

கதை 1:
எது வெற்றிடம்
துறவி ஒருவரிடம் ஒருவன் வந்து, தியானிக்கும் முறை பற்றி தான் கற்க விரும்புவதாக கூறினான். அதற்கு துறவி, "அது சுலபம்தான். ஆனால், அதற்கு முன்பு நீ வெற்றிடத்தை அடைய வேண்டும். அதுதான் மிகவும் கடினம்" என்று கூறி அவனை அனுப்பினார்.
சில மாதங்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு மனதை வெற்றிடமாக்குவதில் ஓரளவு தேர்ச்சி பெற்று, மீண்டும் அத்துறவியிடம் வந்தான் அவன்.
குருவே, "நான் வெற்றிடத்தை அடைந்து விட்டேன்" என்றான் பெருமையுடன். துறவி புன்னகைத்துக் கொண்டே கூறினார், "இல்லை. ஒருவன் உண்மையிலேயே வெற்றிடத்தை அடைந்து விட்டானானால், அடைந்து விட்டேன் என்று கூற மாட்டான். வெற்றிடமாகவே ஆகிவிடுவான்" என்றார். அவன் தலை குனிந்து நின்றான்.
கதை 2:
ஏன் புகழ வேண்டும்..?
ஒரு பணக்காரன் ஒரு துறவியை சந்தித்து, "சுவாமி என்னிடம் 100 தங்க கட்டிகள் உள்ளன. அவற்றில் பத்து தங்க கட்டிகளை உமக்குத் தருகிறேன். என்னை புகழ்ந்து பேசி என் பெயரை பிரபலப்படுத்துவீரா?" என்று கேட்டான்.
அதற்கு துறவி, "வெறும் பத்து தங்க கட்டிகளுக்காக உம்மைப் புகழ வேண்டுமா?" என்று கேட்டார். "அப்படியானால் 50 தங்கக் கட்டிகள் தருகிறேன். சம்மதமா?" கேட்டான் அந்த பணக்காரன்.
"என்னிடம் 50 தங்கக் கட்டிகளும், உன்னிடம் 50 தங்கக் கட்டிகளும் இருந்தால் நாம் இருவரும் சம அந்தஸ்து உள்ளவர்களாக ஆகி விடுவோம். அப்போது உன்னை எப்படி நான் புகழ முடியும்?" கூறினார் துறவி.
"சரி, என்னிடம் இருக்கின்ற 100 தங்கக் கட்டிகளையும் உமக்கே தந்து விடுகிறேன். அப்போதாவது என்னைப் புகழ்வீரா?" சலிப்புடன் கேட்டான் பணக்காரன்.
"அவ்வளவு தங்கம் என்னிடம் இருந்தால் நான் ஏன் உன்னை புகழ வேண்டும்? நீ அல்லவா என்னைப் புகழ வேண்டி இருக்கும்!" என்றார் துறவி சிரித்துக் கொண்டே.
பணத்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த அந்தப் பணக்காரனின் கர்வம் நீங்கியது.