கந்த சஷ்டி உத்ஸவம் தொடங்கி, நடைபெற்று வருகிறது. கந்த சஷ்டி என்றாலே நம் நினைவிற்கு வருவது திருச்செந்தூர் மட்டும்தான். ஏனென்றால், சிறப்பு வாய்ந்த சூர சம்ஹாரம் நிகழ்வு அங்குதான் நிகழ்கிறது. திருச்செந்தூர் கோயிலில் பல சிறப்புகள் உள்ளன. அதில் நம்மை வியக்க வைக்கும் பல ஆச்சரியத் தகவல்கள் நிறையவே உண்டு. கோயில் என்றால் ஒரு மூலவர், ஒரு உத்ஸவர்தான் இருப்பது வழக்கம். ஆனால், இக்கோயிலில் இரு மூலவர் மற்றும் ஐந்து உத்ஸவர் இருப்பது சிறப்பு அம்சமாகும். அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் ஒரே தெய்வமான முருகப்பெருமான் இரண்டு பெயர்களில் மூலவராக அருள்பாலிக்கிறார். கிழக்கே பார்த்து அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமியும், தெற்கே பார்த்து அருள்பாலிக்கும் சண்முகரும் திருச்செந்தூர் கோயிலின் மூலவர்கள் ஆவர். இதில் சுப்பிரமணிய சுவாமி தவக்கோலத்தில் கையில் உத்ராட்ச மாலையுடன் காட்சி தருகிறார். வள்ளி - தெய்வானை சமேதராக சண்முகர் காட்சி அளிக்கிறார். ஆறுமுகப்பெருமான் பன்னிரண்டு கரங்களுடன் தோற்றம் அளிக்கிறார்.
மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு கேரள முறைப்படி, 9 கால பூஜை செய்யப்படுகிறது. அவர் துறவுக் கோலத்தில் இருப்பதால் அவருக்குப் படைக்கும் உணவில் உப்பு, புளி, காரம் சேர்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் சர்க்கரை பொங்கல்தான் நிவேதனமாக படைக்கப்படுகிறது. சுத்தான்னமும், உப்பில்லாக் காய்களும் படைக்கப்படும். அவர் தினமும் பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை செய்வதாகக் கூறப்படுகிறது.
சண்முகர் இல்லறக் கோலத்தில் இருப்பதால் அவருக்கு அனைத்து வகைச் சோறுகளும், பல வகைப் பலகாரங்களும் படைக்கப்படுகின்றன. ஆறுமுகப் பெருமானுக்கு அர்ச்சனை முடிந்ததும் சுவாமிக்கு பால் பாயசம், தேங்காய்ச் சோறு, புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் ஆகியவை இடம் பெறும். மேலும், சண்முகருக்கு தோசையும், பாசிப் பருப்பு கஞ்சியும் நாகர்கோவில் கோட்டாறு செட்டியார் முறைப்படி நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.
திருச்செந்தூர் கோயிலில் ஐந்து உத்ஸவ மூர்த்திகள் உள்ளனர். சண்முகர், ஜயந்திநாதர், குமரவிடங்க பெருமான், அலைவாய் உகந்த பெருமான், நடராஜர் ஆகியோர் உத்ஸவ மூர்த்திகள் ஆவர். அலைவாய் உகந்த பெருமான் மூலவரான சுப்பிரமணிய சுவாமியை நவராத்திரி விழா காலங்களில் 9 நாட்களும் அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடற்கரையாண்டி என்றும் இவரை பக்தர்கள் அழைக்கிறார்கள். கந்த சஷ்டி யாகசாலை முன்பு மூலவரான சுப்பிரமணியர், பாலசுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளிக்கிறார்.