
நம் வீட்டில் வலம்புரி சங்கு வைத்திருப்பது மிகவும் அதிர்ஷ்டம்; எல்லா வித பிரச்னையில் இருந்தும் விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது. சங்கு என்பது கடலில் இருந்துக் கிடைக்கக்கூடிய பொருளாகும். அதை நாம் பூஜைக்கும், அழகுப் பொருட்களாகவும் பயன்படுத்துகிறோம். சங்கு ஏன் இவ்வளவு புனிதமான பொருளாக கருதப்படுகிறது ? பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வந்த பல புனிதமான பொருட்களுள் சங்கும் ஒன்றாகும்.
சங்கில் வலம்புரி, இடம்புரி என்று இரண்டு வகை உண்டு. இடம்புரியைக் காட்டிலும் வலம்புரிக்கே அதிக சக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
வலம்புரி சங்கை வீட்டின் பூஜையறையில் வைத்து முறையாக பூஜை செய்யும் போது வீட்டில் செல்வ செழிப்பும் மகாலக்ஷ்மி, குபேரரின் அருளும் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. சரியான முறையில் வலம்புரி சங்கை பூஜை செய்து வந்தால் அந்த வீட்டில் பில்லி, சூன்யம், ஏவல் அண்டாது என்று சொல்கிறார்கள்.
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் துளசியை சங்கில் இட்டு அந்த தீர்த்தத்தை வீடு, தொழில் செய்யும் இடம் ஆகியவற்றில் மாலை நேரம் தெளித்து வந்தால், வாஸ்து தோஷம் நீங்கும்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானுக்கு சங்கில் பால் ஊற்றி பூஜை செய்வதின் மூலமாக திருமணத்தடை நீங்கும். கடன் தொல்லை, வியாபார நஷ்டம் நீங்க ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சங்கில் குங்குமம் இட்டு பூஜை செய்து வந்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
இந்தளவுக்கு புனிதமாக கருதப்படும் சங்கை வெறும் தரையில் வைக்கக்கூடாது. துணியின் மீதோ அல்லது தட்டில் பச்சரிசி வைத்து அதன் மீதோ தான் வைக்க வேண்டும். தினமும் சங்கை வாசனை திரவியம் கொண்டு பூஜிக்க வேண்டும். மஞ்சள், குங்குமம் இட்டு சங்கை பராமரிக்க வேண்டும்.
சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டும் போது 'ஓம்' என்னும் பிரணவ மந்திரம் ஒலிக்கும். வீட்டில் செய்யக்கூடிய முக்கியமான பிரார்த்தனை அல்லது வழிப்பாடின் போது சங்கு நாதத்தை ஒலிக்க செய்யலாம். இதை கேட்டும் போது மனதிற்கு நேர்மறை ஆற்றலும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
ஆயிரம் இடம்புரி சங்கிற்கு இணையானது ஒரு வலம்புரி சங்கு என்று சொல்வார்கள். எனவே, வலம்புரி சங்கை வீட்டில் வைத்து வழிப்படுவது நல்ல அதிர்ஷ்டத்தையும், முன்னேற்றத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை.