நெல்லை நகரின் மத்தியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் நெல்லையப்பர் வரங்களை வாரி வழங்கி பக்தர்களை காக்கிறார். இக்கோவில் மொத்தம் இருநூற்றி ஐம்பது அடி நீளமும் எழுநூற்றி ஐம்பத்தாறு அடிகளும் கொண்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. அம்மன் கோவிலும் சுவாமி கோவிலும் புராணப்படி முதலில் முழுது கொண்ட ராமபாண்டியனாலும் பின் ஏழாம் நூற்றாண்டில் நின்றசீர் நெடுமாறனாலும் கட்டப்பட்டது. ஆலயங்கள் இரண்டும் தனித்தனியாக விளங்கியதால் இடைவெளியை அழகுப்படுத்த எடுத்த முயற்சியின் விளைவாக கி.பி.1647 இல் வடமலையப்பப்ப பிள்ளை இரு கோவில்களையும் இணைக்க விரும்பி சங்கிலி மண்டபத்தை அமைத்தார்.
நெல்லையப்பர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலும் ஆகும். இந்த கோவிலின் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனி கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்கள் இரண்டும் அழகிய கல்மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். அங்குள்ள காந்திமதி அம்மன் ஐம்பத்தோறு சக்தி பீடங்களில் காந்தி பீடமாக திகழ்கிறார். காந்த சக்தி மிகுந்த பிரகாசமாக அம்பிகை விளங்குவதால் இது காந்தி பீடமாகிறது. வியந்து பார்க்க வைக்கும் அழகான கூரை, நுழைவாயிலின் உயரமான மேற்கூரை அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. நெல்லையப்பர் கோபுரம் அதிக உயரம் இல்லாத அகண்ட வடிவில் அமைந்த கோபுரம் ஆகும்.
இந்தக் கோவிலுக்கு இரண்டு புஷ்கரணிகள் உள்ளன. ஒன்று கோவிலின் வெளியே நெல்லையப்பர் சன்னதி சாலையில் சந்திர புஷ்கரணி என்ற பெயரில் தெப்பக்குளம் உள்ளது. மற்றொன்று காந்திமதி அம்மன் சன்னதியில் பொற்றாமரை குளமாக தெப்பக்குளம் விளங்கி வருகிறது. இந்தப் பொற்றாமரை குளத்தில் மாசி மகம் அன்று அப்பர் தெப்ப உற்சவம் நடக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதம் பன்னிரண்டாம் தேதி அன்று அப்பர் பெருமான் தெப்ப உற்சவம் நடக்கிறது. முன்னொரு காலத்தில் சைவ மதத்திற்கும் சமண மதத்திற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சமண மதத்தினர் சைவ சமய குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதிக்கும் பொருட்டு அவரை கல்லில் கட்டி கடலில் போட்டனர் .
அப்போது அப்பர் பெருமான் `கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே` என்று சிவபெருமானை நினைத்து பாடினார். அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலின் மிதந்தது. இந்த தெப்ப உற்சவம் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவனருளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தி இறைவனின் திருகாட்சி பெற்றார் என்ற தத்துவம் விளக்கப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வரும் திருவிழாவாக நடக்கிறது.
அதைத் தொடர்ந்து வரலாற்று தத்துவத்தில் உள்ளபடி திருத்தெப்ப மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் கைலாச பர்வத வாகனத்திலும் அம்பாள் காந்திமதி தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருகாட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெறும். பிறகு அப்பர் பெருமான் வீற்றிருக்கும் தெப்பம் பன்னிரண்டு முறை நீராழி மண்டபத்தை சுற்றி வலம் வந்து அப்பர் பெருமான் மக்களுக்கு காட்சி அளிக்கிறார். அப்பர் தெப்பத்தில் வலம் வரும் திருக்காட்சியை காண்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
(நெல்லையப்பர் கோவில் தல வரலாறு என்ற நூலில் இருந்து தொகுப்பு)