இன்று ஒரு திரைப்படத்தின் புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் மற்றொரு திரைப்படங்களிலும் வருவதை யுனிவர்ஸ் என்கிறோம். இந்த முறையை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணம், மகாபாரதத்தை எழுதிய முனிவர்கள் கடைப் பிடித்துள்ளனர். ராமாயணத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் மஹாபாரதத்திலும் தொடர்ச்சியாக வருகின்றன. ராமாயணம், மகாபாரதம் இரண்டு இதிகாசங்களும் நடைபெற்ற காலங்கள் வேறு வேறு. காலங்கள் மட்டுமல்ல வேறு வேறு யுகங்களில் இவை நடைபெற்றன. இரண்டிற்கும் பல ஆயிரம் ஆண்டுகளை தாண்டிய இடைவெளிகள் உள்ளன. ஆயினும் சில சிரஞ்சீவிகள் மற்றும் நீண்ட ஆயுளை கொண்டவர்கள் இரண்டு இதிகாசங்களிலும் வருகிறார்கள்
அந்த கதாபாத்திரங்கள் யார் யார்?என்று காண்போம்!
பரசுராமர்:
பரசுராமர் மிகச்சிறந்த வீரர். ராமாயண காலத்தில் இவர் ஷத்திரியர்கள் மீது கோவம் கொண்டு அவர்களை அழித்துக் கொண்டிருந்தார். அரசன் கார்த்தவிரிய அர்ஜூனாவை கொன்று, சிறையிலிருந்த இலங்காதிபதி ராவணனை விடுவித்தார். சிவதனுசுவை உடைத்து ராமர் சீதையை மணம் புரிந்ததை அறிந்த பரசுராமர் , அவரையும் அழிக்கும் எண்ணத்தில் இருந்தார். ராமரை நேரில் பார்த்ததும் பரசுராமர் மனம் மாறி ஷத்திரியர்களை அழிக்கும் திட்டத்தினை கைவிட்டார்.
மஹா பாரதத்தில் கூட பரசுராமர் வருகிறார். இங்கு பரசுராமர் கர்ணனின் குருவாக இருந்தார். கர்ணன், தான் பிராமணன் என்று பொய் சொல்லி பிரம்மாஸ்திரம் ஏவும் வித்தையை பரசுராமரிடம் கற்றான். கர்ணன், ஷத்திரியன் என்ற உண்மையை அறிந்த பின் , அவன் கற்ற வித்தைகள் அனைத்தும் தக்க சமயத்தில் மறந்து போகும் என்று சாபமிட்டார் பரசுராமர்.
வாயுபுத்திர ஹனுமான்:
ராமாயணத்தில் சீதையைத் தேடுவதில் அனுமன் முக்கிய பங்கு வகித்தார். ராமரின் தீவிர பக்தராக இருந்தார். மிகப்பெரிய வீரனான ஹனுமான், சூரியனை மாம்பழம் என்று நினைத்து கடித்தவர். இறந்து போன லக்ஷ்மணன் மற்றும் ஏராளமான சேனை வீரர்களை உயிர்ப்பிக்க சஞ்சீவி மலையை கொணர்ந்து வந்தவர். ராமருக்கு பின் ராமநாமம் ஜெபிக்கும் இடத்தில் வாழ்ந்து வந்தார். மஹாபாரத காலத்தில் ஹனுமான், அர்ஜூனன் கொடியில் ஏறி அமர்ந்தார். பாண்டவர்களின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். மகாபாரதத்தில் அனுமனுக்கு ஒரு சகோதரர் இருந்தார். அவன் தான் பீமன். பீமனின் அகந்தையை ஹனுமான் அழித்தார்.
ஜாம்பவான்:
ராமாயணத்தில் ராமருக்கு உதவிய பெரிய கரடி தான் ஜாம்பவான். சுக்ரீவன் அமைச்சரவையில் மந்திரி பணியை பார்த்தவர் இவர். ஜாம்பவான் எப்போதும் அறிவில் வல்லவராக இருந்தார். ராமாயண காலம் முடிந்த பின்னரும் ஜாம்பாவன் உயிருடன் இருந்தார். மஹாபாரதத்தில், காணாமல் போன சியமந்த மணியை தேடி வந்தார் கிருஷ்ணர். அந்த மணி ஜாம்பவனிடம் இருந்தது. கிருஷ்ணர் மல்யுத்தம் செய்து அவரை வெற்றி பெற்றார். ஜாம்பவான் கிருஷ்ணருக்கு சியமந்த மணியும் , தனது மகளையும் கொடுத்தார். கிருஷ்ணர் ஜாம்பவானின் மகளாக ஜாம்பவதியை திருமணம் செய்துக் கொண்டார்.
துர்வாசர்:
துர்வாச முனிவர் வனத்தில் ராமரையும் சீதையையும் காண்கிறார். அப்போது இவர்கள் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்பதை கணிக்கிறார். மஹாபாரதத்தில் குந்திக்கு குழந்தை பாக்கியம் பெற மந்திரம் சொல்லிக் கொடுத்தார்.
மாயாசுரன்:
ராமாயண காலத்தில் இராவணன் மனைவியான மண்டோதரியின் தந்தை இவர். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக இந்திரபிரஸ்தம் நகரை அமைத்து கொடுத்தவர் இவர் தான்.
மந்தாரை:
ராமாயணத்தில் முக்கிய சூத்திரதாரியான மந்தாரை, கைகேயின் மனதை கலைத்து ராமர் பட்டம் சூடுவதை தடுத்து காட்டுக்கு அனுப்ப காரணமாக இருந்தாள். மஹாபாரதத்தில் கிருஷ்ணரை சந்தித்து தனது கூன் வடிவம் நீங்கி அழகிய பெண்ணாக மாறி சாப விமோசனம் பெற்றாள்.
மேலும் விஸ்வாமித்திரர், விபீஷணன் ஆகியோரும் மஹாபாரதத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.