மங்காத மாங்கல்ய பாக்கியம் தரும் சாவித்திரி நோன்பு!

காரடையான் நோன்பு (14.03.2024)
Mangatha Maangalya Bhakkiyam tharum Savithri Nonbu!
Mangatha Maangalya Bhakkiyam tharum Savithri Nonbu!

மிழகத்தில் சுமங்கலிப் பெண்கள் நோற்கும் மிக முக்கியமான நோன்புகளில் ஒன்று 'சாவித்திரி நோன்பு.' மகாபதிவிரதையான சாவித்திரி தனது கணவன் சத்தியவானின் உயிரை எமதர்மராஜன் பறித்துச் சென்றபோது அவன் பின்னாலேயே சென்று அவனிடம் உருக்கமாகவும் சாமர்த்தியமாகவும் உரையாடி தனது கணவன் உயிரை மீட்ட தினத்தையே இந்த நோன்பாக விரதம் இருந்து வழிபடுகின்றனர்.

மாசி மாதம் முடிந்து பங்குனி ஆரம்பிக்கும் வேளையில், அதாவது மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் சாவித்திரி தனது கணவன் சத்தியவான் உயிரை மீட்கும் நிகழ்வு நிகழ்ந்தது. அதனால் சரியாக அதே வேளையில் வருடா வருடம் ‘உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் நோற்றேன். ஒருக்காலும் என் கணவர் பிரியாமல் இருக்கணும்!’ என்று சொல்லி மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் 'காரடையான் நோன்பு' நோற்று சரடு கட்டிக்கொள்வது  தமிழகத்தில் பழக்கம். கார்காலத்தில் விளைந்த அரிசியில் அடை செய்து சாவித்திரி நோன்பு நோற்று கடவுளுக்கு தனது கணவன் உயிரைத் திரும்பக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தாளாம். அதனால் இந்த நோன்பிற்கு, 'காரடையான் நோன்பு' என்று பெயர் வந்தது.

இந்த சத்தியவான் சாவித்திரி புராணக்கதை சிவபுராணத்தில் உள்ளது. இதை பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது மார்கண்டேய முனிவர் திரௌபதிக்கு எடுத்துரைக்கிறார். நாட்டை எதிரிகளிடம் இழந்த சால்வ நாட்டு மன்னர் துயுமத்சேனன் தன் மனைவி, மகன் சத்தியவானுடன் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கும் அவரது மனைவிக்கும் கண் பார்வையும் போய் விடுகிறது.  மந்திர நாட்டு மன்னன் அசுவபதியின் மகள் சாவித்திரி, தான் மணமுடிக்க ஏற்ற இளவரசனைத் தேடி சத்தியவான் தங்கியிருந்த காட்டுப் பகுதிக்கு வந்தாள். சத்தியவானைக் கண்டதும் தனது இதயத்தை அவனிடம் பறி கொடுத்தாள்.  மணந்தால் சத்தியவானைத்தான் மணப்பேன் என்று தனது தந்தையிடம் கூறும்போது அந்த நேரத்தில் அங்கு வந்த நாரதர், "இன்றிலிருந்து பன்னிரண்டு மாதங்களுக்குள் சத்தியவான் இறந்து விடுவான்" என்று கூறுகிறார். ஆனால், சாவித்திரி திடமான மனதுடன் தான் மனதில் வரித்த சத்தியவானையே மணந்து கொண்டு காட்டிலேயே வசித்து வருகிறாள்.

சத்தியவான் இறப்பு பற்றிய ரகசியம் அவனுக்குத் தெரியாது. ஆனால், சாவித்திரிக்கு அவன் இறக்கும் நாள் நெருங்கி விட்டது என்பது தெரிந்ததால், அவன் எங்கு சென்றாலும் அவனுடனேயே செல்கிறாள். அவன் தனது கண் பார்வையிலேயே இருக்கும்படி பார்த்துகொண்டு, அதேசமயத்தில் அவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி இறைவனை பிரார்த்தித்துக் கொண்டும் இருக்கிறாள்.

