
மாசி என்றாலே, நினைவிற்கு வருவது மாசி மகமும், காரடையார் நோன்பும்தான்.
மாசி மகம், புதிய கலைகள் கற்க, மந்திர உபதேசம் பெற, புனித நீராட, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்றதாகும்.
தான, தர்மங்கள் மற்றும் சிறுவர்களுக்கு உபநயனங்களைச் செய்வதற்கு உகந்தது மாசி.
மாசியில் பெண்கள் விரதமிருந்து வழிபட்டால், தாலி பாக்கியம் பலம் பெறும். அதனால்தான் மாசியில் வரும் 'காரடையார் நோன்பு' அன்று பெண்கள் விரதமிருந்து, இறைவனை மனதார வழிபட்டு, அடையையும், வெண்ணெயையும் வைத்து, 'உருக்காத வெண்ணெயும், ஓரடையும் நான் வைத்தேன். ஒருக்காலும் என் கணவர் என்னை பிரியாதிருத்தல் வேண்டும்' என்று கூறி நிவேதனம் செய்து, கழுத்தில் நோன்புச்சரடை கட்டிக்கொள்வது வழக்கம்.
மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து, பூமியைப் பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்த அசுரனை வதம் செய்து பூமியை மீட்ட நாள் மாசி மகமாகும்.
மாசியில் வரும் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் "மாசி மகம்' என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் விசேடமானது. மக நட்சத்திரம், அதுவும் மாசி மாதம் வரும் மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜகத்தினை ஆள்வார்களெனக் கூறுவதுண்டு.
பிரகலாதனைக் கொல்வதற்காக, நய வஞ்சகமாக வந்த ஹோலிகா எனும் அரக்கி தீயில் வெந்து சாம்பலான நிகழ்வு நடந்தது மாசி பௌர்ணமியில்தான்.
சிவபெருமான், தனது 63 திருவிளையாடல்களை நிகழ்த்தியதுவும், அடி-முடி காண முடியாத லிங்கோத்பவராகவும் காட்சியளித்தது மாசியில்தான்.
மாசி மக நாளில்தான், தனது தந்தை சிவபெருமானுக்கு, முருகர் பிரணவ மந்திரத்தை உபதேசித்தாரென புராணம் கூறுகிறது.
மாசி மகமன்று திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி கோவிலுள்ள பொற்றாமரைக் குளத்தில், "அப்பர் தெப்பம்" திருநாவுக்கரசருக்காகவும், மாசி மக பிரம்மோத்ஸவ தேர்த்திருவிழா, தென்காசி விஸ்வநாதர் கோயிலிலும் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
மாசி மக நாளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் கடற்கரைகள் மற்றும் திருக்குளங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி, கடவுளை வணங்கி புனித நீராடுவது வழக்கம். காவிரி துலா கட்டத்தில், கொள்ளிடக்கரையில், தீர்த்தவாரி நிகழ்வு விமரிசையாக நடைபெறும்.
மாசியை, பசக்கென்ற பாசி மாதிரியென்று கூறுவது வழக்கம்.