மகா சிவராத்திரி 2026: முக்தி நிலையை அடையச் செய்யும் அந்த ஒரு இரவு!

Maha Shivratri 2026
Maha Shivratri 2026
Published on

மாதந்தோறும் அமாவசைக்கு முதல் நாள் சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. மாசி மாதம் வருகின்ற சிவராத்திரியை நாம் மஹா சிவராத்திரி என்றழைக்கிறோம்.

சரி, இந்த சிவராத்திரி அன்று ஏன் விரதம் இருக்க வேண்டும்? சிவபெருமானை வணங்கி‌ ஏன் தியானம் செய்யவேண்டும்? இந்த கேள்விகளுக்கான விளக்கத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

முதலில் சிவராத்திரி என்பது ஒரு பண்டிகை அல்ல, மாறாக நம் மனதை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சிறந்த விரதமாகும். ஆகவே இந்த சிவராத்திரியை கொண்டாடுகிறோம் என்று சொல்லாமல் அனுஷ்டிக்கிறோம் என்று கூறுவதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சிவராத்திரி அன்று விரதம் இருக்கிறோம், கண் விழிக்கிறோம், கோவிலுக்குச் சென்று சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடுகிறோம். இத்தோடு அன்றைய தினத்தை முடித்து விட்டு நாம் மறுபடியும் அன்றாட வேலைகளிலும் நினைவுகளிலும் தியானத்தை செலுத்துகிறோம்.

ஆனால் சிவராத்திரி விரதத்தின் உண்மையான தத்துவத்தை நாம் தெரிந்து கொண்டு இந்த விரதத்தை கடை பிடித்தோமேயானால் வாழ்க்கை என்றால் என்ன என்பதை மிக அழகாக புரிந்து கொள்ளலாம்.

சிவராத்திரி விரதத்தில் அடங்கி இருக்கும் தத்துவம்:

நம்முடைய மனமானது சந்திரனின் இயக்கத்தை பொறுத்துதான் செயல்படுகிறது. சந்திரனை பொறுத்த வரையில் ஒரு மாதத்தில் வளரும் நாட்கள் 15 (வளர்பிறை), தேயும் நாட்கள் 15 (தேய் பிறை). இதில் தேய் பிறையின் 14வது நாள் அதாவது அமாவாசைக்கு முதல் நாள் சந்திரனானது ஏறத்தாழ முற்றிலும் மறைந்துவிடும். பிறகு மெது மெதுவாக மறுபடியும் வளர ஆரம்பிக்கும். இதைப் போலவேதான் நம்முடைய மனதிலும் ஏதாவது ஒன்றின் மேல் தீராத ஆசை இருக்கும். நமக்கு நாமே தீடிரென ஒருநாள் எதற்கு இந்த ஆசை? ஏன் இந்த ஆசை என்றெல்லாம் கேட்டு கொள்வோம். அப்போது அந்த ஆசையும் மறைந்துவிடும். பிறகு சில நாள் கழித்து மறுபடியும் அந்த ஆசை விட்டேனா பார் என்று மனதிற்குள் வந்துவிடும். இப்படியே சந்திரனைபோல ஆசைகளும் நிரந்தரமாக மறையாமல் அவ்வப்போது வந்து வந்து மறையும்.

இந்த மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு சிவனை நோக்கி தியானம் செய்யவேண்டும். அவ்வாறு தியானம் செய்தாலும் நம் மனதிலே எங்கேயாவது ஒரு மூலையில் இந்த ஆசையானது எப்படி அமாவாசைக்கு முதல் ராத்திரி சிறு கீற்றுப்போல சந்திரனின் பிம்பம் இருக்கிறதோ அதைப் போலவே நம் ‌மனதிலும் இருக்கும்.

அந்த ஆசையையும் அறவே ஒழித்தால்தான் நாம் பரிபூரணமாக இறைவனை சென்று அடையமுடியும். அதற்காகவே அன்றைய தினம், அதாவது அமாவாசைக்கு முதல் நாள் சிவனை வழிபடும் நாளாக சிவராத்திரி ஆக அனுஷ்டிக்கப்பட்டது. சிவன் என்பவர் முதலும் முடிவும் இல்லாதவர். இந்த தத்துவத்தை உணர்த்துவதற்காகதான் நம் முன்னோர்கள் சிவபெருமானை லிங்க வடிவத்தில் படைத்தனர்.

இதையும் படியுங்கள்:
மகா சிவராத்திரி: விரத முறைகள், பூஜை நேரங்கள், வழிபாட்டு விதிகள், தவிர்க்க வேண்டிய தவறுகள்!
Maha Shivratri 2026

லிங்கத்தின் பாணமானது கிட்டத்தட்ட முட்டை வடிவத்தில் இருக்கும். இந்த முட்டை வடிவத்தை நாம் வரையும்போது நமக்கே புரியும் முதலும் கிடையாது முடிவும் கிடையாது என்று.

ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரையில் பிறப்பு இறப்பு இரண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். முந்தைய ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கு ஏற்ப நமக்கு அடுத்த ஜென்மத்தில் பிறப்பு ஏற்படுகிறது. இந்த பிறப்பு இறப்பு இரண்டையும் தவிர்த்து பரிபூர்ண முக்தி நிலையை அடைய வேண்டுமென்றால் அதற்கு இந்த சிவபெருமானை வணங்குவது தான் சரியான தீர்வு.

குறிப்பாக, சிவராத்திரி அன்று சிவனை வணங்கினால் கண்டிப்பாக ஆசைகளில் இருந்தும் மாயைகளில் இருந்தும் விடுபட்டு துய மனதோடு இறைவனின் பாதத்தை அடைவோம் என்பது உறுதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com