ஆன்மிகத்தில் குறிப்பிடப்படும் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களைக் கடந்து அல்லது தவிர்த்து ஒரு மனிதன் வாழ்க்கையை நகர்த்த முடியாது. சூரபன்மன் காமத்தால் அழிந்தான், சிங்கமுகன் கன்மத்தால் அழிந்தான், தாரகன் மாயையால் அழிந்தான் என பெரியவர் சங்கராச்சாரியார் விளக்கியுள்ளார். சிவபெருமான் கையில் இருக்கும் திரிசூலம் இந்த மும்மலங்களையே குறிக்கிறது. சிவபெருமான் முப்புரம் எரித்தார் என்பதும் இதையேதான் குறிக்கிறது.
‘முருகா’ எனும் சொல்லுக்குள் முப்பெரும் தெய்வங்களையும் தனக்குள் அடக்கியுள்ளவர் என்று பொருள். ஞானக் கடவுளான முருகன் அசுரனான சூரபத்மனை வதம் செய்ததை அறிவோம். இந்த வதம் நடைபெற்ற மூன்று தலங்களில் எந்தெந்த மலங்கள் அகற்றினார் என்பதைப் பார்ப்போம்.
மாயை: முருகப்பெருமான் சூரபத்மனுடன் நீரில் போரிட்ட இடம் திருச்செந்தூர். இங்குள்ள முருகப்பெருமான் சூரபத்மனுடனான போரில் எதிரியின் படையை கொன்ற பாவத்தைப் போக்க சிவபெருமானை மலர்களால் வழிபடுகிறார். இங்கு முருகப்பெருமான் சூரபத்மனை வென்றதை நினைவு கூறும் வகையில் கந்த சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மாயையின் திரையை முருகப்பெருமான் நீக்கியதாக ஐதீகம்.
மாயை என்பது உயிர்களின் நுகர்ச்சிக்குத் தேவையானவற்றைப் படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது ஆகும். உடல், உலகு மற்றும் உலகில் காணும் எல்லாப் பொருட்களையுமே மாயையைக் கொண்டே இறைவன் படைக்கிறான். இது உயிர்களுக்குப் பகையாகக் கருதப்பட்டாலும், ஆணவத்தின் பீடிப்பினால் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ள அறிவைச் சிறிதளவு வெளிப்படுத்த உதவுவது இம் மாயை என்று சொல்லப்படுகின்றது. சூரியன் இல்லாத இருட்டில் வழிகாட்டும் சிறிய விளக்கின் ஒளியைப் போல் எனலாம்.
கன்மம்: முருகப்பெருமான் நிலத்தில் அசுரர்களுடன் போரிட்ட இடம் திருப்பரங்குன்றம். இது ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இது 'அறுபடைவீடு' எனப்படும் முருகப்பெருமானின் ஆறு முக்கிய தலங்களில் ஒன்றாகும். முருகப்பெருமான் இங்கு கன்மம் எனும் திரையை நீக்கியதாக ஐதீகம்.
கன்மம் என்பது அவரவர் செய்யும் வினைகளின் பயன் ஆகும். இதனை வினை என்றும் அழைப்பர். செய்யும் வினைக்கேற்ப பலனை அவற்றைச் செய்யும் உயிர்கள் அடைந்தே ஆகவேண்டியுள்ளது. இப்பலன்களை நுகர்வதற்காக உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. உயிர்கள் மீண்டும் பிறக்கும்போது, அவற்றுக்குரிய பலன்களை இறைவன் அவற்றிடம் சேர்க்கிறான் என்கின்றன நெறிகள்.
ஆணவம்: முருகப்பெருமான் ஆகாயத்தில் அசுரர்களுடன் போரிட்ட இடம் திருப்போரூர். எனவே இது ‘போரூர்’ அல்லது போர் நடந்த இடம் என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் உள் பிராகாரத்தில் மயில் வாகனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் சூரசம்ஹார கோலத்தில் முருகப்பெருமானின் அழகிய திருவுருவச் சிலை உள்ளது. முருகப்பெருமான் இங்கு ஆணவம் அல்லது அகங்காரம் என்ற திரையை நீக்கியதாகக் கூறப்படுகிறது.
ஆணவம் இரு வகைகளில் உயிர்களைப் பாதிக்கின்றது. உயிரின் அறிவை முற்றாக மறைத்து, அவற்றின் அறிவைக் கீழ் நிலைக்குக் கொண்டு செல்வது. உயிர்கள் உண்மையையும் பொய்யையும் பகுத்துணராது மயங்கும் நிலைக்குக் காரணம் இதுவே என்கிறது சைவ சித்தாந்தம்.
மேற்சொன்ன இம்மூன்றிலிருந்தும் விடுபட்டு நல்வாழ்வு பெற முருகன் குடியிருக்கும் இத்தலங்களை நாடி வழிபடுவோம்.