

பொதுவாக மார்கழி மாதம் என்பது தேவ மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் ஆன்மிக வளர்ச்சிக்கும், பக்திக்கும், இறைவனை வழிபடுவதற்கும் ஒதுக்கப்பட்ட காலம் என்பதால், உலகியல் இன்பங்களை குறைத்து இறை சிந்தனையில் ஈடுபட வேண்டும் என்று ஆன்மிக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி இது தேவர்களின் விடியற்காலை என்பதால், இந்த நேரத்தில் எளிய முறையில் பக்தி செலுத்தி வாழ்வில் வளம் பெறலாம்.
இந்த மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் (சூரிய உதயத்திற்கு முன்) எழுந்து நீராடி, தூய உடையணிந்து உள் அமைதியுடன் திருப்பாவை, திருவெம்பாவை, ஆன்மிகச் சொற்பொழிவுகள், பக்திப் பாடல்கள் கேட்பது, ஆண்டாள் பாடல்களை பாடி இறைவனை வழிபடுவது மிகவும் புண்ணியம் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.
இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் எவ்வளவு முக்கியத்துவமானதோ அதேபோல் இந்த மாதத்தில் செய்யும் ஆன்மிக தவறுகள் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
தெரியாமல் கூட மார்கழி மாதத்தில் இந்த ஆன்மிக பாவங்களை செய்து விடக்கூடாது. அப்படி செய்தால் உங்கள் வீட்டில் இருந்து மகாலட்சுமி வெளியேறுவாள் என்பது ஐதீகம்.
* மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை நேரத்தில் அதாவது பிரம்ம முகூர்த்த வேளையில் தூங்கக்கூடாது. ஏனெனில் இந்த நேரம் லட்சுமி கடாட்சம் நிறைந்த நேரம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனெனில் இந்த நேரத்தில் திதி, வார, நட்சத்திர தோஷங்கள் இல்லை. தேவர்கள், மகாலட்சுமி, மகாவிஷ்ணு போன்ற தெய்வங்களின் பார்வை இந்த நேரத்தில் பூமியில் விழுவதால், இந்நேரத்தில் எழுந்து வழிபடுபவர்களுக்கு துன்பங்கள் நீங்கி, செல்வங்கள் பெருகும்.
* இந்த மாதத்தில் மங்கள நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும். இந்த மாதத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், காது குத்தல், புதுமனை புகுவிழா, போன்ற மங்களகரமான சுபகாரிகங்களை திட்டமிடக்கூடாது. ஏனெனில் இது ஆன்மிக வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்ட மாதம் என்பதால் புதிய தொடக்கங்கள் தடைகளைத் தரலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த மாதத்தில் செய்யும் நல்ல விஷயங்கள் தீமையான விளைவுகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. சூரியன் பலவீனமாக இருக்கும் காலம் என்பதால் இந்த மாதத்தில் செய்யும் செயல்கள் நீண்ட நாள் பலனை தராது.
* இந்த மாதம் முழுவதும் வீட்டில் அசைவம் சமைப்பதையோ, சாப்பிடுவதையோ தவிர்ப்பது நல்லது. இது தெய்வ மாதம் என்பதால் அசைவம் சாப்பிடுவது பாவமாக கருதப்படுகிறது.
* அதிகாலை வேளையில் வீடு இருளில் இருக்ககூடாது. குறைந்தது ஒரு விளக்காவது எரிய வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் வீட்டை இருட்டில் வைக்காமல், அதிகாலையிலேயே ஒளிமயமாக வைத்து, இறைவழிபாடு செய்வது மரபாகும்.
* இந்த மாதத்தில் ஒத்திக்கு வீடு பார்ப்பது, வாடகை வீடு மாறுவது என்று எதுவும் செய்யக்கூடாது. ஆன்மிக ரீதியாக, மார்கழியில் வீட்டைப் பார்ப்பது, வாடகைக்கு மாறுவது போன்ற வேலைகளில் மனதை அலையவிடாமல், ஆன்மிகத்தில் முழு சிந்தனையுடன் கவனம் செலுத்தி அமைதியாக இருப்பது நல்லது.
* இந்த மாதத்தில் புதிதாக விதைகளை வாங்கி எதுவும் பயிர் செய்யக்கூடாது. காரணம், இந்த மாதத்தில் விதை சரியான உயிர்த்தன்மையை பெற்று வளராமல் போகலாம் என்றும், பயிர் வளர்ச்சிக்கு உகந்த சூழல் இல்லாததால், மார்கழியில் விதைத்தால் மகசூல் குறையும் என்றும் நம்பப்படுகிறது.
* புதிதாய் அலுவலம் குடியேறுதல் மற்றும் புதிய தொழில் செய்ய நினைப்பவர்கள் இந்த மாதத்தில் தொடங்கக்கூடாது. அப்படி துவங்குவதால் வெற்றி பெறுவதில் தடைகள் ஏற்படும்.
* வீட்டில் புதிதாக சாமி சிலைகள் வாங்கி வந்து வைப்பதையும் மார்கழி மாதத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
* ஆனால் புதிய வாகனம் வாங்குவதையும், பதிவு செய்வதையும் தவிர்க்க வேண்டும். அதாவது இந்த மாதத்தில் உங்களுக்கு விருப்பமான வாகனம் அல்லது மனைக்கு முன்பணம் மட்டும் கொடுத்து வைத்து தை மாதத்தில் முழுபணத்தையும் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.
* இந்த மாதத்தில் கடனை திரும்பி கொடுத்தால் கடன் கூடிய விரைவில் அடையும். மார்கழி மாதத்தில் மைத்ர முகூர்த்தம் போன்ற நல்ல நேரங்களில் கடன் திருப்பிச் செலுத்தினால் கடன் தொல்லைகள் நீங்கி, பணப் பிரச்சனைகள் குறையும். மீண்டும் கடன் தொல்லை ஏற்படாது.
சுருக்கமாக, சொன்னால் மார்கழி மாதத்தை ஆன்மிக மற்றும் பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாதமாக மக்கள் கருதுவதால், புதிய முயற்சிகளைத் தவிர்த்து, இறைவழிபாட்டில் கவனம் செலுத்துகிறார்கள்.