ஒரே நாளில் மூன்று கோலத்தில் காட்சி தரும் அதிசய முருகன் கோயில்!

Andarkuppam Murugaperuman
ஆண்டார்குப்பம் முருகப்பெருமான்https://www.devoteesmedia.com

திருவள்ளூரில் இருந்து சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவில் ஆண்டார்குப்பம் திருத்தலத்தில் உள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில். இக்கோயிலில் முருகப்பெருமான் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும் ஒரே நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருவது ஆச்சரியமாக உள்ளது.

முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்து காட்சி தந்த தலம் என்பதால் இத்தலம், ‘ஆண்டியர் குப்பம்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் ஆண்டார் குப்பம் ஆனதாகச் சொல்கிறார்கள். ஆளும் தோரணையில் முருகப்பெருமான் இருப்பதாலும் இப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. முருகப்பெருமானுக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. அதிகார தோரணையில் இருப்பதால் இவரை அதிகார முருகன் என்றும் அழைப்பார்கள்.

மூலவர் முருகப்பெருமான் தனது கரங்களில் எந்த ஆயுதங்களையும் ஏந்தாமல் இடுப்பில் கரங்களை வைத்துபடி அருள்கிறார். மூலவர் சன்னிதிக்கு எதிரில் பிரம்மன் நீள்வட்ட சிலை வடிவில் அருள்பாலிக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. பிரம்மனுக்கு உரிய தாமரை, கமண்டலம், அட்சர மாலை மட்டும் இருக்கிறது.

இந்த ஆலயத்திற்கு வந்த முருகப்பெருமான் அடியவர் ஒருவர் இக்கோயில் குளத்தில் நீராட நினைத்தார். அங்கிருந்த ஆண்டிகளிடம், ‘இங்கே நீராடும் இடம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘அப்படி தீர்த்தம் எல்லாம் இந்த ஆலயத்தில்’ கிடையாது என்றனர். அப்போது ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்த முருகப்பெருமான் தீர்த்தம் இருக்கும் இடத்தை காட்டுவதாக கூறி அவரை அழைத்துச் சென்றார். பின்னர் ஓரிடத்தில் தன்னிடம் இருந்த வேலால் குத்தினார். அந்த இடத்தில் இருந்து நீர் பெருக்கெடுத்து வந்து குளமாக மாறியது. அதுவே இங்கு வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டில் திருமணமா? இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்!
Andarkuppam Murugaperuman

ஒரு சமயம் கயிலாயம் வந்த பிரம்மன் சிறுவன் என்பதால் முருகப்பெருமானை அலட்சியம் செய்தார். பிரம்மனுக்கு பாடம் கற்பிக்க நினைத்த முருகப்பெருமான் அவரிடம், படைக்கும் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் பிரணவத்தின் பொருளைக் கேட்டார். பிரம்மனுக்கு பிரணவத்தின் பொருள் தெரியவில்லை. இதையடுத்து, பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்ததோடு, தானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். பிரம்மனிடம் கேள்வி கேட்டபோது அதிகார தோரணையில் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக்கொண்டிருந்த தோற்றத்தில் முருகப்பெருமான் இத்தலத்தில் காட்சி தருகிறார்.

பொறுப்பான பதவிகள் கிடைக்க, அதிகாரம் உள்ள பதவியில் இருப்பவர்களின் பணி சிறக்க, புத்திசாலித்தனமான பிள்ளைகள் பிறக்க பக்தர்கள் இக்கோயிலில் வழிபாடு செய்கிறார்கள். கோரிக்கை நிறைவேறியதும் முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்தும் சந்தனக் காப்பு சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com