வாழ்வில் உண்டாகும் பிரச்னைகளுக்கு ஆட்படும் மனிதர்களுக்கு மன அமைதி தருவதே ஆன்மிகத்தின் நோக்கம். இறைவனை வழிபட நவ வித பக்திகளைச் சொல்கிறது இந்து மதம். இந்த ஒன்பது வித பக்திகளின் மூலம் இறைவனை வழிபட்டு கடவுளின் பேரருளைப் பெறலாம். அந்த ஒன்பது வித பக்திகளின் பெருமைகளை இந்தப் பதிவில் காண்போம்!
1. சிரவணம் - கேட்டல்: ஒருசிலருக்கு கோயில்களுக்கு செல்லவோ, வீட்டில் பூஜை செய்யவோ நேரமில்லாமல் இருக்கும். கடவுள் இதுதான் செய்ய வேண்டும் என்று யாரையும் நிர்பந்திப்பதில்லை. உங்களுக்குப் பிடித்த கடவுளர் பெருமைகளை காதால் கேட்டு நெஞ்சில் நினைத்தாலே சிறப்பு.
2. கீர்த்தனை - வேண்டுதல்: வாழ்வில் எத்தனையோ தடைகள், கவலைகள் வருவது இயற்கை. இதற்குத் தீர்வாக நம்பிக்கையுடன் இறைவனின் நாமங்களை சொல்லி வேண்டுதல் என்பது ஆன்மிகம் சொல்லும் சிறந்த பக்தி வழி.
3. ஸ்மரணம் - நினைவுறுத்திக் கொள்ளுதல்: பலவித பணிகளில் மூழ்கி இருக்கும் நாம், இறை சிந்தனையின்றி நேரத்தைக் கடத்துவோம். அப்படியில்லாமல், நமக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அல்லது வேலை நடுவே சிறு இடைவெளி கிடைத்தாலும் இறைவனை நினைத்து பக்தியோடு மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்.
4. பாத சேவனம் - பாதங்களை தஞ்சமடைதல்: ஆலயங்களுக்குச் சென்றவுடன் நமது கண்கள் முதலில் தரிசிக்க வேண்டியது கடவுளின் பாதங்களைத்தான். ‘இறைவா உனது பாதங்களே இனி என் தஞ்சம்’ என அவன் திருவடிகளைப் பற்றி தஞ்சமடைவது எளிய பக்தி வழி.
5. அர்ச்சனை - பூஜை: தெய்வத்துக்கு அர்ச்சனைகள், அதாவது பூஜைகள் செய்வதை பின்பற்றுபவர்களைப் பார்த்தால் எந்நேரமும் அதைப் பற்றிய சிந்தையுடனே செயல்படுவர். பூஜைகள் கடவுளிடம் நமது நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.
6. நமஸ்காரம் - வணங்குதல்: பெரியவர்களைக் கண்டால் வணங்குதல் என்பது அவர்கள் மீதான மரியாதையைக் காட்டும் செயல். இதே மரியாதையுடன் தெய்வத்தின் மீதான பக்தியையும் தெரிவிக்கும் வழிதான் வணங்குதல்.
7. தாஸ்யம் - சேவை: கடவுளின் பக்தர்களுக்கு செய்யும் சிறிய சேவையும் கடவுளுக்கே சேவை செய்தது போன்று மனதை மகிழ வைக்கும் என்பது உண்மை. ஆலயங்களுக்குச் சென்று சற்று நேரமாவது அங்கு வரும் பக்தர்களுக்கு தேவைப்படும் சேவைகளில் ஈடுபடுவது கடவுளுக்கு செய்யும் சேவை போல பக்தி வழிகளில் ஒன்று.
8. ஸக்யம் - நட்பு: மனதுக்கு நெருக்கமாக இருப்பது நட்பு. இறைவனை நெருங்க முடியாத தொலைவில் வைத்து ஆராதிப்பதை விட, மனதுக்கு நெருக்கமான நட்பாக கருதி வழிபடுவது சிறப்பான பக்தி.
9. ஆத்ம நிவேதனம் - தன்னையே இறைவனுக்கு சமர்ப்பித்தல்: வாழ்வின் இடையறாத பணிகளுக்கு மத்தியில் மேற்சொன்ன பக்தி வழிகளை பயிற்சி செய்வதனால் நிச்சயம் நம்மையே இறைவனிடத்தில் சமர்பிக்க முடியும். இதை உணரும்போது இதைவிட பேரின்பம் இல்லை என்றும் உணர்வோம்.