ஒரு நாள் மார்கழி மாதம் விடியற்காலை கோவிலுக்கு சென்று இருந்தேன். என்னுடன் சேர்த்து ஒரு 25 பேர் விஸ்வரூப தரிசனம் காண காத்திருந்தனர்.
தரிசனத்திற்கு வந்தவர்களில் சிலர் கண் பார்வை இல்லாதவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்தது அனைவரையும் வியக்க வைத்தது. நாங்கள் நின்றிருக்கும் எதிர் திசையில் அவர்கள் நின்றிருந்தனர்.
விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள் என்பதை நம்முள் பலரும் அறிவோம்.
அதாவது இறைவனை அபிஷேகம் செய்வதற்கு முன்னர் அவரது முந்தைய நாள் அலங்காரத்தில் தரிசிப்பது.
அப்போது எங்கள் பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் அர்ச்சகரிடம் "ஸ்வாமி .... நாங்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்துள்ளோம். திரை விலக்கப்பட்டதும் எங்களால் சுவாமி தரிசனம் பார்க்க இயலும். ஆனால், பார்வயற்ற இவர்களால் எப்படி பார்க்க இயலும்? அதுவும் இந்த காலை வேளையில்? அப்படியிருந்தும் வந்திருக்கிறார்களே?" என்று கேட்டார்.
அர்ச்சகர், பதில் கூறினார்:
"நீங்கள் நினைப்பது தவறு. நம்மை விட பகவானை அவர்கள் தான் அதிகம் உணர முடியும். சாதாரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்ப்பதை 'தரிசனம்' என்கிறோம். அதாவது நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம். ஆனால், இறைவன் நம்மை பார்ப்பது 'விஸ்வரூப தரிசனம்' என்பார்கள்.
காலை முதன் முறையாக தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும் தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அப்போது அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அதுதான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. இப்போது இந்த விஸ்வரூபத்தில் பகவானை இவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் பகவான் இவர்களை பார்ப்பார் அல்லவா? 'இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும், இறைவன் நம்மை பார்க்கட்டும்' என்று இவர்கள் வந்திருக்கிறார்கள்," என்றார்.
காலம் காலமாக கோவிலுக்குச் செல்பவர்களுக்குக் கூட விஸ்வரூப தரிசனத்தின் இப்படி ஒரு பொருள் தெரியுமா? பலருக்கும் தெரியாது என்றே தோன்றுகிறது. ஆனால் பார்வையற்றவர்கள் ஒரு பேருண்மையை உணர்ந்து அவரை வணங்க வந்திருக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து மெய் சிலிர்த்தோம்.