

ஒவ்வொரு வருடமும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவபெருமானின் நடராஜ வடிவத்தை வழிபடக்கூடிய சிறப்பான வைபவமே ஆருத்ரா தரிசனம் ஆகும். இது பிரபஞ்சத்தின் படைப்பான காத்தல், அழித்தல், சுழற்சியைக் குறிக்கிறது.
சிதம்பரம் நடராஜா் ஆலயம், உள்ளிட்ட பல சிவாலயங்களில் சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனை மற்றும், களி உடனான பிரசாதங்கள் வைத்து நைவேத்தியம் செய்து இந்த வைபவம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷமானது துன்பங்கள் நீக்கி, மகிழ்ச்சி வளம் தருவதாக நம்பப்படுகிறது.
இந்த தினம் சிவபெருமானின் பிரபஞ்ச நடனமான ஆனந்த தாண்டவத்தை கொண்டாடுவதாக பொருள்படுகிறது. திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சதிரமாகும். ஆதிரையான் என சிவபெருமானை அழைப்பதும் உண்டு.
சிவபெருமானின் தியானத்தை காமதேவன் குழப்பியதால் சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணால் காமதேவனை சாம்பலாக்கிவிட்டாா். பின்னர் காமதேவனின் மனைவி ரதி தேவி, சிவபெருமானிடம் கணவரை மீட்டுத் தருமாறு வேண்டுகிறாள். பின்னர் சிவபெருமான் தனது அருளால் காமதேவன் திருவாதிரை நாளில் மறுபடியும் உயிா் பெற்றதாக நம்பப்படுகிறது. இதுவே திருவாதிரை நாளில் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
மாா்கழி மாத பெளா்ணமியும், திருவாதிரை நட்சத்திரமும் இணையும் நாளே திருவாதிரை நாளாகக் கொண்டாடப்படுகிறது. மாதங்களில் சிரேஷ்டமான மாா்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் அனுசரிக்கப்படுகிறது. சிவாலயங்களில் அன்றைய தினம் சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனை செய்து களியும் காய்கறிகள் பலவும் சோ்த்து திருவாதிரை கூட்டும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
‘திருவாதிரை ஒரு வாய்க்களி’ என்பாா்கள். ஆக, உலக நன்மைகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஆருத்ரா தரிசன நாளில் சிவபெருமானை மனதார பிராா்த்தனை செய்து சிவபெருமானின் அருளைப் பெறுவோம்!