
திருக்கழுக்குன்றம் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது தாழக்கோயில். இத்தலத்தில் அருளும் பக்தவத்சலேஸ்வரர் சன்னிதியில் வீற்றிருக்கும் திரிபுரசுந்தரி அம்பாளின் திருவுருவம் அட்சகந்தங்கள் என்னும் மூலிகை கலவைகளால் ஆனது. இதன் காரணமாக ஆடிப்பூரம், நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் மட்டுமே அம்மனுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற தினங்களில் அம்பாளின் திருவடிகளுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாளின் திருவுருவம் மருத்துவப் பொருட்களால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்த தீர்த்தத்தை பக்தர்கள் அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
நெல்லை, காந்திமதியம்மை கோயிலில் வேறு எந்த அம்மன் கோயிலிலும் இல்லாதபடி ஆடிப்பூர உத்ஸவத்தில் நான்காம் திருநாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறுகிறது. இதை நடத்துபவர்கள் உள்ளூர் நாதஸ்வர கலைஞர்கள். இந்த வைபவத்தின்போது பயறு வகைகளை ஊறப்போட்டு அம்மனின் வயிற்றில் கட்டப்படும். அப்போது ஒரு கர்ப்பிணிப் பெண் போல அம்மன் காட்சியளிப்பார்.
ஆடி வெள்ளிகளில் புதிய பட்டு உடுத்தி, சந்தனம், ஜவ்வாது பூசி, தலையலங்காரம் செய்து, மாலை அணிந்து, தங்கநகைகள் ஜொலிக்க விளங்குவாள். அப்போது அனைத்து பழ வகைகளும், பிரசாதங்களும் நைவேத்தியமாக இவளுக்குப் படைக்கப்படும். ஆடி மாத வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் அளிக்கப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால், பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
சேலம், குகை ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன் கோயிலில் ஆடி திருவிழா 24 நாட்கள் நடைபெறும். இதில் ஒரு பகுதியாக நடைபெறும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி 100 வருடங்களுக்கு மேலாக மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கி வருகிறது. இந்தியாவிலேயே இங்கு மட்டுமே வண்டி வேடிக்கை வேண்டுதல் நிறைவேற நடத்தப்படுகிறது. இதில் கண்ணைக் கவரும் வண்ண மின்விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் கடவுள் வேடமணிந்தவர்கள், மக்கள் கூட்டத்தில் வலம் வந்து ஆசி வழங்குவதுதான், வண்டி வேடிக்கை விழாவின் சிறப்பம்சம். திருவிழாவின்போது பக்தர்கள் நோன்பு இருந்து கடவுள் உருவங்களைத் தரித்து, வண்ண வண்டிகளில் வலம் வருவர்.
பெரும்பாலும் புராணக் கதைகளில் வரும் நிகழ்வுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். பெண்கள் இந்நிகழ்வில் பங்கு பெறுவதில்லை. ஆண்களே பெண் வேடமிட்டு வருவர். அலங்கார வண்டிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குகை கோயிலை 3 முறை சுற்றி செல்லும். குகை மாரியம்மன் கோயிலில் நடைபெறும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
திருச்சியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் ஜம்புலிங்கப் பெருமானுக்கு வலதுபுறத்தின் தனி சன்னிதியில் உமையவள் அகிலாண்டேஸ்வரி அருள்பாலிக்கிறார். அதுவும் கன்னியாக, இங்கு அன்னை அகிலாண்டேஸ்வரி காலையில் மகாலட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறார். இங்கு ஆடி வெள்ளி அன்று மட்டும் அம்மன் சன்னிதி விடிய விடிய திறந்தே இருக்கும். வேறு எங்கும் காண முடியாதபடி இந்த அம்மனின் ஒவ்வொரு காதிலும் இரண்டு தோடுகள் இருக்கும்.
தஞ்சையிலிருந்து, தஞ்சை - திருச்சி சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடி சாலையில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம் ஏகெளரியம்மன் கோயில். இங்கு அம்மன் எட்டுத் திருக்கரங்களுடன் பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இந்த அம்மன் ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த இரு திருமுகங்களுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. அசுர குணம் கொண்டவர்களை அழிக்க ஆக்ரோஷத்துடன் ஒரு முகமும், அல்லல்பட்டு வரும் அடியவர்களின் துயர் தீர்க்க சாந்தமுடன் இன்னொரு முகமும் அமைந்துள்ளதாக ஐதீகம். இப்படி இரு திருமுகங்களுடன் அமைந்த அம்மனைக் காண்பது அரிது.
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் திருநாகேஸ்வரம் திருத்தலத்திற்கு முன்னால் உள்ளது சீனிவாச நல்லூர். இவ்வூரில் அமர்ந்து சிறப்பாக அருள்பாலிக்கிறாள் தலைவெட்டி மாரியம்மன். ஊர் மக்கள் பல வருடங்களுக்கு முன்பு வயல்வெளியில் தலையில்லாத மாரியம்மன் சிலையை கண்டு எடுத்திருக்கிறார்கள். ‘உருவமற்ற இறைவிக்கு தலையில்லாமல் இருப்பது குறையல்ல' என்று கருதி ஊர் மக்கள் உடனே ஆலயம் எழுப்பி விட்டார்கள்.
பெரும் சக்தி வாய்ந்த கடவுளாக இவ்வூர் மக்களால் வழிபடப்பெறுகிறாள் தலைவெட்டி மாரியம்மன். ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போக வேண்டும்' என்றால் தலைவெட்டி மாரியம்மனை வழிபட வேண்டுமாம். ‘நினைத்ததை நடத்திக்கொடுப்பாள் இந்த தலை வெட்டி மாரியம்மன்’ என்கிறார்கள் பக்தர்கள்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், காளியின் அம்சமாகவும் கனக துர்கையின் வடிவமாகவும் அமர்ந்திருக்கும் தேவி இவள். இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு தியான கோலத்தில் அமர்ந்தவாறு அருளும் அம்மனின் ஒவ்வொரு விசேஷ தினங்களிலும் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருவார். தாமிரத்தால் கம்பத்தடி கொண்ட அம்மன் இவர் மட்டுமே. தசாவதாரம் காணும் ஒரே அம்மன். அதேபோல், தெப்பத் திருவிழாவில் சயன கோலத்தில் பவனி வரும் ஒரே அம்மனும் இவர்தான். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய நாட்களிலும் அக்டோபர் மாதம் 2, 3, 4 ஆகிய நாட்களிலும் காலை 6.20 முதல் 6.40 மணி வரை சூரியனின் செங்கதிர்கள் மாரியம்மனின் திருமுடி மீது பட்டு கீழிறங்கி திருமுகத்தில் பணிவது சிலிர்க்க வைக்கும் ஒரு திருக்காட்சியாகும்.