மீனாட்சி திருக்கல்யாணத்தில் யாருக்கு முதல் மாங்கல்யம்? பலரும் அறியாத 'பிரியாவிடை' அம்மன் ரகசியம்!

சுந்தரேஸ்வரருடன் இருக்கும் பிரியாவிடை அம்மன் பற்றி இதுவரை பலரும் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.
meenakshi-amman-thirukalyanam
meenakshi-amman-thirukalyanam
Updated on

சுந்தரேஸ்வரருடன் இருக்கும் இந்த பிரியாவிடை அம்மன் பற்றி பலருக்கும் தெரியாது. வெறுமனே ஒரு சிலையாக அல்லாமல், மதுரையின் ஆன்மீக வாழ்வியலில் ஒரு அங்கமாக விளங்கும் இந்தப் பிரியாவிடை அம்மன் பற்றி இதுவரை பலரும் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் தான். மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் தான் பலருக்கும் தெரியும். ஆனால் பிரியாவிடை அம்மன் பற்றி பலருக்கும் தெரியாது. மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது மணமேடையில் சுந்தரேஸ்வரருக்கு இடது பாகத்தில் இருக்கும் அம்மன் யார் என பலருக்கும் சந்தேகம் இருக்கும்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மூலஸ்தானத்தில் சொக்கநாதருக்கு அருகில் மறைவாக இந்த பிரியாவிடை அம்மன் சிலை இருக்கும். மீனாட்சி அம்மன், பிரியாவிடையின் மானிட அவதாரமாகவே பார்க்கப்படுகிறார்.

சிவபெருமான் தனக்குள் அம்பிகையை ஐக்கியப்படுத்தி சிவசக்தி சொரூபமாக அருளுவதை வெளிப்படுத்த, சிவனுக்கு இடதுபுறத்தில், பெரும்பாலும் பக்தர்களின் பார்வைக்கு மறைவான இடத்தில் இவர் இருப்பார்.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானையும் சந்திர பகவானையும் ஒருசேர தரிசித்த பலனைத் தரும் மூன்றாம் பிறை வழிபாடு!
meenakshi-amman-thirukalyanam

பெரும்பாலான சிவன் கோவில்களில், மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கத்தின் ஆவுடை (பீடம்) அம்பிகையின் அம்சம் என்பதால், அதையே 'பிரியாவிடை' என்று குறிப்பிடுவதும் உண்டு.

மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்று சொன்னாலும் சுந்தரேஸ்வரருக்கு அருகில் இரண்டு அம்மன்கள் இருப்பார்கள். அதாவது சுந்தரேஸ்வருக்கு பக்கத்தில் ஒரு அம்மனும், தனியாக ஒரு அம்மனும் இருப்பார்கள். மீனாட்சி திருக்கல்யாணமாக இருந்தாலும் சுந்தரேஸ்வரர் தனக்கு பக்கத்திலேயே இருக்கும் பிரியாவிடை அம்மனுக்குத்தான் முதலில் திருமாங்கல்யம் அணிவிப்பார். அதற்கு பிறகு தனியாக இருக்கும் மீனாட்சி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிப்பார்.

இதற்கு ஒரு ஆன்மிக கதை சொல்லப்படுகிறது..

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருமணத்தை காண முக்கோடி தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என அனைவரும் மதுரைக்கு வந்தார்கள். மீனாட்சி திருமணம் என்றதும் மதுரை நகர் விழாக்கோலம் பூண்டுவிட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்பதால் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் உள்ளனர். திருமணத்திற்கு நாள் குறித்தது முதல் மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறைந்து காணப்பட்டது. மீனாட்சியிடம் உறுதி அளித்த நாளில் நானே நேரில் வந்து திருமணம் செய்து கொள்வேன் என்று சுந்தரேசுவரராகிய சிவபெருமான் கூறியிருந்தார்.

அதன்படி புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சி தரும் சிவபெருமான் அன்று மணக்கோலத்தில் சுந்தரேசுவரராக மதுரைக்கு மாப்பிள்ளையாக வந்தார்.

திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான், தேசசேனா உடனும் பவளக்கனிவாய் பெருமாளும் நேரில் வந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். இதுதவிர வியாக்ரபாதர், பதஞ்சலி மகரிஷி உள்ளிட்ட முனிவர்கள் இறைவனின் திருமண கோலத்தை காண மணமேடையில் காத்து இருப்பார்கள். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும்போது கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் சுவாமியுடன் உடன் இருப்பார். அவர் சுந்தரேசுவரரை விட்டு ஒரு கணமும் பிரியாத அம்மன். அதனால்தான் அந்த அம்மனுக்கு பிரியாவிடை அம்மன் என்று பெயர் வந்தது.

மீனாட்சி அம்மனுக்கு பட்டத்தரசியாக மக்களை காக்கும் பொறுப்பு அதிகம் இருக்கிறது. அதேநேரத்தில் தன்னுடைய கணவரையும் பாதுகாக்க வேண்டும். கணவரின் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான் பிரியாவிடை அன்னையாக காட்சி தருகிறாள். ஆட்சியையும் மக்களையும் கவனிக்கும் தன்னால் கணவனையும் கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலை மீனாட்சி அம்மனுக்கு வந்திருக்கிறது.

அதனால்தான் பிரியாவிடை உருவத்தில் சொக்கநாதருடன் கூடவே உற்சவ அன்னையாக பிரியாவிடை நாயகியாக வலம் வருகிறார்.

அந்த வகையில் சொக்கநாதருடன் இருக்கும் பிரியாவிடை நாயகி பார்வதி தேவியே ஆவார். சிவனை விட்டுப் பிரியாதவள் என்பதால், 'பிரியாவிடை' (பிரியா + விடை/இடை) என்று அழைக்கப்படுகிறார். பார்வதி தேவியின் மற்றொரு வடிவமே இவர். அதாவது பிரியாவிடை என்பது பார்வதி தேவியே. இவள் சிவனை விட்டு பிரியவே மாட்டாள் என்பதால் இந்த பெயர். அவளது மானிட அவதாரமே மீனாட்சி. எனவே இருவரும் ஒருவர் தான். நிலை ஆற்றம், இயங்கு ஆற்றல் என இருசக்தி இருப்பதாக அறிவியல் கூறுகிறது. பார்வதிதேவி, சிவனோடு இருக்கும் போது நிலைசக்தியாகவும், தனித்து இருக்கும்போது இயங்கு சக்தியாகவும் (பக்தர்களுக்கு நேரில் வந்த அருளும் தொழில்) இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் தனி சிறப்பு என்ன தெரியுமா?
meenakshi-amman-thirukalyanam

பொதுவாக அனைத்து சிவத்தலங்களிலும் உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தர் (சிவன், உமை, முருகன்) இருப்பார். ஆனால் மதுரையில் மட்டும் இறைவனுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் இந்தப் பிரியாவிடை அம்மன் தனிச்சிறப்பு வாய்ந்தவர்.

logo
Kalki Online
kalkionline.com