கவிதை: மொகரம் திருநாள்: மதங்களைக் கடந்த மனிதநேயமும் கர்பலா தியாகத்தின் வரலாறும்!

கவிதை!
Muharram History - மொகரம் திருநாள்
Muharram History - மொகரம் திருநாள்
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

னம் மதம் மொழிகளைத்தாண்டி

இருப்பிடம் நாடு இவற்றையும்தாண்டி

உலக அளவில் உயர்ந்தோராக

உத்தம மக்களின் உள்ளங்களிலென்றும் 

திடமாய்ப் படிந்தோர் தியாகம்புரிந்தோரே!

தியாகங்கள் பலதையும் நினைவுகூரும் 

நல்லநாளே மொகரம் திருநாளாம்!

இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும்

இறையின் பெயரால் ஒவ்வோராண்டும் 

முதல் மாதமாம் முஹர்ரத்தின் 

முத்தாய்த் தோன்றும் பத்தாம் நாளில் 

தியாக சீலர்களின் நினைவையேற்று

தியான தான தர்மங்களை

உலகுக்கு அளிக்கும் உத்தமநாளிது!

இமாம் ஹூசைன் அவரது குடும்பம் 

கர்பலாபோரில்  உயிர்த் தியாகமேற்க…

எகிப்திய ப்ரோனின் இடர்ப்பாட்டிலிருந்து 

மூசாவும் மக்களும் முழுதாய்ப்பெற்ற

சுதந்திரம், துக்கம் கலந்தநாளிது!

பாரினில் என்றும் பகைமையொழிந்து

பவித்திர அன்பு நிலைத்திடவேண்டி

முஸ்லிம் நண்பர்கள் நிகழ்த்துமிந்த 

மொகரம் பண்டிகை சிறந்திடவேண்டும்!

அல்லா இயேசு அறங்காக்கும் சிவனும் 

போதிப்பதெல்லாம் புனித அன்பே!

வெளியில் மக்களின் நிறம் மாறினாலும்

உள்ளோடும் ரத்தம் உலகில் சிவப்பே!

ஆதாம் ஏவாள் முன்னோரென்றால்

அகிலத்தில் நாமும் ஒரு குடும்பந்தானே?

எல்லா மக்களின் இதயந்தன்னிலும் 

இனிய அன்பு வழிந்தோடிடட்டும்!

நிலைத்த நிம்மதி பெருகிடவேண்டும்

நித்தமும் அதுவும் வளர்ந்திடவேண்டும்!

அத்தனை போரும் நின்றுபோகவே

ஆண்டவர் அல்லா வழிகோலட்டும்!

அமைதியும் சமாதானமும் நிலைபெற்றிடவே

அன்பர்கள் நடத்தும் இத்திருநாளில் 

கைகோர்த்து நாமும் நின்றிடுவோமே

கடமை இதுவென உணர்ந்திடுவோமே!

பணம் பொருள்கூட பாதகம் செய்யும் 

பாசம் என்றும் உயரவே செய்யும்!

உயர்ச்சிதானே வாழ்வின் நாடி

உலக அன்பே அதன் உயிர்நாடி!

logo
Kalki Online
kalkionline.com