‘மயிலையே கயிலை; கயிலையே மயிலை’ எனும் சிறப்பு பெற்றது சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் திருக்கோயில். சிவஸ்தலங்களில் மிகவும் சிறப்புப் பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விசேஷ விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் பங்குனி மாதத்தில் எடுக்கப்படும் பங்குனி பிரம்மோத்ஸவ பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவைக் காண உலகம் முழுவதும் இருந்து சிவ பக்தர்கள் மயிலைக்கு வருகை தருவது வழக்கம். இந்தப் பத்து நாட்களும் சிவலோகம் போல் காட்சி தரும் கபாலீஸ்வரர் திருக்கோயிலை தரிசிக்க காணக் கண்கள் இரண்டு போதாது. அதேபோல், பக்தர்களின் வசதிக்காக இந்தப் பத்து நாட்களும் திருக்கோயில் நடை 24 மணி நேரம் திறந்தே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மயிலாப்பூர் கிராம தேவதையான கோலவிழி அம்மனை வழிபட்டு இந்த பெருவிழா தொடங்கப்பட்டது. தொடர்ந்து வருடாந்திர பங்குனி பிரம்மோத்ஸவ பத்திரிக்கை கோலவிழி அம்மன் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, இன்று கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது.
நேற்று வெள்ளிக்கிழமை (15.03.2024) அன்று தொடங்கிய இந்த பிரம்மோத்ஸவ பெருவிழா, இம்மாதம் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உத்ஸவம் வரும் 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.
அதைத் தொடர்ந்து, 23ம் தேதி காலை திருஞானசம்பந்தர் எழுந்தருளல் மற்றும் பூம்பாவைக்கு அருளல் நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணிக்கு வெள்ளி விமானத்தில், இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு திருக்காட்சி அருளல் வைபவம் நடைபெறும்.
மார்ச் 24ம் தேதி பிச்சாடனர் கோலம் காணும் சுவாமி, மார்ச் 25ம் தேதி தீர்த்தவாரி உத்ஸவம் காண்கிறார். அன்றைய தினம் இரவு 7.45 மணிக்கு திருக்கல்யாண வைபவ உத்ஸவம் நடைபெற உள்ளது. மார்ச் 25ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு அம்பாள் மயில் வடிவில் சிவ பூஜை செய்யும் வைபவமும், அதைத் தொடர்ந்து இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சுவாமி மற்றும் அம்பாளுக்கு விசேஷ திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. அதன் பிறகு தீபாராதனையுடன் நவராத்திரி மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் அதையடுத்து இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமி கயிலாய பர்வத வாகனத்தில் எழுந்தருளி திருவீதி புறப்பாடு நடைபெற உள்ளது.
இந்த பங்குனி பிரம்மோத்ஸவ பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் சார்பாக பத்து நாட்களும் பல்வேறு பூஜை மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விழாவின் கடைசி நாளான மார்ச் 27ம்தேதி கொடி இறக்கத்துடன் மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில் பங்குனி பெருவிழா இனிதே நிறைவு பெற உள்ளது.