அன்று விறகு வெட்ட காட்டிற்குச் சென்ற சத்தியவான் சாவித்திரியின் மடி மீது தலை வைத்து உயிர் துறந்தான். சத்தியவானின் உயிரை எடுத்துச் செல்ல வந்த எமதூதர்களால் பதிவிரதையான சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தை நெருங்க முடியவில்லை. அதனால் எமதர்மராஜாவே அந்த உயிரை எடுத்துச் செல்ல வர வேண்டியதாயிற்று.

தனது கணவனின் உயிரை எடுத்துக் கொண்டு சென்ற எமதர்மராஜனை ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்த சாவித்திரி தான் பதிவிரதை என்பது உண்மையானால் சத்தியவான் உயிரை திருப்பிக் கொடுத்து விடுமாறு கண்ணீருடன் வேண்டுகிறாள்.  ஆனால், எமதர்மராஜா, "உயிர் போவது என்பது விதி முடிந்த செயல். ஆகவே, அந்த காரியத்தை செய்வதே எனது தர்மம், கடமை" என்று பதிலுரைக்கிறார்.

சாவித்திரி விடாமல் பிடிவாதமாக அவரைப் பின்தொடரவே அவள் மேல் இரக்கம் கொண்ட எமதர்மராஜா, அவளுக்கு ஒரு வரம் கொடுப்பதாகச் சொல்கிறார். ஆனால், சாமர்த்தியமாக, "இறந்தவனின் உயிரைத் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் கேள்" என்கிறார்.

உடனே சாவித்திரி, "எனக்கு நூறு பிள்ளைகள் பிறந்து அவர்கள் என் மாமனாரின் தேசத்தை ஆள்வதை என் கணவனின் பெற்றோர் தனது கண்களால் பார்க்க வேண்டும்" என்கிறாள்.

இதையும் படியுங்கள்:
அமர்நாத் குகை அதிசய பனி லிங்க ரகசியம்!
Mangatha Maangalya Bhakkiyam tharum Savithri Nonbu!

இந்த இடத்தில்தான் சாவித்திரி என்னும் பெண்மணியின் புத்திசாலித்தனம், சாமர்த்தியம், சமயோஜித புத்தி எல்லாவற்றையும் நாம் பார்க்கிறோம். இழந்த தேசத்தை தனது மாமனார் திரும்பப் பெறவும், அவர்கள் கண் பார்வை மீண்டும் கிடைக்கவும், தான் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து நூறு பிள்ளைகள் பெறவும் ஒரே வரத்தில் கேட்டுப் பெறுகிறாள்.

அவளின் விடாமுயற்சியும் பதிவிரதத் தன்மையும் எமதர்மராஜனின் மனதை இளகச் செய்ய, அவ்வாறே வரம் கொடுத்து சத்தியவானின் உயிரை திரும்பக் கொடுக்கிறார். மனமகிழ்ந்த சாவித்திரி இறைவனுக்கு நன்றி தெரிவித்து ஒரு நோன்பு நோற்கிறாள். மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் இந்த நிகழ்வு ஏற்பட்டதால், வருடந்தோறும் அந்த நேரத்தில் சுமங்கலிப் பெண்கள் நோன்பு நோற்று என்றென்றும் தனது கணவர் தன்னோடு சேர்ந்து வாழ வேண்டிக்கொள்ளும்  பழக்கம் ஏற்பட்டது.  இந்த வருடம் மாசியும் பங்குனியும் கூடும் நேரம் இன்று வியாழக்கிழமை காலை 11.30 முதல் 12.00 மணிக்குள் என்பதால், அந்த நேரத்தில் சுமங்கிலிப் பெண்கள் நோன்பு நோற்று சரடு கட்டிக்கொள்வது மாங்கல்ய பாக்கியத்தைப் பெருக்கும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com