
திருநெல்வேலி மாவட்டம் உவரியில் உள்ளது கரைசுத்து உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இயற்கை எழில்மிக்க கடற்கரையின் ஓரமாக இந்த கோவில் அமைந்துள்ளது. சிவன் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் காட்சி தருவதால் இப்பெயர் பெற்றது. இந்த கோவில் அருகே உள்ள கடலோரத்தில் நான்கு நன்னீர் ஊற்றுக்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து தினமும் தண்ணீர் எடுத்து சென்று சுயம்புநாதருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இக்கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை, தை அமாவசை, திருவாதிரை திருநாள், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தமிழ்மாத கடைசி வெள்ளிக் கிழமையும் பக்தர்கள் இங்கு அதிகம் வருகின்றனர்.
இந்த கோவில் சுயம்புநாதரை வழிபட்டால், கூன், குஷ்டம் போன்ற நோய்கள் குணமாவதால் இத்தலம் மிகவும் பிரபலமானதாக உள்ளது. வைகாசி விசாகத்திற்கு பல்வேறு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளாமான மக்கள் சுயம்புநாதரை வந்து வழிபடுகின்றனர்.
திருமண தடை, குழந்தை பாக்கியம், பித்ரு தோஷம் போன்ற என்ற பிரச்சனைகள் இருந்தாலும் உவரி சுயம்புநாதரை வேண்டிக்கொண்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறினால் மண் சுமப்பதாக வேண்டிக்கொண்டால் வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும் என்று சொல்கிறார்கள். பக்தர்கள் வேண்டுதலுக்காகக் கடற்கரை மண்ணை ஓலைப்பெட்டியில் சுமந்து கொண்டுவந்து போட்டு வழிபடுதல் இங்கு விசேடமான வழிபாடாக உள்ளது.
மேலும் இந்த பரிகார முறை காலம் காலமாக நடைபெற்று வருவதாகவும் கோவிலில் சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறை வேறு எந்த கோவிலிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு முன் அதிகாலையில் கடலில் நீராடிய பின்னர் ஓலைப்பெட்டிகளில் (ஓலைப்பெட்டி கோவில் வாசலில் விற்பார்கள்) கடல் நீரில் இருந்து மண்ணை எடுத்து தலையில் சுமந்து கொண்டு வந்து சுயம்பு நாதர் ஆலயத்தின் அருகில் வந்து குவிப்பார்கள். பரிகாரம் செய்பவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எண்ணிக்கையை வேண்டிக்கொள்ளலாம். அதாவது 3,5, 11, 21, 48, 101 என்ற எண்ணிக்கையில் ஓலைப்பெட்டிகளில் மண் சுமந்து பரிகாரம் செய்யலாம். மேலும் இந்த பரிகாரம் செய்வதால் பாவ வினைகளும், நோய்களும், கஷ்டங்களும் தீரும். செல்வங்கள் சேரும், நினைத்த காரியங்கள் வெற்றி அடையும் என்றும் சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தவர்களுடன் நிலைத்து நிற்கும் என்றும் கூறப்படுகிறது.
41 நாட்கள் கடலில் குளித்தால் தீராத கொடிய நோய்கள் கூட தீரும் என்று சிலர் நம்புகிறார்கள். உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளுக்கு இந்த பரிகாரம் நல்ல பலன் தரும் என்று நம்பப்படுகிறது.
பரிகாரம் முடிந்த பின்னர் கடலிலும், பின்னர் ஆலய எதிரில் உள்ள தெப்ப குளத்திலும் நீராடி, கன்னி விநாயகரை வழிபட வேண்டும். அதன்பிறகே மூலவரான சுயம்புலிங்க சுவாமியின் கருவறைக்குள் நுழைந்து இறைவனை வழிபட்டு மூலஸ்தானத்தை மூன்று முறை வலம் வந்து அர்ச்சனை செய்து கொடி மரத்தைத் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இந்த கோவிலில் நடைபெறும் தைத்திருவிழா மிகவும் விசேஷமானதாகும். இவ்வாண்டு, இந்த திருவிழா பிப்ரவரி 12-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
சிவப்பு சாத்தி உற்சவம் 9-ம்தேதியும், பச்சை சாத்தி உற்சவம் 10-ம்தேதியும், தேரோட்டம் 11-ம்தேதியும், தெப்பத்திருவிழா 12-ம்தேதியும் நடைபெறுகிறது.