
கந்தகோட்டம் முருகன் கோவிலில், 17 ஆம் நூற்றாண்டில் அக்கோவில் நிர்வாகிகள் ஒரு பஞ்சலோச உற்சவ சிலையை செய்ய முயற்சி செய்தனர். சிறந்த சிற்ப வல்லுனர்கள் இரவு பகலாக உழைத்து அழகிய மின்னும் முருகர் சிலையை வார்த்து எடுத்தனர். ஆனால், வார்க்கப்பட்ட சிலையின் சூடு அடங்குவதற்கு முன்பே வெளியே எடுத்து விட்டனர். அதனால் சிலையில் சிறு பிசுருகள் இங்கும் அங்கும் தெரிந்தன.
அதை சரி செய்வதற்கு தலைமை சிற்பி முயற்சித்தார். ஆனால் அவர் சிலையை தொட்டதும் உடல் முழுவதும் தீயால் சுடுவது போல வலி ஏற்பட்டது. வலியால் துடித்து மயங்கி விழுந்தார். அவரை தண்ணீர் தெளித்து எழுப்பிய போது சிலையை பார்த்து நடுக்கிய அவர், 'இது சாதாரண சிலையல்ல. தெய்வசக்தி நிறைந்த இந்த சிலையை தொடவே பயமாக இருக்கிறது' என்று கூறி சிலையை வணங்கினார்.
இதைக் கேட்ட நிர்வாகிகள் பயந்தனர். பின் பிசுருகளுடன் சிலையை வைத்து திருவிழா நடத்த முடியாது என்று அச்சிலையை ஒரு அறையில் பூட்டி வைத்தனர். இரண்டு ஆண்டுகள் கழித்து வேதத்தில் ஞானம் பெற்ற பண்டிதர் ஒருவர் காசியில் இருந்து வந்தார். கோவில் நிர்வாகிகளிடம் உற்சவர் சிலையை அவர் காண விரும்புவதாக கூறினார்.
கோவில் பணியாளர்கள் அச்சிலையின் ரகசியத்தை பற்றி அவரிடம் விவரித்தனர். ஆனால், பண்டிதர் எதற்கும் பயப்படவில்லை. அறையை திறந்து சிலையை பார்த்ததும் மெய்சிலிர்த்துப் போனார். 'நீங்கள் புண்ணியசாலிகள். மூலவரின் அருள் சக்தி இந்த உற்சவர் சிலையிலும் உள்ளது' என்று கூறினார். இச்சிலையை உளியால் செதுக்க முடியாது. ஆனால் ஆத்ம சக்தியால் சுத்தம் செய்ய முடியும் என்று கூறினார்.
பிறகு சிலையை சுற்றி திரையை கட்டிவிட்டு மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தார். அப்போது பிசுருகள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழுந்து சிலை முன்பைக் காட்டிலும் நன்றாக பளபளப்பாக ஜொலித்தது. இந்த சிலையின் தெய்வீக சக்தியை புரிந்து பக்தர்கள் இன்றும் இவரை காண்பதற்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.