
மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகின்றன. வழக்கமாக வரும் அமாவாசைகளில், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் என்பது ஐதீகம்.
தை அமாவாசை 2025:
தற்போது தை பிறந்த நிலையில், ஜனவரி 29ம் தேதி புதன்கிழமை நாளில் தை அமாவாசை வருகிறது. ஜனவரி 28ம் தேதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 07.21 வரை அமாவாசை திதி உள்ளது.
திதி கொடுக்க உகந்த நேரம்:
ஜனவரி 29ம் தேதி இரவு வரை நேரம் இருப்பதால் அன்று முழு நாளும் திதி கொடுக்கலாம்.
வாழ்க்கையில் பல நேரங்களில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். அதற்கான காரணத்தை நம்மால் அறிய முடிவதில்லை. ஒரு நபர் பெரும் தொல்லைகளால் சூழப்பட்டு, அதற்கு பித்ரு தோஷம் மிக முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. எனவே, முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கும், செழுமைக்கும் குறைவிருக்காது. அதேசமயம் உங்கள் முன்னோர்கள் கோபமாக இருந்தால், ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்குமாம். எனவே, ஏதோ ஒரு நாளில் பித்ரு தோஷம் நீங்க சிலவற்றை செய்வதை விட, ஆண்டு முழுவதும் பல சிறப்பு தேதிகளில் வழிபாடு செய்வது மிகவும் முக்கியம். அதுவும் அமாவாசை நாட்களில் முன்னோர்கள் பூலோகத்திற்கு வருவதாகவும், நம்மை ஆசிர்வதிப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த நாட்களில் கட்டாயம் அவர்களை மகிழ்விப்பது அவசியமாகும்.
பித்ரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?
இந்த நாளில் முன்னோர்களுக்கு நீர், நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது நல்லதாகும். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. மேலும் அந்த நாளில் காகத்திற்கு படையல் போடுவதும் முன்னோர்களை மகிழ்ச்சியாக்குவதற்கு எளிய வழியாகும். இப்படி செய்வதன் மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து உங்கள் வம்சத்தையே ஆசிர்வதிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.