திருமணம் என்பது எல்லோர் வாழ்விலும் கட்டாயம் நடந்தே தீர வேண்டியவற்றில் ஒன்று. ஒருவருக்கு இருபத்தைந்து வயது ஆனாலே போதும், பார்ப்பவர்கள் எல்லாம், ‘எப்போ கல்யாண சாப்பாடு போட போறே’ என்ற கேள்விகள் சொல்லம்புகளாக இதயத்தைத் துளைக்கும். அதுவரைக்கும் சிட்டுக்குருவி போல் சந்தோஷமாகப் பறந்து கொண்டிருந்த மனம், சிறகொடிந்த பறவை போல் ஆகிவிடும். அடுத்து என்ன உடனே பெற்றோர்கள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு நல்ல ஜோசியரின் வீட்டுக்கு படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். ‘இந்த பரிகாரம் செய்யுங்கள், அந்தப் கோயிலுக்கு போங்கள்’ என்று பரிகாரத்தை சொல்வார்கள். இது மாதிரியான பல விஷயங்களைச் செய்தும் திருமணம் கைகூடி வரவில்லையா? இருக்கவே இருக்கு மருதாணி இலை. ‘என்னடா இது, திருமணத்திற்கும் மருதாணிக்கும் என்ன சம்பந்தம்?’ என்று நினைக்கிறீர்களா? அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சென்னை, குரோம்பேட்டை கணபதிபுரத்தில் உள்ளது செங்கச்சேரி அம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சிறிய பரிகாரம் ஒன்றை செய்துப் பாருங்கள், விரைவில் உங்கள் வீட்டில் கல்யாண கெட்டிமேளச் சத்தம் நிச்சயம் கேட்கும்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மாலை நேரத்தில் இந்தக் கோயிலுக்குள் நுழைந்தால்போதும், ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வரிசையில் நிற்பார்கள். எதற்காக இவர்கள் இப்படி நிற்கிறார்கள் என்ற ஆச்சரியம் உங்களுக்குள் எழும். கோயில் கருவறையில் செங்கச்சேரி அம்மன் திருவிளக்கின் வெளிச்சத்தில் பேரழகோடு ஜொலித்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அம்மனின் அருகே தட்டில் மருதாணி இலை வைக்கப்பட்டிருக்கும்.
திருமணம் என்னும் பந்தத்தில் நுழைய அதுதான் நுழைவுச்சீட்டு. ஆமாம், அந்த இலையால்தான் அம்மனுக்கு அர்ச்சனை நடைபெறும். இந்த பூஜையில்தான் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் கலந்து கொள்வார்கள். பூஜை முடிந்த பிறகு அர்ச்சகர் தரும் மருதாணி இலைகளை அரைத்து வலது உள்ளங்கையில் மட்டும் இட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் இதை உபயோகிக்கக் கூடாது. மீதமுள்ள இலைகளை பூச்செடியில் சேர்த்து விட வேண்டும். இப்படித் தொடர்ந்து மூன்று பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் உள்ளங்கையின் சிவப்பு நிறம் மறைவதற்குள் வாழ்க்கைக் துணையின் கையை பிடித்து விடலாம்.
இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், அம்மனின் வலது புறத்தில் கடிதப் பெட்டி ஒன்று இருக்கும். நாம் எப்படி பிறருக்கு செய்தி அனுப்ப தபால் பெட்டியைப் பயன்படுத்துகிறோமோ அதுபோல்தான் இதுவும். நமது வேண்டுதல்களை எழுதி அதில் போடலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்தில் அந்தக் கடிதங்கள் அம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்படும். பிறகு, பக்தர்களின் முன்னிலையில் படித்து கூட்டுப் பிரார்த்தனை செய்வார்கள். இதற்கு சக்தி அதிகம் என்பதால் உடனடியாக உங்களது வேண்டுதல்களை அம்மன் ஏற்று அருள்பாலிப்பார்.