

கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தரபெருமாள் கோயில் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ள திருநல்லூரில் உள்ளது பஞ்சவர்ணேஸ்வரர் கோயில், இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் லிங்கம் காலையில் சூரியன் உதிப்பதற்கும், மாலையில் சூரியன் மறைவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆறு நாழிகைக்கு ஒருமுறை வண்ணம் மாறுகின்றார். இறைவன் ஐந்து முறை நிறம் மாறுகின்றார். அதனால் இறைவன் ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்ற திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார்.
இங்குள்ள மூலஸ்தானத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். சிவனுக்கு வலது பக்கத்தில் பிரம்மனும், இடது பக்கத்தில் விஷ்ணுவும் நின்ற கோலத்தில் உள்ளனர். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பை காண்பது அரிது. பெருமாள் கோயில்களில்தான் ஜடாரியை பக்தர்களின் தலையில் வைக்கும் பழக்கம் உள்ளது. அதுபோல், சிவத்தலமான இங்கும் சிவனின் பாதம் பொறித்த ஜடாரியை பக்தர்களின் தலையில் வைக்கிறார்கள்.
இத்தலத்தின் மேற்கு கோபுர வாயில் மேல்புறம், பலிபீட வடிவில் கணநாதர் வீற்றிருக்கிறார். இந்த வடிவத்துடன் இத்தலத்திலும், காசியிலும் மட்டுமே கணநாதர் வழிபடப்படுகிறார். கணநாதரை இவ்வூரின் காவல் தெய்வம் என்கிறார்கள். இவருக்கு மார்கழி மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரமும், திதியும் சேரும் நாளில் இரவில் பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜை எப்போது நடக்கும் என்று உறுதியாக கூற முடியாது. காரணம் ஜோதிடர்கள் கணித்து கூறும் முடிவுக்கு ஏற்ப இந்த பூஜை நடக்கும்.
ஆண்டுக்கொருமுறை இங்கு இரவில் நடக்கும் கணநாதர் பூஜை சிறப்பானது. அன்றைய தினம் இந்த ஊரிலும், பக்கத்து ஊரிலும் உள்ள மக்கள் தங்கள் பசு, ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே கொடுத்து இந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையை பக்தர்கள் பார்க்க முடியாது. பூஜை நடக்கும் இரவு 11 மணிக்குள் தயாரிக்கப்படும் அதிரசம் மற்றும் வடைகள் இரண்டு கூடைகளில் அடுக்கப்படுகிறது. இவற்றில் 3000 அதிரசம் மற்றும் வடைகள் இருக்கும்.
பக்தர்கள் கொண்டு வந்த பாலில் அரிசியை வேக வைத்து 11 பானைகளில் பாயசம் தயாரிக்கப்படுகிறது. இந்த நாளில் அவ்வூரில் கறக்கப்படும் பாலில் ஒரு சொட்டு கூட வீட்டில் மற்றும் வெளியே பயன்படுத்தக் கூடாது என்பது நடைமுறையில் உள்ளது. ஒரே ஒரு அர்ச்சகர் மட்டும் சிலரது உதவுடன் பட்சணக் கூடைகளையும், பாயச பானைகளையும் கணநாதர் இருக்கும் இடத்தில் இரவு 11 மணி அளவில் வைத்து விடுவார். இதை எடுத்துச் செல்லும்போது யாரும் பார்க்கக் கூடாது. அன்று ஊருக்குள் சலங்கை சப்தம் கேட்கும். இது கணநாதர் பக்தர்களால் தரப்பட்ட இந்த உணவை ஏற்க வருவதாக ஐதீகம். மறுநாள் காலையில் இந்த பலகாரங்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
அப்போது தரப்படும் விபூதியை மாடுகளுக்கு பூசினால் அவற்றுக்கு நோய் ஏற்படாது என்பது ஐதீகம். ஒரு காலத்தில் இவ்வூரில் இருந்த மாடுகள் நோய்வாய்ப்பட்டு இறந்து கொண்டே இருந்தன. அதை தடுப்பதற்காகவே இந்த பூஜை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பூஜைகள் செய்தால் பயிர்கள் செழிப்பாக வளரும் என்பது நம்பிக்கை.