
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகில் இருப்பது தான் தோரண மலை. இம்மலை மேற்குத்தொடர்சி மலையில் முதல் மலையாகவும், தோரண வாயிலாகவும் இருப்பதால் இந்த மலைக்கு தோரணமலை என்ற பெயரும் வந்தது.
கைலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவி அவர்களின் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதை சமன் படுத்துவதற்காக அகத்தியர் சிவபெருமானின் கட்டளையை ஏற்று பொதிகை மலை நோக்கி செல்கிறார். அவ்வாறு பொதிகை மலை போகும் வழியிலே சிலக்காலம் அகத்தியர் இந்த தோரணமலையில் தங்கியிருந்தார்.
இங்கே அகத்தியரின் தலைமையில் பல சித்தர்கள் இந்த மலையில் இருந்த மூலிகைகளைப் பயன்படுத்தி மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார்கள். அதுமட்டுமின்றி அகத்தியர் இங்கே பெரிய மருத்துவ சாலையை நிறுவி மக்கள் பலருக்கு மருத்துவம் பார்த்த சான்றுகளும் இருக்கின்றன.
அகத்தியரின் சீடரான தேரையர் ஜீவசமாதி அடைந்த இடமும் தோரணமலை தான். இந்த மலையின் உச்சியில் ஒரு குகைக்கோவில் இருக்கிறது. இங்கே அகத்தியர் பிரதிஷ்ட்டை செய்த முருகப்பெருமானை தரிசிச்கலாம். தோரணமலையில் இருந்து வரும் மூலிகைக் காற்றை சுவாசித்தால், நம் உடலில் இருக்கும் நோய் அனைத்தும் போய்விடும். முருகப்பெருமானை தரிசித்தால் நம் மனக்குறைகள் அனைத்தும் காற்றோடு காற்றாய் பறந்துப் போய்விடும்.
இக்கோவில் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல சுமார் 1193 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். இக்கோவிலில் சித்தர்களின் அதிர்வலைகள் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இக்கோவிலில் நடக்கும் வருண கலச பூஜை சிறப்பு வாய்ந்ததாகும். தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இந்தப் பூஜை நடைப்பெறும். விவசாயிகளின் வாழ்வு செழிக்கவும், உழவர்கள் வாழ்வில் ஏற்றம் பெறவும் இந்த வருண கலச பூஜை நடைப்பெறுகிறது.
அதைப்போலவே தைப்பூசத்திருவிழாவும் இக்கோவிலில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. பக்தக்கள் காவடியெடுத்தும், பாதையாத்திரையாக வந்தும் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இக்கோவிலில் திருவண்ணாமலையில் நடப்பதுப்போல பௌர்ணமியன்று கிரிவலம் நடைப்பெறும். கிரிவலப் பாதை 6 1/2 கிலோ மீட்டர் சுற்றளவுக் கொண்டது. இந்த கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொள்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்தக் கோவிலுக்கு வாழ்வில் ஒருமுறையாது சென்று முருகப்பெருமானை தரிசிப்பது நன்மையைத் தரும்.