
சமீபத்தில் நம் புண்ய பூமியாம் பாரதத்தில் 'பிரயாக்ராஜ்' என்னுமிடத்தில் 'கும்பமேளா' என்னும் உற்சவம் கோலாகலமாக நடைபெற்று முடிவுற்றது. அந்த சமயத்தில் உலகெங்கிலுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கே திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி புண்ணியம் பெற்றார்கள்.
கோலாகலங்களுக்கும் புனித நிகழ்ச்சிகளுக்கும் குறைவில்லாத நம் நாட்டில் நாளை மாசி மகம் என்னும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற இருக்கிறது. மாசி மாதத்தில் மக நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்த நாளை மாசி மகம் என்று கூறுவார்கள். 12 வருடத்திற்கொருமுறை வரும் மாசி மக நாளை மகாமகம் என்று சிறப்பித்து கூறுவார்கள்.
இது கடந்த 2016 அன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி, பிரம்மபுத்ரா போன்ற 12 புனித நதிகள் தங்கள் பாவங்களைத் தீர்த்துக்கொள்ள பிரம்மதேவர் அறிவுரைப்படி கும்பேஸ்வரர் கோவில் மகாமகக் குளத்திற்கு வருவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் லட்சக்கணக்கில் பக்தர்கள் மகாமகத்தன்று அப்பேர்ப்பட்ட புனிதமான குளத்தில் நீராடுவதற்கென்றே கும்பகோணம் வருகிறார்கள். அன்று இந்த குளத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் அழிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
இது பல்வேறு ஆன்மிக சிறப்புகளை உள்ளடக்கிய நாள் என்பதோடு பாவங்களை போக்கி, அளவில்லாத புண்ணிய பலன்களைத் தரும் நாளாகும். மாசி மாதத்தையே கடலாடும் மாதம் என்பார்கள். மாசி மகம் அன்று பல்வேறு கோவில்களிலும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இந்த நன்னாளில் மனிதர்கள் மட்டுமின்றி, தெய்வங்களும் அருகிலுள்ள தீர்த்தத்திலோ, கடலிலோ புனித நீரா£டுவது வழக்கமாக உள்ளது.
இந்த உற்சவம் சிறப்பாக நடைபெறும் இடம் கும்பகோணத்திலுள்ள மகாமகம் குளமாகும். அங்கே புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். அதுமட்டுமல்ல கங்கை உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் கும்பகோணம் மகாமகம் குளத்தில் அன்று எழுந்தருள்வதாக ஐதீகம். அதனால்தான் இந்த நாளில் நீராடினால் நம்முடைய பாவங்கள் நீங்குவதுடன், கங்கை முதலிய புண்ணிய நதிகளின் ஆசிகளும் சேர்ந்தே நமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல மக நட்சத்திரத்தை 'பித்ருதேவ நட்சத்திரம்' என்றும் அழைப்பார்கள். எந்த நல்ல காரியம் நடந்தாலும் பித்ருக்களை வணங்கிவிட்டு தொடங்கினால் அந்த காரியம் தங்கு தடையில்லாமல் நடக்கும். முன்னோர் களுக்கு மாசி மகத்தன்று நீர் நிலைகளுக் கருகில் வைத்து தர்ப்பணம் கொடுப்பதால் ஏழு தலைமுறையில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, நம்முடைய முன்னோர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், நமக்கும் நன்மைகளும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
மாசி மக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை 'பிதுர் மகா ஸ்நானம்' என்கிறது சாஸ்திரம். இந்த மாசி மகம் நாளன்று அனைத்து நீர்நிலைகளிலும் அமிர்தம் கலந்திருப்பதாக ஐதீகம். அதனால் குளம், ஆறும் கடல் போன்ற நீர் நிலைகளில் நீராடுவது அனைத்து பாவங்களையும், தோஷங்களையும் நீக்கிவிடும் என்று கருதப்படுகிறது.
மாசி மகம் என்பது தீர்த்த நீராடலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆகவே நாம் அனைவருமே அருகிலுள்ள ஏதாவது தீர்த்தத்தில் நீராடி நம் பாவங்களைப் போக்கிக்கொண்டு தெய்வத்தின் அருளையும் பெறுவோம்.