரைச்சனி, சனி திசை நடப்பவர்கள் பிரதி சனிக்கிழமைகளில் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த சனீஸ்வரர் வலம் வரக்கூடிய நிலையில் தனிச் சன்னிதியில் அமைந்து அருள்பாலிக்கிறார். சனிக்கிழமை நாளில் இந்த சனீஸ்வரரை பதினொரு சுற்று பதினொரு வாரங்கள் சுற்றி வர சனியின் பாதிப்புகள் முற்றிலும் நீங்கி, நன்மைகள் ஏற்படும். சனியினால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.
மேற்கு நோக்கிய சிவாலயமான இந்தக் கோயிலில் பெரியநாயகி அம்பாளுடன் சிவபெருமான் காட்சி தருகிறார். வாலி தனது தம்பி மனைவியை அபகரித்த தோஷம் நீங்க வழிபட்டதால் சுவாமிக்கு வாலீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.
சாகா வரம் பெற்றிருந்த மகிஷாசுரன் தேவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் ஈசனிடம் முறையிட்டதைத் தொடர்ந்து அம்பிகையிடம் சப்த கன்னியர்களைக் கொண்டு மகிஷாசுரனை அழிக்க சிவன் உத்தரவிட்டார். சப்த கன்னியர்களும் மகிஷாசுரனை வதம் செய்தனர். இதனால், அவர்களுக்கு தோஷம் உண்டானது. இந்த தோஷம் நீங்க கயிலாயத்திலிருந்த சிவனிடம் முறையிட்டனர். வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் பூலோகத்தில் உள்ள இந்த வாலீஸ்வரர் தலத்தில் தன்னை வழிபட்டால் அவர்களைப் பிடித்த தோஷம் நீங்கும் என அறிவுறுத்தினார். அதனை ஏற்ற சப்த கன்னியர்கள் இங்கு சிவ பூஜை செய்து தங்களது சாபத்தை நீக்கிக் கொண்டனர்.