திருப்பதியில் பெருமாளுக்கு பிரம்மனால் நடத்தப்படும் உற்சவம்தான் பிரமோற்சவம் ஆகும். ஸ்ரீவாரி பிரமோற்சவத்தை, ‘வெங்கடேஸ்வரா நவராத்திரி பிரமோற்சவம்’ என்றும் கூறுவார்கள். இந்த விழாவை திருப்பதியில் வெகுவிமர்சியாக கொண்டாடுவார்கள். உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவைக்காண திருப்பதி கோவிலில் கூடுவார்கள்.
வெங்கடேஸ்வரரின் உற்சவ மூர்த்தி மற்றும் அவரது மனைவியரான ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் பல வாகனங்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். திருமாலின் புராணத்தின்படி, பிரம்மாவே பூமிக்கு இறங்கி வந்து இந்த விழாவை நடத்துகிறார்.
ஒன்பது நாட்களுக்கு நடைப்பெறும் இந்த விழாவின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் கருடக்கொடியை ஏற்றுவது துவஜாரோகணம் ஆகும். இறுதிநாள் வெங்கடேஸ்வரரின் பிறந்த நட்சத்திரத்தை நினைவுக் கூறும் சுதர்சனச்சக்கரம் பக்தர்களுடன் கோவில் குளத்தில் நீராடப்படுகிறது. துவஜாரோகணம் கருடன்கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
ஒருமுறை பிருகு முனிவர் திருமாலை சந்திப்பதற்காக வைகுண்டம் போகிறார். முனிவர் வந்தது தெரியாமல் படுத்திருந்த பெருமாளின் மார்பில் தன் காலால் எட்டி உதைக்கிறார் பிருகு முனிவர். ஆனால், பெருமாள் கொஞ்சம் கூட கோபம் கொள்ளாமல், 'ஐய்யோ! உங்கள் பாதம் வலிக்குமே' என்று பிருகு முனிவரிடம் கேட்கிறார். பிருகு முனிவர் தன்னுடைய செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கிறார். பெருமாளும் அதை மன்னித்துவிடுகிறார். ஆனால், பெருமாளின் மார்பில் குடியிருக்கும் மகாலக்ஷ்மி கடும் கோபம் கொள்கிறார்.
ஒரு முனிவர் உங்கள் மார்பில் குடியிருக்கும் என்னையே எட்டி உதைக்கிறார். அதை தண்டிக்காமல் நீங்கள் மன்னித்துவிடுகிறீர்களே? என்று கோவித்துக்கொண்டு வைகுண்டத்திலிருந்து பூலோகத்திற்கு வந்துவிடுகிறார் மகாலக்ஷ்மி.
திருமகளை திருப்பி வைகுண்டத்திற்கு கூட்டிச் செல்வதற்காக திருமலைக்கு வருகிறார் பெருமாள். கலியுகத்தில் பக்தர்களின் இன்னல்களை போக்குவதற்காக திருமலையில் கோவில் கொள்கிறார். இதைக் கொண்டாடுவதற்காக பிரம்ம தேவனால் நடத்தப்பட்ட உற்சவம்தான் பிரமோற்சவமாகும்.
படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மதேவன் தன் படைப்புகளில் உருவான அனைத்து உயிர்களும் நலமாகவும், வளமாகவும் வாழ்வதற்காக பிரம்மனால் நடத்தப்படும் விழாவே பிரமோற்சவமாகும். இந்த வருடம் பிரமோற்சவம் அக்டோபர் 4 தொடங்கி அக்டோபர் 12 நிறைவடைகிறது. பெருமாள் திருமலையில் அவதரித்தது புரட்டாசி மாதம். அதனால்தான் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் வெகுவிமர்சியாக கொண்டாடப் படுகிறது.