மஹோன்னத பலன்களைத் தரும் மகாளய பட்ச வழிபாடு!

Mahalaya Patcham
Mahalaya Patcham
Published on

றிவிற்சிறந்த ஆன்றோர்களான நம் முன்னோர்கள் நாம் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமைகளில் முதன்மையான கடமையாக பித்ருக்கடனை குறிப்பிடுகிறார்கள். அதற்கென்று ஆண்டில் மகாளய பட்சம் என்று 15 நாட்களையும் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதை பித்ருபட்சம் என்றே குறிப்பிடுகிறார்கள். பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பௌர்ணமிக்குப் பின்னர் வரும் 15 நாட்களை குறிப்பதாகும். புரட்டாசி மாதம் தேய்பிறை பிரதமை தொடங்கி (சில வருடங்களில் ஆவணி மாதம் பௌர்ணமி அடுத்த பிரதமை தொடங்கி) 15 நாட்கள் நாம் முன்னோர்களை வரவேற்கும் மகாளய பட்சம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த வருடம் மகாளய பட்சம் இன்று பிரதமை திதி முதல் வரும் அக்டோபர் 1ம் தேதி சதுர்த்தசி வரை கடைபிடிக்கப்படுகிறது. அக்டோபர் 2ம் தேதி மகாளயபட்சத்தின் முடிவில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை என்றே சிறப்பித்து சொல்கிறார்கள்.

நம் பித்ருக்கடனைத் தீர்க்க உதவுதற்காக இந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் நம்மைக் காண பூலோகம் வருவதாக ஐதீகம். இந்த மகாளய பட்சத்தில் யமதர்மனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக நம்மைக் காண வருகிறார்கள் என்றும் கருட புராணம் கூறுகிறது. மகாளய பட்சம் 15 நாட்களும் நம்மைத் தேடி வரும் முன்னோர்களை மகிழ்விக்க தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளை செய்து பசுக்கள், காகங்களுக்கு அவர்கள் நினைவாகக் கொடுக்க வேண்டும். இதைத்தவிர அன்னதானம், வஸ்திர தானம் முதலியவைகளும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நமக்கு ஆசி அளிப்பார்கள்.

தர்ப்பணத்தில் விடுகின்ற எள் மற்றும் தண்ணீரை ஸ்வேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்து விடுகிறாள் என்றும் சொல்லப்படுகிறது. நாம் முறைப்படி தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் இறைத்தால் நம் முன்னோர்கள்  தாகமும் பசியும் தீர்ந்து திருப்தியோடு திரும்பவும் தங்கள் லோகத்திற்கு செல்வார்களாம். அப்படிப் போகும்போது தங்கள் வாரிசுகளை வாழ்த்தி வரங்கள் கொடுத்து விட்டுச் செல்வார்களாம். நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும் தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த மகாளய பட்ச காலத்தில் செய்யப்படும் எல்லா தான தர்மங்களுக்கும் பித்ருக்களின் ஆசியும் சேர்ந்தே கிடைக்குமாம். இந்த 15 நாட்களிலும் நம் முன்னோர்களை வழிபட்ட பின்பே நம் நித்திய பூஜை புனஸ்காரங்களை செய்ய வேண்டும். பதினைந்து நாட்களும் செய்ய முடியாவிட்டாலும், தங்கள் தந்தையின் திதி தினத்தன்றாவது  மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில் நாம் செய்யும் எந்தக் காரியத்திற்கும், உதாரணமாக ஒரு கோயிலுக்குப் போவது, விளக்கேற்றுவது, தான தர்மங்கள் செய்வது போன்ற எந்த ஒரு காரியத்திற்கும் தெய்வத்தின் ஆசிர்வாதத்தோடு பித்ருக்களின் ஆசிர்வாதமும் சேர்ந்தே கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
பக்தரின் பெருமையை உலகுக்கு உணர்த்த பெருமாள் செய்த லீலை!
Mahalaya Patcham

சுப காரியத்தடை, வாரிசு இல்லாதது, தீராத நோய், திடீர் விபத்துகள், துர்மரணங்கள் இவை எல்லாவற்றிற்கும் பித்ரு தோஷமும் ஒரு முக்கியக் காரணமாகும். இந்த மகாளய புண்ய காலத்தில் வீடு தேடி வரும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடைபெற ஆரம்பிக்கும்.

மகாளய பட்ச திதிகளில் எந்தெந்த நாளில் திதி கொடுத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

பிரதமை - செல்வச் செழிப்பு, துவிதியை - வம்ச விருத்தி ஏற்படுதல், திரிதியை -  நல்ல இல்வாழ்க்கை, சதுர்த்தி - எதிரிகள் தொல்லை விலகும், பஞ்சமி - பொருட்கள் சேருதல், சஷ்டி -  செல்வாக்கு, மதிப்பு கூடும், சப்தமி -  பெரியோர்கள் ஆசி, அஷ்டமி - நல்லறிவு வளரும், நவமி -  நல்ல வாழ்க்கைத்துணை அமையும், தசமி -  எல்லா விஷயங்களிலும் தடைகள் நீங்கும், ஏகாதசி -  கல்வி, கலைகளில் சிறப்பு, துவாதசி -  விலை உயர்ந்த ஆபரணங்கள் சேரும், திரயோதசி -  நன்மக்கள் பேறு, சதுர்த்தசி -  கணவன், மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும், அமாவாசை - வயதில் மூத்தவர்கள், தேவர்கள், ரிஷிகளின் ஆசி கிடைக்கும்.

முறையாக தர்ப்பணம் செய்ய இயலாத வயதானவர்கள் சூரிய பகவானை வணங்கி கிழக்கு நோக்கி நின்று வலது கையில் எள் எடுத்து பின்னர் தூய நீரைக் கொண்டு சூரியனை பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும். இவ்வாறு விட்ட நீரை பின்பு கடல், ஆறு, ஏரி, குளத்தில் விட்டு விடலாம்.

இன்று ஆரம்பிக்கும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் வழிபாட்டை எல்லோரும் தவறாமல் 15 நாட்கள் செய்து நம் முன்னோர்களின் வரங்களையும் ஆசிகளையும் பெறுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com