

சிவபெருமானுக்கு கொண்டாடப்படும் மிக முக்கியமான விரதங்களுள் மகா சிவராத்திரி விரதமும் ஒன்றாகும். அந்த வகையில் மகாசிவராத்திரி என்பது சிவபெருமானின் பரிபூரண அருளைப்பெற மிகவும் முக்கியமான நாளாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதி கூடும் இரவில் கொண்டாடப்படும். உலகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அன்று ஒருநாள் இரவு சிவ பக்தர்கள் கண் விழித்திருந்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.
சிவராத்திரி என்பது பார்வதி தேவி சிவனை வழிபட்டு, இரவு முழுவதும் பூஜை நடத்திய நான் என கதை கூறுகிறது. இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலம், பல பிறவிகளில் செய்த பாவங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என்றும், மன அமைதி மற்றும் ஆன்மிக சக்தியை அதிகரிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு 2026-ம் ஆண்டு மகாசிவராத்திரி பிப்ரவரி மாதம் 15-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. மகா சிவராத்திரி வரும் ஞாயிற்று கிழமை (பிப்ரவரி 15-ம்தேதி) சதுர்த்தசி திதி மாலை 5.51 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் (பிப்ரவரி 16-ம்தேதி) மாலை 6.26 மணிக்கு முடிவடைகிறது.
எனவே இந்தாண்டு மகா சிவராத்திரி விரதத்தை பிப்ரவரி 15-ம்தேதி மாலை 6 மணிக்கு பிறகு தொடங்கவேண்டும். இரவு முழுவதும் கண் விழித்து 4 கால சிவ பூஜையில் கலந்து கொண்டு, பிப்ரவரி 16-ம்தேதி காலை 6.30 மணிக்கு நான்காம் கால பூஜையை நிறைவு செய்ய வேண்டும். மகாசிவராத்திரி வழிபாட்டின் முக்கிய அம்சம் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை நினைத்து பூஜை செய்வதாகும்.
மகா சிவராத்திரி அன்று அதிகாலையில் நீராடி, உபவாசம் (விரதம்) இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, நான்கு காலங்களிலும் சிவலிங்கத்திற்கு பால், இளநீர், பன்னீர் கொண்டு ருத்ராபிஷேகம் செய்து, "ஓம் நமசிவாய" மந்திரத்தை உச்சரித்து வழிபட வேண்டும். சிவராத்திரி நாளில் பசி, கோபம், பொய், அசைவம் மற்றும் பகல் தூக்கத்தைத் தவிர்த்து, தூய்மையுடன் சிவ சிந்தனையில் இருப்பது சிறந்தது என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
செய்ய வேண்டியவை:
விரதம் அனுஷ்டித்தல்: சிவராத்திரி அன்று நாள் முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அப்படி நாள் முழுவதும் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் பால், பழங்கள் மட்டும் உண்டு விரதம் இருக்க வேண்டும். கர்ப்பிணிகள், முதியவர்கள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்கள் உபவாச விரதத்தை தவிர்த்து சிவவழிபாட்டை மட்டும் செய்யலாம்.
நான்கு கால பூஜை: சிவாலயங்களுக்குச் சென்று அல்லது வீட்டிலேயே இரவு முழுவதும் கண் விழித்து (ஜாக்ரன்) நான்கு காலங்களிலும் சிவனை வழிபட வேண்டும்.
முதல் ஜாம பூஜை - 15-ம்தேதி மாலை 6.15 மணி முதல் இரவு 9.25 மணி வரையும்,
இரண்டாம் ஜாம பூஜை இரவு 9.25 மணி முதல் நள்ளிரவு 12.34 வரையிலும்,
மூன்றாம் ஜாம பூஜை நள்ளிரவு 12.34 முதல் அதிகாலை 3.44 வரையிலும்,
நான்காம் ஜாம பூஜை பிப்ரவரி 16-ம்தேதி அதிகாலை 3.44 முதல் காலை 6.54 மணி வரையும் உள்ளது.
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டாலும் கூட, லிங்கோற்பவ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது மட்டும் கண்டிப்பாக சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில்தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது.
