

அமாவாசை என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான நாள் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினம் மிகவும் முக்கியமானதாக இந்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி, புரட்டாசி, தை மாதம் வரும் அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். அந்த வகையில் நாளை தை அமாவாசை வருகிறது.
சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்யும் உத்தராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை இது. இந்த அமாவாசை, மௌனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. தேவர்களுக்கு பகல் பொழுது தொடங்கும் காலம் என்பதால் இந்நாளில் செய்யப்படும் வழிபாடு இரட்டிப்பு பலனை தரும் என்று சொல்லப்படுகிறது. வருடத்தில் வரும் 12 அமாவாசைகளில் உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் இந்த மௌனி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மார்க்கண்டேயனுக்காக எமனை ஈசன் காலால் உதைத்து அவனுக்கு என்றும் 16 என்ற சிரஞ்சீவி வரத்தை அருளியதும் ஒரு தை அமாவாசை நாளில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் எமன் பயம் போக்கி ஆயுள் விருத்தியாகும்.
அந்த வகையில் தை அமாவாசை நாளை (ஜனவரி 18-ம்தேதி) ஞாயிற்று கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 01.20 மணிக்கு துவங்கி, ஜனவரி 19ம் தேதி அதிகாலை 02.31 வரை அமாவாசை திதி உள்ளது.
தை அமாவாசை அன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் தம் சந்ததிகளுக்கு நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.
தை அமாவாசை அன்று அன்னதானம் செய்வதும், காகத்திற்கு உணவு வைப்பதும், முன்னோர் ஆசிகளை பெற்றுத்தரும். இந்நாளில் விரதம் அனுஷ்டிப்பவர்களின் குழந்தைகள் பிரகாசமான வாழ்க்கையை அடைவார் என்பது ஐதீகம்.
ஞாயிற்று கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராடி நண்பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்து முடிக்கலாம். பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது புண்ணியமாகும். இதுவே திதி கொடுக்க உகந்த நேரமாகும்.
காசி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புனித தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது மிகவும் புண்ணியம் நிறைந்ததாக கூறப்படுகிறது.
அமாவாசை அன்று வீட்டில் அசைவ உணவுகளை சமைக்கவும் கூடாது, உண்ணவும் கூடாது. ஏனென்றால், முன்னோர்களை வழிபாடும் நாளான அமாவாசை அன்று அசைவ உணவுகளை சமைக்க கூடாது என்பது ஐதீகம்.
அமாவாசை அன்று தலைமுடி வெட்டுதல், நகம் வெட்டுதல் போன்ற செயல்களை செய்ய கூடாது.
அமாவாசை நாட்களில் மது, போதை பொருட்களை வாங்குவதும், சாப்பிடுவதும் பலவிதமான தீமைகளை அளிக்கும்.
அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் போன்ற பித்ருகர்ம காரியங்கள் செய்யாதவர்களுக்கு பித்ருதோஷம், பித்ரு சாபம் ஏற்படும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற நாளாக குறிப்பிட்ட சில அமாவாசைகள் சொல்லப்படுகிறது.
அன்றைய தினம் வீட்டின் வாசலில் பித்ரு தர்ப்பணம் முடியும் வரை கோலம் போடக்கூடாது.
தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்தி வைக்க வேண்டும்.
தர்ப்பணம் முடிந்த பின்னர் தினசரி பூஜைகளை செய்யலாம்.
தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை பிறரிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.
நீரில் நின்று கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. கரையில் நின்று நீரில் தர்ப்பணம் செய்யக்கூடாது.
இந்த நாளில் வஸ்திர தானம், உணவு தானம் ஆகியவை மிக சிறந்தது.
தாய், தந்தை இல்லாத ஆண்களும், கணவர் இல்லாத பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.
தை அமாவாசை நாளில் எண்ணெய் வாங்குவது, தலைக்கு எண்ணெய் வைப்பது, எண்ணெய் தேய்த்து குளிப்பது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக எண்ணெய் தானம் செய்வது மிக நல்லது. இது சனி பகவானுடன் தொடர்புடைய நாள் என்பதால் அமாவாசை நாளில் எண்ணெய் வாங்கினால் சனி தோஷம் ஏற்படும்.
தை அமாவாசையில், உப்பு, மஞ்சள் ஆகிய மங்கல பொருட்களை வாங்குவது பித்ரு தோஷம் ஏற்பட செய்து விடும்.