திருப்பதி, ஸ்ரீரங்கத்தில் கூட இல்லாத ரகசியம்! மன்னார்கோவில் வேதநாராயணர் கோயிலின் அற்புதம்!

Mannarkoil Temple - வேதநாராயணர் கோயில்
Mannarkoil Temple - வேதநாராயணர் கோயில்AI Image
Updated on

திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மன்னார்கோவில்.பசுமையும் எழிலும் கொஞ்சும் இந்த பூமியில் அமைந்துள்ளது சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பிரமாண்ட ஆலயம். வேதநாராயணர் பெருமாள் கோயில்.

இத்தலத்தில் பிருகு முனிவரும் மார்க்கண்டேய மகரிஷியும் தவமிருந்து பெருமாளை வழிபட்டு, அருள் பெற்றனர் என்கிறது தலபுராணம். வேதபுரி, ராஜேந்திர விண்ணகரம் என்றும் இத்தலம் முற்காலத்தில் அழைக்கப்பட்டது. காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே திருவரங்கம் திருத்தலம் இருப்பது போல், தாமிரபரணிக்கும் கடனா நதிக்கும் நடுவே அமைந்துள்ளது இந்தக் கோயில்.

மேலும் குலசேகர ஆழ்வார், இத்தலத்து இறைவனை வழிபட்டு அவரின் பேரழகில் திளைத்து, இங்கேயே தங்கி கைங்கர்யங்கள் பலவற்றிலும் ஈடுபட்டு ஆலயத்தை நிர்வகித்தார் என்கிறது கோயில் வரலாறு.

பிறகு இந்தப் பெருமாளின் திருவடி நிழலிலேயே பரமபதம் அடைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இங்கே குலசேகர ஆழ்வாருக்குக் கொடிமரத்துடன் கூடிய தனிச்சந்நிதி ஒன்று அமைந்துள்ளது, சிறப்பானது.

மூலவரான ஸ்ரீதேவி- பூதேவி சமேத வேதநாராயண பெருமாள், மூலிகைகளால் செய்யப்பட்ட வர்ணக் கலாப திவ்விய திருமேனியராக, சுதை வடிவில் தரிசனம் தரு கிறார்.தனிக்கோயிலில் ஸ்ரீவேதவல்லித் தாயாரும், ஸ்ரீபுவனவல்லித் தாயாரும் காட்சி தருகின்றனர். இங்கே, பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்களுக்குச் சந்நிதிகள் உள்ளன.

Mannarkoil Temple - வேதநாராயணர் கோயில்
Mannarkoil Temple - வேதநாராயணர் கோயில்AI Image

தலபுராணம்: பராந்தக சோழனுக்கு மனதில் இருந்த ஒரே குறை தன் தேசத்தை ஆள வாரிசு இல்லையே என்பதுதான். அப்போது முனிவர் ஒருவர் அவனின் மனக்குறையை அறிந்து அவனுக்கு அறிவுரை வழங்கினார். 'தெற்கில் புண்ணிய நதியாம் பொருநை நதி பாய்கிற தேசத்தில், திருமாலுக்கு ஆலயம் எழுப்பி வழிபடு. குழந்தை பாக்கியம் கிடைக்கும்’ என அருளினார்.

அதன்படி தெற்கே வந்த சோழன் பொருநை நதியின் அழகிலும் இயற்கைச் சூழலிலும் மயங்கி அங்கேயே பெருமாளுக்கு ஓர் ஆலயம் எழுப்பினான். அந்தப் பெருமாளுக்கு நாளும் சேவை செய்துவந்தவனுக்கு அடுத்த ஆண்டே பிள்ளை வரம் கிடைத்தது என்கிறது தலபுராணம்.

இக்கோயிலின் சிறப்பம்சமே அதன் அஷ்டாங்க விமானம்தான். அதாவது, ஒன்றுக்கு மேல் ஒன்றாக அமைந்துள்ள மூன்று கருவறைகள். தரைத்தளத்தில், விஷ்ணு பகவான் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அதற்கு நேர் மேலே, முதல் தளத்தில் பகவான் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.

அதன் மேல், இரண்டாம் தளத்தில் பகவான் சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார். மேல் தளம் மிகவும் அழகானது, ஏனெனில் அதன் சுவர்களிலும் கூரைகளிலும் சேர மன்னர்களால் சேர்க்கப்பட்ட நுணுக்கமான மரச் சிற்பங்கள் உள்ளன.

பொதுவாக பெருமாள் சந்நிதிக்கு எதிரில் காட்சி தரும் கருடாழ்வார், இங்கே உத்ஸவருக்கு அருகில் காட்சி தருவது சிறப்பு என்கின்றனர், இங்குள்ள உற்சவரின் திருநாமம் ஸ்ரீராஜகோபால ஸ்வாமி.

சிவாலயங்களில் தெற்கு நோக்கி காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி. சில சிவனும் பெருமாளும் இணைந்து காட்சி தரும் ஆலயங்களிலும் காட்சி தருவதுண்டு. ஆனால், பெருமாள் கோயிலிலான இங்கு அதன் கோயில் விமானத்தின் உச்சியில் தெட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். தனி சன்னதியில் காட்சி தராமல் தெட்சிணாமூர்த்தி கோயில் கோபுரத்தில் காட்சி தருவது வேறு எங்கும் இல்லாதது.

இதையும் படியுங்கள்:
சிறப்பு மரபுகள், வினோத நைவேத்தியங்கள், அற்புத கட்டிடக்கலை: தமிழ்நாட்டின் அரிய சிவாலயங்களின் தொகுப்பு!
Mannarkoil Temple - வேதநாராயணர் கோயில்

ஒலி எழுப்பும் சடாரி விளங்கும் வேதநாராயணர் கோயில் அதிசயம்:

வைணவக் கோயில்களில் சடாரியை தலையில் வைத்து ஆசீர்வதிப்பார்கள். ஆனால், மன்னார் கோவில் வேதநாரயணர் கோயிலில் உள்ள சடாரி வித்தியாசமானதாகும். இதை தலையில் வைக்கும் போது சடாரிக்குள் இருக்கும் பரல்கள் அசைந்து ஆடி ஒலி ஏற்படுத்தும். முற்காலத்தில் இந்த சடாரியை எடுத்து கொண்டு வரும்போது ஏற்படும் ஒலியைக் கண்டு பேசிக் கொண்டு இருக்கும் பக்தர்கள் "இறைவன் வருகிறார்" என்று அமைதியாக இருப்பார்களாம். இதற்காகவே இப்படிப்பட்ட சடாரியை உருவாக்கி உள்ளனர். இப்படிப்பட்ட சடாரியை திருப்பதி, ரங்கம் போன்ற பிரபலமான வைணவ தலங்களில் கூட காண இயலாது.

மூலவர் சந்நிதிக்கு எதிரில் பிள்ளைத் தொண்டுப் பாதை உள்ளது. சிறிய துளை போன்ற இந்தப் பாதையில், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் நுழைந்து, பெருமாளைப் பிரார்த்தித்தால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதிகம். மண்டப விதானத்தில், 12 ராசிகளுக்கும் உரிய கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

ஸ்ரீவேதநாராயணரை, புரட்டாசியில் வந்து வணங்கினால், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கலாம். திருமணத் தடை அகலும்; வியாபாரம் சிறக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

logo
Kalki Online
kalkionline.com