அபிஷேகம் மற்றும் அர்ச்சனை: பால், தயிர், தேன், நெய், இளநீர், பன்னீர், கரும்புச்சாறு மற்றும் வில்வ இலைகளால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வந்தால் உங்களுடைய உள்ளமாகிய ஆன்மா சுத்தம் பெறும் என்பது ஐதீகம்.
மந்திர உச்சாடனம்: ஓம் நமசிவாய, சிவபுராணம், சிவ காயத்ரி மந்திரம், சிவ ருத்ர மந்திரம், அல்லது சிவ ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய வேண்டும். சிவராத்திரி அன்று இரவு முழுவதும், சிவபெருமானின் பெருமைகளைப் பாடி, அமைதியான சூழலில் மந்திரங்களை உச்சரிப்பது, ஆன்மீக பலன்களை அதிகரிக்கும். எந்த மந்திரம் தெரியாது என்பவர்கள் ஓம் நமசிவாய என்ற சிவமந்திரத்தை மட்டும் தூயமனதுடன் சொல்லி வந்தாலே போதுமானது.
தியானம்: அன்றைய தினம் மௌன விரதம் இருந்து மனதில் சிவனை நினைத்து தியானம் செய்து, அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இது மனதை ஒருமைப்படுத்தவும், சிவனின் அருளைப் பெற்று கர்ம வினைகளை நீக்கவும், ஆன்மீக சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
தானம்: அன்றைய தினம் உங்களால் முடிந்த அளவு தானம், தர்மம் செய்யவேண்டும். சிவன் கோவில்களில் அன்னதானம் செய்ய பொருளாகவோ, பணமாகவோ உதவி செய்யலாம்.
மறந்தும் செய்யக்கூடாதவை:
பகல் தூக்கம்: சிவராத்திரி அன்று விரதம் அனுஷ்டிப்பவர்கள் கண்டிப்பாக அன்றைய தினம் பகலில் தூங்கக்கூடாது, இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவபெருமானை நினைத்து வழிபட வேண்டும்.
அசைவம் மற்றும் மது அருந்துதல்: அன்றைய தினம் அசைவ உணவுகளை செய்யவோ சாப்பிடவோ கூடாது. உணவில் வெங்காயம், பூண்டை தவிர்க்க வேண்டும். மகாசிவராத்திரி நாளில் உப்பு சாப்பிடக்கூடாது. மற்றும் மது, சூதாட்டம், புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தவறான எண்ணங்கள்: கோபம், பொய், வன்முறை மற்றும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் அன்றைய தினம் யாரிடமும் சண்டை போடவோ, கடும் சொல்லை பயன்படுத்தவோ, வார்த்தைகளால் காயப்படுத்தவோ கூடாது.
தவிர்க்க வேண்டிய பூக்கள்: மகா சிவராத்திரி வழிபாட்டில் சிவபெருமானிடம் சாபம்பெற்ற தாழம்பூ (Kewda) மற்றும் சண்பகப்பூ (Champa) ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சிவலிங்கத்திற்கு குங்குமம் (சந்தனம் பயன்படுத்தலாம்) மற்றும் துளசி இலைகளைப் படைக்கக்கூடாது. செயற்கை பூக்களையும் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் சிவனுக்கு எளிமையான, நறுமணம் இல்லாத வில்வ இலைகளே உகந்தவை. எந்த பூவும் வாங்க இயலாதவர்கள் வெறும் வில்வ இலையை மட்டும் சிவபெருமானுக்கு சாற்றி வழிபாடு செய்யலாம்.
தவிர்க்க வேண்டியவை: மகாசிவராத்திரி அன்று அரட்டை அடிப்பது, டிவி பார்த்து என அன்றைய பொழுதை கழிப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
உணவு உண்ணுதல்: சிவராத்திரி விரதத்தின் போது அரிசி உணவுகளைத் தவிர்த்து, சமைக்காத உணவுகளை உண்பது சிறந்தது. பழங்களை சாப்பிடலாம்.
சிவராத்திரி முடிந்து மறுநாள் காலை, சிவலிங்கத்திற்கு சிறப்புப் பூஜை செய்த பின்னர் உணவருந்தி விரதத்தை முடிப்பது (பாரணை) வழக்கம்.