அன்பினாலே மிக மிக விரைவில் திருப்தி பெற்று, அனுகிரஹிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே அவருக்கு 'ஆசுதோஷி' என்று ஒரு பெயர் இருக்கிறது. ஆசுகவி என்றால் கேட்ட உடனே கவி பாடுகிறவர் என்று அர்த்தம். அதுபோல் ஸ்மரித்த மாத்திரத்திலேயே சந்தோஷித்து அனுக்கிரகம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி.
'சிவாய நம' என்ற சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை.
முழு முதற்கடவுளான சிவபெருமானை 'ஓம் நமசிவாய' என்று நாம் சதாகாலமும் சிந்தித்து இருப்பதாலும், மாத சிவராத்திரி மற்றும் சோமவாரமாகிய திங்கள் அன்று 60 நாழிகையும், அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரியை அனுஷ்டிக்கலாம். இதை வார சிவராத்திரி என்றும் கூறுவார்கள். ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு திதிகளில் வரும் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் வேண்டியதை அடையலாம் என்பது மக்களின் நம்பிக்கை .
மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருக்கும்போது பாண்டவர்களுக்கு சிவராத்திரி மகிமையை ஒரு கதைமூலம் வர்ணித்ததாக கூறப்படுகிறது. அது வருமாறு.
இக்ஷ்வாகு குலத்தில் உதித்த மன்னன் சித்திர பானு ஜம்புத் வீபத்தை ஆட்சி புரிகையில் ஒரு சமயம் மகாசிவராத்திரி அன்று தனது மனைவியுடன் உபவாசம் அனுஷ்டித்தான்.
அஷ்டாவக்ர முனிவர் மன்னனின் தர்பாருக்கு விஜயம் செய்தார்.
"மன்னவா! இன்று ஏன் விரதம் அனுஷ்டிக்கிறாய்? "என்று முனிவர் கேட்டார் .
ஏனென்பதை மன்னன் சித்திர பானு விவரித்தான். அவனது பூர்வ ஜென்ம விருத்தாந்தத்தை நினைவு கூறும் ஆற்றல் அவனிடம் இருந்தது.
"முனிவரே! என் முற்பிறவியில் நான் ஒரு வேடனாய் இருந்தேன். எனது பெயர் ஸுஸ்வரன். பறவைகளையும், விலங்குகளையும் கொன்று விற்பதுவே எனது தொழில். ஒரு நாள் காட்டில் விலங்குகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன். அப்பொழுது இரவானதும் இருட்டில் அகப்பட்டுக் கொண்டேன். வீட்டிற்கு திரும்ப முடியாமல் இருக்க இடம் தேடியபோது ஒரு வில்வமரம் கண்ணில் பட்டது. அதில் ஏறினேன். என்றாலும் பசியும், தாகமும் என்னை வாட்டியதால் இரவு முழுவதும் நான் விழித்திருந்தேன். தூங்கி விடாமல் இருக்க அந்த வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து கீழே தரையில் போட்டுக் கொண்டிருந்தேன் .
நான் விழித்திருந்த இரவு சிவராத்திரியாக இருந்திருக்கிறது. ஆதலால் நான் பறித்து போட்ட இலைகள் மரத்தடியில் இருந்து சிவலிங்கத்தின் மீது விழுந்திருக்கிறது. அன்று நான் உணவு எதுவும் அருந்தவில்லை. எனவே என்னை அறியாமலேயே நான் அனுஷ்டித்த சிவராத்திரிதான் எனக்கு சிவலோக வாசத்தை தந்தது.
அந்த ஜென்மம் முடிந்து சிவலோக வாசத்தையும் துய்த்து விட்டு இந்த ஜன்மாவில் நான் சித்ர பானு மன்னனாக பிறந்திருக்கிறேன்" என்று சுருக்கமாக கூறி முடித்தான்.
அதன் பிறகு, காட்டில் சுற்றி அலைந்து கொண்டிருந்த அந்த வேடன் வழி தவறியதால் இரவு முழுவதும் ஒரு வில்வ மரத்தில் ஏறி அமர்ந்திருந்தவன், விலங்குகளால் வரும் ஆபத்தை தவிர்க்க இரவு முழுவதும் கண் விழித்திருந்தவன், பொழுது போகாமல் அம்மரத்தில் உள்ள இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தவன் காலையில் மரத்தை விட்டு இறங்கி தன் இருப்பிடம் நோக்கிச் சென்றான்.
அப்பொழுது எதிரே அந்த நாட்டு மன்னனும் ,மக்களும் பட்டத்து யானையுடன் பூரண கும்பம், மேளதாளங்களுடன் வந்துக் கொண்டிருந்தனர். பட்டத்து யானை யாருக்கு மாலை போடுகிறதோ அவரே இளவரசர் என்பது நாட்டு வழக்கம். நாடு முழுவதும் அலைந்தும் பட்டத்து யானை அரசனை தேர்ந்தெடுக்காததால் மனம் சோர்ந்த மன்னன் புதிய அரசனைத் தேடி காடு நோக்கி வந்து கொண்டிருந்தான் .
எதிரே வந்த வேடனைக் கண்டதும் பட்டத்து யானை மாலையை வேடனுக்கு அணிவித்து அரசனாக்கியது. மனமகிழ்ந்த முதிய மன்னன் புதிய மன்னரோடு அரண்மனை நோக்கிச் சென்றான்.
"முதல் நாள் வரை காட்டில் வேட்டையாடி திரிந்த வேடனுக்கு எப்படி அரசு பதவி கிடைத்தது?" இந்தக் கேள்வியை பரமசிவன் இடத்தில் பார்வதி தேவி கேட்டார்.
அதற்குப் பரம சிவன், "நேற்று இரவு முழுவதும் கண் முழித்தபடி இந்த வில்வ மரத்தில் அமர்ந்திருந்தாலும் அவன் பொழுது போகாமல் மரத்தில் உள்ள வில்வ இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது அவை விழுந்தன. அதனால் அரசு பதவி எனும் யோகம் அவனுக்கு வாய்த்தது," என்றார்.
இது சிவ மகா புராணத்தில் வருகிறது . இதுபோல் சிவராத்திரி சம்பந்தமாக ஏராளமான வேடன் கதைகள் உள்ளன. இவற்றின் தாத்பரியத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
"சடங்குகளுடன் கூடிய ஸ்நானம், மற்றும் தூபதீப நைய்வேத்தியம் ஆகியவற்றை செய்வதை விட சிவராத்திரி அன்று பக்தர்கள் உபவாசம் இருப்பதுதான் எனக்கு அதிக மகிழ்ச்சி தருகிறது" என்று ஓர் இடத்தில் பரமசிவன் பார்வதி தேவியிடத்தில் கூறியுள்ளார். 'உபவாசம் என்றால் இறைவனது உணர்வில் ஒன்றி இருத்தல்' என்பதே பொருள். இதுதான் பீஷ்மர் வர்ணித்த சிவராத்திரி.
சிவம் என்றாலே மங்களம் என்பது பொருள். சிவத்தை சாதாரண நாட்களில் வழிபட்டாலே மங்களம் கிடைக்கும். அந்த மங்களத்தைப் பெற,
சிவகாயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி |
தன்னோ ருத்ர: ப்ரசோதயாத்||
என்று ஸ்லோகம் கூறி பிரார்த்தித்து இறை சிந்தனையில் மூழ்கி முழு பலனையும் அடைவோமாக!
.