
மனதில் எண்ணிய காரியம் வெற்றி பெற வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசையும், இலட்சியமும் ஆகும். ஆனால் நம் முயற்சிகளுடன் இறை அருள் சேர்ந்தால்தான் அந்த காரியங்கள் நிறைவேறுகின்றன. இதற்காக பல ஆன்மிக வழிபாடுகள் பலராலும் அனுபவிக்கப்பட்டு பின்பற்றப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது தான் ஆஞ்சநேயரின் வால் வழிபாடு.
மனதில் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்றால், முதலில் குலதெய்வத்தை மனதில் வைத்து வீட்டிலிருந்தே பக்தியுடன் வணங்க வேண்டும். இதுவே ஒரு நல்ல துவக்கம். அதற்குப்பின், காரிய தடைகளை நீக்கி எப்போதும் வெற்றியை வழங்கும் ஆஞ்சநேயரை நம்பிக்கையுடன் வழிபட வேண்டும்.
ஆஞ்சநேயர் போல வீரமும், பக்தியும் மிகுந்தவர் வேறு யாரும் இல்லை. அவர் ராம நாமத்தை முழுமையாக ஏற்று வாழ்ந்தவர். இன்றும் கலியுகத்தில் ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் அவர் அருள் பொழிந்து வருகிறார். அந்த நாமத்தை சொல்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் அவர் அருள்பாலித்து வருகிறார்.
அவர் மாருதி, வாயுபுத்ரன், அஞ்சனை மைந்தன் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். இருப்பினும், 'ஆஞ்சநேயர்' என்றாலே ஒரு கம்பீர உணர்வு ஏற்படுவது என்னவோ நிதர்சனம்!
ஆஞ்சநேயரின் வால் வழிபாடு
வீட்டில் உள்ள ஆஞ்சநேயரின் படத்தை வைத்து வாலுக்கு வழிபாடு செய்யலாம். ஒரு நல்ல நாள், குறிப்பாக சனிக்கிழமை அதிகாலை எழுந்து, ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவிக்கவும். அவரை சந்தனம், குங்குமம் வைத்து பக்தியுடன் வணங்க வேண்டும்.
பிறகு, அவரது வால் நுனியில் 'ஸ்ரீ ராம ஜெயம்' என்ற மந்திரத்தை மனதிலே சொல்லிக்கொண்டு ஒரு நாளுக்கு ஒரு பொட்டு சந்தனம் அல்லது குங்குமம் வைக்க வேண்டும். அனுமன் நாமம் தெரியாதவர்கள் இந்த எளிய மந்திரத்தை படிக்கலாம்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்
இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து பக்தியுடன் செய்ய வேண்டும். இந்த நாட்களில் உடலிலும் மனதிலும் சுத்தம் பராமரிக்கப்பட வேண்டும். கடைசி நாளில் இந்த வழிபாட்டை முடிக்கும் போது நம் எண்ணம் நிறைவேறும் என நம்பப்படுகிறது.
நம் காரியம் நிறைவேறியவுடன், ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து, 'ஸ்ரீ ராம ஜெயம்' எழுதப்பட்ட மாலையை சமர்ப்பிக்க வேண்டும். இது நம் நன்றியைத் தெரிவிக்கும் ஒரு சிறந்த வழிமுறையாகும்.
நம்பிக்கையுடன் செய்யப்படும் ஒவ்வொரு வழிபாடும் நம்மை ஒரு நல்ல பாதையில் நடத்தும். ஆஞ்சநேயரின் வால் வழிபாடு என்பது, எளிய முறையில் இறைவனிடம் நம் எண்ணங்களை சமர்ப்பிக்கும் ஒரு சிறந்த வழி. இந்த வழிபாடுகளை நம்பிக்கையுடன், மனநிறைவுடனும் செய்ய வேண்டும். அப்போது நினைத்த காரியம் நிச்சயமாக நிறைவேறும்.